You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வட கொரியா - தென் கொரியா இடையே மீண்டும் ஹாட்லைன் வசதி திறப்பு
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வது குறித்த சாத்தியங்களை ஆலோசிப்பதற்காக தென் கொரியாவுடனான ஹாட்லைன் தொலைப்பேசி வசதி மீண்டும் நிறுவப்படும் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான யோன்ஹப், இன்று (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி 15.30 மணிக்கு இருநாடுகளுக்கு இடையேயான தொலைத்தொடர்புகள் மீண்டும் நிறுவப்படும் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொள்ள வட கொரியாவிலிருந்து ஒரு அணியை அனுப்புவதற்கு தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் தெரிவித்ததையடுத்து இந்த ஹாட் லைன் தொலைப்பேசி வசதி மீண்டும் நிறுவப்பட உள்ளது.
டிசம்பர் 2015 ஆம் ஆண்டிலிருந்து இருநாடுகளுக்கும் இடையே பெரியளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது இல்லை.
ஹாட்லைன் தொலைப்பேசி மீண்டும் நிறுவப்படுவது குறித்த அறிவிப்பை வட கொரிய அதிகாரி ஒருவர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அறிக்கையில் வாசித்தார்.
பிப்ரவரி மாதம் தென் கொரியாவின் பியோங்சங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வட கொரியாவிலிருந்து ஒரு குழுவை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் நடைமுறை சிக்கல்கள் குறித்து இருநாடுகளும் விவாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியா கலந்துகொள்வது வரவேற்கப்படுகிறது என்று முன்னர் தென் கொரியா தெரிவித்திருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :