You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள்' : எஸ்.வி. சேகர் பேட்டி
தனது அரசியல் பிரவேசத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார்.
தான் தனி கட்சி தொடங்கபோவாதாகவும், அனைத்து தொகுதிகளிலும் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டி இடுவோம் என்றார் அவர். காலம் குறைவாக இருப்பதால் அதற்கு முன்பு வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற ரஜினிகாந்த், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் சமயத்தில் அறிவிப்பேன் என்றார்.
ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து நடிகரும், பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி. சேகர் பிபிசி தமிழிடம் உரையாடினார்.
''முன்பு, அரசியலுக்கு வருவேனா, மாட்டேனா என்று தெரியவில்லை என்றார் ரஜினி. தற்போது 3 ஆண்டுகளுக்கு பின் வருவேன், அதுவரை ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்க போகிறேன் என்கிறார். 40 ஆண்டுகள் இருக்கும் மன்றங்களாக அவர் இன்னமுமா ஒருங்கிணைக்கவில்லை?'' என்று எஸ்.வி. சேகர் வினவினார்.
தனது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தவே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தோன்றுகிறது என்று எஸ்.வி. சேகர், மேலும் குறிப்பிட்டார்.
''இன்று அறிவிப்பு வெளியிட்ட ரஜினி, இது தான் கட்சியின் பெயர், கொடி என்று அறிமுகம் செய்தால்தான் அவர் கட்சி ஆரம்பித்தாக அர்த்தம், தற்போதைய அறிவிப்பு கோர்ட்டில் வாய்தா வாங்குவது போலதான்'' என்று கூறினார்.
'ரஜினிக்கு தவறான ஆலோசனை தருகிறார்கள்'
''காலா மற்றும் எந்திரன் 2 ஆகிய படங்கள் வெளிவரும்வரை, அவர் அரசியல் பேசமாட்டார் என்பது என் கருத்து இன்றைக்கு எந்த அறிவிப்பும் வெளியிடாவிட்டால் கேலிக்குரியதாகவிடும் என்றே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம்'' என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் என தோன்றுகிறது என்று குறிப்பிட்ட எஸ்.வி.சேகர், ''அரசியல் ஆதாயம் பெற முயலும் சிலர் தவறான விஷயங்களை கூறலாம்'' என்று கூறினார்.
அவ்வாறு தவறான ஆலோசனைகள் கூறுவது யார் என்று கேட்டதற்கு, ''அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அரசியல் ஆலோசகர்களாக இருக்கலாம், இல்லை வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்'' என்று எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
''தற்போதைய ஆட்சியில் சரியான தலைமை இல்லை என்று அவர் கூறுகிறார். தவறுகள் பற்றி கூறுவதென்றால் ஜெயலலிதா இருந்தபோது அவர் கருத்து தெரிவித்திருக்கலாம்'' என்று மேலும் கூறினார்.
ரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியல் களத்தில் தாக்கம் ஏற்படுமா?
ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது பற்று குறித்து பேசிய அவர், ''அது ஒரு இடைத்தேர்தல் வெற்றி மட்டுமே. அதனால், தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. திருமங்கலம் இடைத்தேர்தல் எப்படி பார்க்கப்பட்டதோ, அது போலத்தான் ஆர்,கே.நகர் இடைத்தேர்தல்'' என்று குறிப்பிட்டார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியல் களத்தில் தாக்கம் ஏற்படுத்துமா என்று கேட்டதற்கு பதிலளித்த எஸ்.வி. சேகர், ''தற்போது அது குறித்து கருத்து கூறமுடியாது. அவர் கட்சி ஆரம்பித்த பிறகு, உள்கட்டமைப்பு, கொடி அறிமுகம் எல்லாம் செய்தபிறகுதான் அது பற்றி கருத்து கூறமுடியும்'' என்று கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :