You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஜினிகாந்த் கருணாநிதியை சந்தித்தது ஏன்? - ஸ்டாலின் பேட்டி
திமுக தலைவர் கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் இன்று (03-01-2017) சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கலைஞர் மற்றும் தயாளு அம்மாளைச் சந்தித்து அவர்களது உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விசாரித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து ரஜினி பேட்டியளிக்கையில் ''என்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றேன்'' என்றார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் '' தலைவர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் நேற்றைய தினம் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனுமதி கேட்டார். ஏற்கனவே, நான்கைந்து மாதங்களுக்கு முன்பாக திரு. ரஜினிகாந்த் அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். எனவே, இந்த சந்திப்பானது புதிதல்ல. ஆகவே, இதுவொரு அதிசயப்பட வேண்டிய, ஆச்சரியப்பட வேண்டிய ஒரு செய்தியல்ல.
எனவே, இங்கு வருகிறேன் என்று அவர் சொன்னதும், வருபவர்களை இன்முகத்தோடு வரவேற்பது தமிழர் பண்பாடு என்ற அடிப்படையில், அவரை நாங்கள் இன்முகத்தோடு வரவேற்றோம். அவரும் தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அதேபோல, என்னுடைய தாயார் தயாளு அம்மாள் அவர்களையும் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்'' என்றார் .
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து ஆசி பெற்றதாக பேட்டியளித்தது குறித்து பத்திரிகையாளர்கள் ஸ்டாலினிடம் கேட்டனர்,
'' இதேபோல, நடிகர் விஜயகாந்த் அவர்கள் புதிய கட்சி தொடங்கியபோதும் தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். எனவே, அரசியல் பண்பாடு மற்றும் அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில் தலைவர் கலைஞர் அவர்களும் அவரை இன்முகத்தோடு வாழ்த்தி இருக்கலாம். அதையே நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் சொல்லியிருப்பதாக நான் கருதுகிறேன்'' என்றார்.
நடிகர் ரஜினிகாந்த் ஆசி மட்டும் கேட்கிறாரா அல்லது திமுகவின் ஆதரவையும் கேட்கிறாரா? என செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு பதிலளித்த ஸ்டாலின் '' அப்படி அவர் கேட்பதானால், அதை ஏற்பதா இல்லையா என்பது தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால், ஆன்மிக அரசியலை நடத்தப் போவதாக அவர் தெளிவாக சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள திராவிட இயக்கத்தை அழித்து விட வேண்டும் என்று சிலர் திட்டமிட்டு, பலருடைய தூண்டுதலால் திரு. ரஜினிகாந்த் அவர்கள் கட்சி தொடங்கியிருப்பதாக ஒரு சித்திரத்தை, ஒரு உருவகத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் நான் தெளிவாக சொல்லிக் கொள்வது, தமிழ்நாட்டின் மண் திராவிட இயக்கத்தின் மண். தந்தை பெரியார் அவர்கள், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள், தலைவர் கலைஞர் அவர்கள் ஆகியோரால் பண்பட்டு இருக்கின்ற மண் இந்த மண். அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தை அழிப்பதற்கு யார் யாரோ இதற்கு முன் முயற்சித்துப் பார்த்து இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் கதைகள் எல்லாம் நாட்டுக்கே நன்கு தெரியும்'' எனக் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :