You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஜினியின் அரசியல் பிரவேசம்: "கொள்கை இல்லா அரசியல் போராட்டம், அரசியல் இல்லா தனி மனித முன்னிருத்தல்"
அரசியலில் இறங்குவதாக ரஜினிகாந்த் அறிவிப்பு. ரஜினி சொல்வதைப் போல தூய்மையான அரசியலைக் கொண்டுவர முடியுமா? அல்லது ரஜினி கட்சி மற்ற கட்சிகளில் இருந்து மாறுபட்ட நிற்க வாய்ப்பில்லையா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
அதற்கு பிபிசி தமிழின் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் வாசகர்கள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்துத் தருகிறோம்.
"ரஜினி ஆன்மீக அரசியல் பேசியதன் மூலம் பின்னாலிருந்து ஒரு மதவாத சக்தி அவரை இயக்குகிறது என்பது தெளிவாக தெரிகிறது. அரசியல் கட்சி ஆரம்பிப்பது முக்கியமல்ல அதற்கான அரசியல் களப்பணி என்ன செய்தார் என்பதுதான் முக்கியம்" என்று பதிவிட்டுள்ளார் இராசேந்திர சோழன் என்ற நேயர்.
"மக்கள் நலனுக்காக உழைக்கும், போராடும் விளம்பரம் இல்லாத அரசியல் தலைவர், சமூகநல, இயற்கை ஆர்வலர் போன்றோரால் மட்டுமே மக்களுக்கான நேர்மையான மாற்று அரசியலைத் தமிழகத்தில் அமைக்க முடியும். மக்களுக்காகக் குரல் கொடுக்காமல், களத்தில் நின்று போராடாமல் நடிகர் என்ற தகுதியின் அடிப்படையில் எவரேனும் ஒருவர் துவங்கும் அரசியல் கட்சிகளால் மக்களிடையே ஒரு பிரிவினையை உருவாக்கி வாக்கு வங்கியைப் பிரிக்க உதவுமே ஒழிய மாற்றம் ஒருபோதும் மலராது" என்று கருத்துத் தெரிவித்துள்ளார் சக்தி சரவணன்.
"உயர்ந்த எண்ணம்தான், அவர் மட்டும் தூய்மையாய் இருந்தால் போதாது, அவரை சார்ந்தவர்களும் தூய்மையாய் இருக்க வேண்டும்.குறைந்தது கெஜ்ரிவால் ஆட்சியையாவது நாம் எதிர்பார்க்கிறோம். பொறுத்திருந்து பார்ப்போம்" என்று கருத்தோடு எதிர்பார்ப்பையும் பதிவு செய்துள்ளார் சரோஜா என்ற முகநூல் பயனர்.
"ரஜினி ஒரு பொம்மைதான். பொம்மையை இயக்கும் சாவி கார்பரேட் காவிகளிடம் உள்ளது. விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், ராஜேந்தர் ஆகியோர் வரிசையில் விரைவில் இணைந்து விடுவார்" என்று கூறியுள்ளார் மாரியப்பன் என்ற நேயர்.
"முடியாது என்று எதுவுமில்லை. அப்படி நம் முன்னோர்கள் நினைத்திருந்தால் சுதந்திர போராட்டமும் அதன் பயனான விடுதலையும் கிடைத்திருக்காது. வாய்ப்பு கொடுக்காமல் குறை சொல்லக்கூடாது. ஏனென்றால் தற்போது உள்ள அரசியல்வாதிகள் ஒன்றும் புனிதர்கள் அல்ல. புதியவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்" என்று முகநூலில் பதிவிட்டுள்ளார் மணி என்ற நேயர்.
"நடிப்பு துறையில் இருந்தபோது சக கலைஞர்களுக்கு இவர் என்ன செய்தார்? அரசியலில் வந்து இவரால் எதையும் சாதிக்க முடியாது. இவர் பேச்சில் இவருக்கே நம்பிக்கை கிடையாது" என்று கருத்துத் தெரிவித்துள்ளார் பாஷா என்ற முகநூல் பயன்பாட்டாளர்.
"கொள்கை இல்லா அரசியல் போராட்டம், அரசியல் இல்லா தனி மனித முன்னிருத்தல் மட்டுமே ரஜினியின் அரசியல். ரஜினியால் ஜனநாயகம் கேலி கூத்தாக்கப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்ட நாள் இன்று" என்னு முகநூலில் தெரிவித்துள்ளார் அருண் என்ற நேயர்.
நௌஷத் என்ற முகநூல் பயனர், "ரஜினி சொல்லக்கூடிய தூய்மையான அரசியலுக்கு என்ன செயல்திட்டம் அவரிடம் இருக்கிறது. இது தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகளின் வெற்றிடத்தைப் நிரப்ப துடிக்கும் ஒரு பேராசைக்காரனின் வார்த்தைகள். தானாக தவறு என உணர்ந்து தானாக வெளியேறுவார்" என்று பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- 'ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள்'
- "நான் அரசியலுக்கு வருவது உறுதி... காலத்தின் கட்டாயம்": நடிகர் ரஜினிகாந்த்
- பத்மாவதி திரைப்படத்தை வெளியிட தணிக்கை வாரியம் அனுமதி
- பிபிசி தமிழ் நேயர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் கானுயிர் காட்சிகள்
- அரசியலில் ரஜினி: ட்விட்டரில் குவிந்த பிரபலங்களின் ஆதரவும் எதிர்ப்பும்!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :