இன்று ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் முடிவு: ஒரு பார்வை

பட மூலாதாரம், Getty Images
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில், ஆர்.கே.நகர் பற்றிய 10 முக்கிய தகவல்கள் இங்கே...
1. வடசென்னையில் அமைந்திருக்கும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி, சென்னையின் பின்தங்கிய பகுதிகளில் ஒன்று. இந்தத் தொகுதி 1977ல் உருவாக்கப்பட்டது.
2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் இதுவரை 11 முறை தேர்தல் நடைபெற்றிருக்கிறது. அதில் அ.தி.மு.கவே அதிக முறை வெற்றிபெற்றுள்ளது. அதாவது 7 முறை இந்தத் தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. தி.மு.க. 2 முறை இங்கு வெற்றிபெற்றுள்ளது.
3. பி.கே. சேகர் பாபு (அ.தி.மு.க.), ஜெயலலிதா, எஸ்.பி. சற்குணம் (தி.மு.க.) ஆகியோர் இந்தத் தொகுதியில் தலா இரண்டு முறை வெற்றிபெற்றுள்ளனர். 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தத் தொகுதியில் தி.மு.க. வெற்றிபெறவில்லை.

பட மூலாதாரம், Getty Images
4. இந்தத் தொகுதியில் அதிக சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றவர் ஜெயலலிதா. 2015ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் 88.43 சதவீத வாக்குகளை அவர் பெற்றார்.
5. 2014ல் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டதால், ஸ்ரீரங்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் முதல்வர் பதவியையும் இழந்தார். 2015ல் அவர் உயர் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டதும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட முடிவுசெய்தார். 2011ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்த வெற்றிவேல் அதற்காக தன் பதவியை ராஜினாமா செய்தார்.
6. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சிம்லா முத்துசோழனைவிட, சுமார் 39,500 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
7. 2016ஆம் ஆண்டின் இறுதியில் ஜெயலலிதா இறந்துவிட, 2017 ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டது. ஆனால், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பெரும் பணத்தை அளித்தனர் என்ற குற்றச்சாட்டில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

8. அதற்குப் பிறகு, டிசம்பர் 21ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது தேர்தல் ஆணையம். இந்த இடைத் தேர்தலில் 145 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, 59 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் ஒருவர் மட்டுமே பெண்.
9. இந்தத் தொகுதியில் டிடிவி தினகரன் தவிர, கே. தினகரன், ஜி. தினகரன், எம். தினகரன் என மொத்தமாக நான்கு தினகரன்கள் போட்டியில் இருந்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் இ. மதுசூதனன் தவிர, எஸ். மதுசூதனன், ஆர். மதுசூதனன் என மேலும் இரண்டு மதுசூதனன்கள் போட்டியில் இருந்தனர். இதில் சுயேச்சை வேட்பாளர் எஸ். மதுசூதனன், கடந்த முறை இ. மதுசூதனன் போட்டியிட்ட இரட்டை விளக்குக் கம்பம் சின்னத்தைக் கேட்டு வாங்கியிருக்கிறார்.
10. 2017 ஏப்ரலில் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, ஆளும் அ.தி.மு.கவுக்கு எதிர் அணியில் இருந்த இ. மதுசூதனன் தற்போது ஆளும் அணியில் இருக்கிறார். அப்போது ஆளும் அணியில் இருந்த தினகரன், தற்போது சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













