தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழாத சங்கராச்சாரியார் விஜயேந்திரருக்கு குவியும் எதிர்ப்பு

காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது எழுந்து நிற்காமல் தமிழ் மொழியை அவமதித்துவிட்டதாக பலரும் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், ட்விட்டரில் #Tamil_Insulted என்ற ஹேஷ் டேக் வைரலாகி வருகிறது.

நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சென்னையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் தந்தை பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் காஞ்சி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் உள்ளிட்டோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழா தொடங்கியவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, மேடையில் அமர்ந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் எழுந்த நின்று மரியாதை செலுத்திய நிலையில் இளைய மடாதிபதி விஜயேந்திரர் மட்டும் அமர்ந்தபடியே இருந்தார்.

இதுகுறித்த புகைப்படம் மற்றும் காணொளி இன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதையடுத்து விவகாரம் பூதாகரமானது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததால் எழுந்து நிற்கவில்லை என்று சங்கர மடத்தின் செய்தி தொடர்பாளர் இதற்கு விளக்கம் கொடுத்திருந்தார்.

ஆனாலும் சமூக ஊடகமான ட்விட்டரில், விஜயேந்திரருக்கு எதிராக ##Tamil_Insulted என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி வருகிறது. ட்விட்டர்வாசிகளின் சில கருத்துகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :