கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கப் பிரிவு சோதனை

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்திவருகிறது.

கார்த்தி பி சிதம்பரம்

பட மூலாதாரம், KARTI P CHIDAMBARAM FACEBOOK

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு தொடர்பாக சென்னையிலும் தில்லியிலும் உள்ள இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

இதற்கு முன்பாக கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று இதே போன்ற சோதனைகள் நடந்தன. அதன் தொடர்ச்சியாகவே இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ப. சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில், 2006ஆம் ஆண்டில் ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அளித்த ஒப்புதல் தொடர்பாக அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகிறது.

நிதியமைச்சரைப் பொறுத்தவரை, 600 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் உண்டு; அதற்கு கூடுதலான மதிப்பு கொண்ட ஒப்பந்தங்களுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஆனால் 3,500 கோடி ரூபாய் முதலீடு தொடர்புடைய இந்தத் திட்டத்திற்கு நிதியமைச்சர் தானாகவே ஒப்புதல் அளித்ததாக அமலாக்கப் பிரிவு குற்றம்சாட்டுகிறது.

இந்த ஒப்புதலைப் பெற்றுத் தருவதற்காக கார்த்தி சிதம்பரம் 3.5 கோடி ரூபாய் பெற்றதாக அமலாக்கப் பிரிவு கூறுகிறது.

சிதம்பரம்

பட மூலாதாரம், PTI

சென்னை ஹடோஸ் சாலையில் உள்ள ப. சிதம்பரத்தின் இல்லம், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் ஆகியவற்றில் சோதனைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இந்த சோதனையில் இதுவரை ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லையென கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் அருண் தெரிவித்தார்.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப. சிதம்பரம், "பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் சோதனை நடத்த அமலாக்கப் பிரிவுக்கு எந்த அதிகாரமும் இல்லை" என்று தெரிவித்தார்.

இந்த சோதனையில் அவர்களுக்கு எந்த ஆவணமும் கிடைக்காததால், சில வருடங்களுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் தான் பேசிய உரைகளின் பிரதிகளை எடுத்துச் சென்றிருப்பதாகவும் சிதம்பரம் கூறினார்.

"சிபிஐயோ, வேறு எந்த அமைப்போ இது தொடர்பாக எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவுசெய்யப்படவில்லை. சென்னையில் இருக்கும் இல்லத்தைச் சோதனையிடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், தவறுதலாக தில்லியில் உள்ள ஜோர் பாக் இல்லத்திற்கு வந்த அதிகாரிகள், கார்த்தி சிதம்பரம் இந்த வீட்டில் வசிப்பதாக நினைத்துவிட்டோம் என்று கூறினார்கள்" என்றார் சிதம்பரம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :