'நீதிமன்ற அனுமதியின்றி போக்குவரத்து ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது'

சென்னை உயர் நீதிமன்றம்

தங்களின் அனுமதி இல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் ஊதிய உயர்வு பிரச்சனை தொடர்பாக தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து தமிழகம் முழுவதும் அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழக அரசு சுமூக தீர்வு ஏற்படுத்தக் கோரி வாராக்கி என்பவர் உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தொழிற்சங்கங்கள் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

சி ஐ டி யூ தொழிற்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இது முன்னறிவிப்பின்றி நடைபெறும் போராட்டம் அல்ல என்றும், உரிய ஊதிய உயர்வு வழங்க அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதால் கடந்த செப்டம்பர் மாதமே வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

உங்களுக்கு 600 ரூபாய் ஊதிய உயர்வு அளிக்கவில்லை என்பதற்காக பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாக்குவது சரியா என்று தொழிற்சங்கங்களுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

மேலும், போக்குவரத்து கழகத்தை சமாளிக்க முடியவில்லை என்றால், ஏன் அதனை தனியார்மையமாக்கக் கூடாது என்றும், அரசிடம் தலைமை நீதிபதி அமர்வு கேட்டது.

இந்நிலையில், தொழிலாளர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் அவர்களை பணி நீக்கம் செய்யலாம் என்ற உத்தரவை திருத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே, உயர்நீதிமன்ற அனுமதி இல்லாமல் அவர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி அமர்வு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், போராட்டத்திற்கு விதித்த தடையை நீக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன்கள் மற்றும் நிலுவைத் தொகை தொடர்பான வழக்கு, நீதிபதி மணிகுமார் அமர்வில் ஏற்கனவே விசாரணை நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கை அவர் அமர்வுக்கே தலைமை நீதிபதி அமர்வு மாற்றியுள்ளது.

பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜனவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக வருங்கால வைப்பு நிதியை தராமல் காலம் தாழ்த்துவது மற்றும் மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை செய்த அடிப்படை ஊதியத்தை வழங்கவேண்டும் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்கக் கோரி ஐந்தாவது நாளாக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :