You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்: 'அ' முதல் 'ஃ' வரை
கடந்த 2016 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 16 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு பதிவு செய்த சீராய்வு மனு ஒன்றை தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்பது குழப்பமாக இருந்தது.
உண்ணாவிரதப் போராட்டம்:
ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் தமிழகத்தில் ஆங்காங்கே அத்தடையை நீக்க பல போரட்டங்கள் நடைபெற தில்லி ஜந்தர் மந்தரில் ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கக் கோரி ஜல்லிக்கட்டு மீட்பிற்கான இயக்கம் என்ற 7 பேர் கொண்ட குழுவினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெரீனா போராட்டம்:
கடந்த ஜனவரி 8 ஆம் தேதி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்றும், இதனை நடத்த ஏதுவாக மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமென்றும் வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் பேரணியொன்றை நடத்தினர்.
இந்தியாவில் பீட்டா(PETA -People for the Ethical Treatment of Animals) செயல்பட தொடங்கிய பிறகு தான், நாட்டு மாடு மற்றும் காளை இனங்களின் அழிவு தொடங்கியது என்று சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் கார்த்திகேய சேனாபதி பிபிசி தமிழுக்கு பேட்டி அளித்திருந்தார்.
அவனியாபுரம்:
இதேவேளை மதுரையில் உள்ள அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கக்கோரி பொதுமக்கள் மற்றும் சில அமைப்பை சேர்ந்தவர்கள் தடையை மீறி பேரணி ஒன்றை நடத்தினர்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் காலை முதல் போராட்டங்கள் தொடங்கி நடைபெற்றன.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குக்காக காலை முதல் போராடி வந்தவர்களை கைதுசெய்து காவல்துறை அப்புறப்படுத்தியது. கைது செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை விடுவிக்க வேண்டுமெனக் கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை ராஜிவ் காந்தி சாலையில் தகவல் தொழில் நுட்ப துறை (ஐ.டி.) ஊழியர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், தான் தமிழக உணர்வுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
ஸ்தம்பித்த தமிழகம்:
தமிழகம் முழுவதும் நடந்த ஆதரவு போராட்டங்களால், மாநிலம் ஸ்தம்பித்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வலியுறுத்தி மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியிலும் கடைகள் அடைக்கப்பட்டன. தி.மு.க சார்பில் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி சென்னையில் மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற்ற நேரத்தில், சென்னை போராட்டத்தில் அதிகளவில் இளைஞர்கள் உள்ளதால், நகரத்தில் உள்ள கல்லூரிகளில் கால வரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தொடங்கிய ஜல்லிக்கட்டு ஆதரவு போரட்டம் உலகளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தது.
தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையிலும் தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோதியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து மனு அளித்தார்.
தமிழகத்தில் வரும் 2017ஆம் ஆண்டு, ஜனவரி 26 ஆம் தேதி முதல் பெரும்பாலான வணிகர்கள் அமெரிக்க குளிர்பானமான பெப்சி, கொக்கோ கோலா போன்றவற்றை விற்கமாட்டார்கள் என தமிழ் நாடு வணிகர் சங்கங்களில் பேரவை அறிவிப்பு வெளியிட்டது.
தலைவர்களின் கருத்து
தமிழர்களின் உயரிய கலாச்சாரம் மிகவும் பெருமைக்குரியது என்றும், மத்திய அரசு தமிழர்களின் கலாச்சார விருப்பங்களை காப்பதில் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி கருத்து தெரிவித்திருந்தார்.
ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்ல மது, ஊழல், நிர்வாக சீர்கேடு எதிராகவும் இளைஞர்கள் போராட வேண்டும் என்று பா.ம.க இளைஞரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.
ஜல்லிக்கட்டுக்கு இருக்கும் தடையை நீக்க அவசர ஆணை பிறப்பிக்கப்படும் என்று இந்திய சுற்றுச்சுழல் அமைச்சர் அனில் மாதவ் தவே உறுதியளித்தார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்கக்கோரயும்,பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்கக்கோரியும் லண்டனில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்றனர்.
ஆளுநர் ஒப்புதல்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் அளித்துவிட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.
தமிழக அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு அவசர சட்டமானது இன்னும் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என மாநிலம் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதேபோல, ஜல்லிக்கட்டு தொடர்பாக நிரந்தர தீர்வு வேண்டும் என்றும், தற்காலிக தீர்வில் தாங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அலங்காநல்லூரில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். எனவே, அலங்காநல்லூர் வாடிவாசலில் ஜல்லிக்கட்டை நடத்த முடியாது என்று போராட்டக்கரர்கள் தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், தங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை, போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.
தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கையில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டங்களில் சிலர் சமூகத்திற்கு விரோதமாக எதிராக நடந்து கொண்டார்கள் என்றும், இதனால் தான் மனதளவில் புண்பட்டு இருப்பதாகவும் ஹிப்ஹாப் தமிழன் என்று அறியப்படும் ஆதி ஒரு காணொளியில்கூறினார். மேலும், இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து தான் விலகுவதாகவும் அறிவித்தார்.
ஜல்லிக்கட்டுக்கான புதிய சட்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவோடு தமிழக சட்டசபையில் நிறைவேறியது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை போலிசாரால் அப்புறப்படுத்தப்பட்டக் கொண்டு இருந்த நேரத்தில், அங்கு நடைபெற்ற சம்பவங்கள், தனக்கு வேதனையளிப்பதாகவும், போராட்டக்காரர்கள் உடனடியாக அறவழிப் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறும் நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.
ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கலைக்க போலிசார் திங்கட்கிழமை காலைமுதல் முயன்று வந்த நிலையில், சென்னைக் கடற்கரையை ஒட்டியுள்ள பல பகுதிகளில் வன்செயல்கள் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் தெரிவித்தன. பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இப்போராட்ட நிகழ்வுகளால், சென்னை மாநகர போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற சில வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் அல்ல என்று நடிகர் லாரன்ஸ் விளக்கம் அளித்தார்.
போராட்டக்காரர்களை முதல்வர் சந்தித்திருக்கலாம் என்று நடிகர் கமல் கருத்து தெரிவித்தார்.
திருச்சி: ஜல்லிக்கட்டு போராட்டத்தை அமைதியாக முடிக்கச்செய்த போலீஸ் அதிகாரி
ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்தாலும், எஞ்சியிருந்த சிலர் இன்று சென்னை மெரினா கடற்கரையில் சில மணிநேரங்கள் இருந்து , பின்னர் போலிசாரின் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் திரும்பச் சென்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நிரந்தர சட்டம் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகக் கூறப்படுவது தொடர்பாகவும், ஊடகங்களில் வெளியானதாக சொல்லப்படும் காவல் துறையினரே குடிசைகளுக்கு தீ வைத்தது, வாகனங்களை கொளுத்தியது போன்ற நிகழ்வுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதிக்கும் வகையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் தேதி வெளியிட்ட அரசு அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டுமெனக் கோரி மாநிலம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் ஜனவரி 23 முடிவடைந்தபோது, சென்னையிலும், மாநிலத்தின் வேறு சில பகுதிகளிலும் காவல்துறை நடந்துகொண்ட விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உணர்வினை பிரதிபலிக்கும் வகையில் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்கள் 2017ஆம் ஆண்டின், மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய 21 லட்சம் கடைகளில் விற்பனை செய்யப்படாது என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில், தேசவிரோத சக்திகள் ஊடுருவி, பிரிவினைவாத எண்ணங்களைப் பரப்பி, வன்முறையைத் தூண்டிய காரணத்தால்தான் போலீசார் நடவடிக்கை எடுத்ததாக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் விளக்கமளித்துள்ளார். ஆனால், முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து, திமுகவினர் வெளிநடப்புச் செய்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :