ஆரஞ்சு நிறமாக மாறப்போகும் 'பாஸ்போர்ட்': காரணம் என்ன?

பாஸ்போர்ட்டின் நிறம் மாறப்போவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பாஸ்போர்ட்டின் வண்ணத்தை மாற்றுவது உட்பட பாஸ்போர்ட் வழங்குவதற்கான விதிகளில் பல மாறுதல்களை செய்துள்ளது இந்திய வெளியுறவு அமைச்சகம்.

இந்தியாவில் இதுவரை கருநீல வண்ணம் கொண்ட பாஸ்போர்ட் மட்டுமே வழங்கப்பட்டது, ஆனால் இனிமேல் சிலரது பாஸ்போர்ட்கள் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

ஆரஞ்சு நிற பாஸ்போர்ட் யாருக்கு கொடுக்கப்படும்?

பாஸ்போர்ட்டின் வண்ணம் ஈ.சி.ஆர் நிலைப்பாட்டை (ECR) சார்ந்தது. இ.சி.ஆர். தகுதி கொண்ட பாஸ்போர்ட்கள் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும், ஆனால் இ.என்.சி.ஆர் (ECNR) நிலையை உடையவர்களுக்கு நீல நிற பாஸ்போர்ட் வழங்கப்படும்.

பாஸ்போர்ட்டின் நிறம் மாறப்போவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இ.சி.ஆர். தகுதி என்றால் என்ன?

குடியேற்றச் சட்டம் 1983இன்படி பிற நாடுகளுக்கு செல்ல சில பிரிவினர் குடியேற்ற அனுமதி பெற வேண்டும்.

இனிமேல் இரண்டு வகையான பாஸ்போர்ட் வழங்கப்படும். குடியேற்ற சோதனை தேவைப்படும் இ.சி.ஆர் பாஸ்போர்ட் (ECR, Emigration Check Required), மற்றும் குடியேற்ற சோதனை தேவைப்படாத இ.சி.என்.ஆர் (ECNR, Emigration Check not Required).

பாஸ்போர்ட்டின் நிறம் மாறப்போவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

சட்டத்தின்படி, குடியேற்றம் என்பது இந்தியாவை விட்டு வெளியேறி, தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளில் ஒன்றுக்கு வேலைவாய்ப்புக்காக செல்வது.

இந்த நாடுகளில் ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், புருணை, குவைத்,இந்தோனீசியா , ஜோர்டான், லெபனான், லிபியா, மலேசியா, ஓமன், கத்தார், சூடான், செளதி அரேபியா, சிரியா, தாய்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை அடங்கும்.

விதிகள் படி, இ.சி.என்.ஆர் பாஸ்போர்ட் பெற தகுதியுடையவர்கள் 14 பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். உதாரணமாக 18 வயதிற்கும் குறைவானவர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், இ.சி.என்.ஆர் பாஸ்போர்ட் பெற தகுதியுடையவர்கள்.

அதேபோல், பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் இந்த பிரிவில் வருவார்கள்.

பாஸ்போர்ட்டின் நிறம் மாறப்போவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இ.சி.ஆர். பிரிவை இப்போது ஏன் அரசு அமல்படுத்துகிறது?

குறைந்த கல்வி பயின்றவர்கள், திறன் குறைந்தவர்கள் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் நலிந்தவர்களுக்கு உதவி செய்வதற்காகவே அரசு இந்த புதிய முறையை அமல்படுத்தப்படுகிறது. இதனால் அவர்கள் பிற நாடுகளிலும், அதன் சட்டங்களாலும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய தேவையிருக்காது.

இ.சி.ஆர் எப்படி அச்சிடப்பட்டிருக்கும்?

2007 ஜனவரிக்குப் பின் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்களின் கடைசி பக்கத்தில் இ.சி.ஆர் என்று எழுதப்பட்டிருக்கும். இ.சி.என்.ஆர் வகையின்கீழ் வரும் பாஸ்போர்ட்டில் தனியாக எதுவும் குறிப்பிடப்பட்டிருக்காது.

புதிய விதிகளின் கீழ், இ.சி.ஆர் பாஸ்போர்ட் ஆரஞ்சு வண்ணத்திற்கு மாற்றப்படும். இது குடியேற்ற சோதனைகளின் செயல்முறையை எளிதாக்குகிறது என்பதோடு, இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் அதைப்பெறுவது சுலபம்.

பாஸ்போர்ட்டின் நிறம் மாறப்போவது ஏன்?

பட மூலாதாரம், Office of RG/Twitter

இருப்பினும், புதிய பாஸ்போர்ட் பாகுபாட்டை அதிகரிக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். பாஸ்போர்ட்டின் வண்ணம் மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், "வெளிநாடுவாழ் இந்தியர்களை இரண்டாம் தர மக்களாக நடத்துவது சரியானது அல்ல, இது பாரதிய ஜனதா கட்சியின் பாகுபாடு காட்டும் மனோபாவத்தை பிரதிபலிக்கிறது" என்று சாடியிருக்கிறார்.

பாஸ்போர்டில் வேறு என்ன மாற்றங்கள் வரும்?

பாஸ்போர்ட்டின் கடைசிப் பக்கத்தில், பெற்றோர் அல்லது கணவர் மனைவியின் பெயர் மற்றும் முகவரி இனிமேல் குறிப்பிடப்படாது என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆனால் இனிமேல் பாஸ்போர்டை ஒரு அடையாள அட்டையாக நீங்கள் பயன்படுத்த முடியாது என்பது பிரச்சனையாக உருவாகலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :