ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை இப்போது வெளியிட்டது ஏன்? வெற்றிவேல் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறி இன்று (புதன்கிழமை) ஒரு காணொளியை வெளியிட்டார் தினகரன் அணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பி. வெற்றிவேல்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. அவர் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று ஜெயலலிதா சிகிச்சை பெறும் காணொளியை வெளியிட்டு பேசிய அவர், "அம்மா (ஜெயலலிதா) உயிரோடு இருந்தாங்க என்பதை காண்பிக்கிற வீடியோவை கூட காண்பிக்க விடாம என்னை பல விதங்களில் தடுத்து பார்த்தார்கள்.பல தடைகளை தாண்டிதான் இங்கே வந்திருக்கேன்." என்றார்.
ஜெயலலிதாவை பற்றி பல வதந்திகள் பரப்பப்படுகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த காணொளியை வெளியிட்டேன் என்றார்.
அவர், "அவருடைய(ஜெயலலிதா) மரணம் குறித்து பல சந்தேகங்களை எழுப்புகிறார்கள். அதை நிறுத்திவிடுவார்கள் என்று பார்த்தால், நிறுத்தப்படுவதாக தெரியவில்லை. அதற்காகதான் இந்த வீடியோவை வெளியிட்டேன்." என்றார்.
தன்னிடம் மேலும் சில வீடியோக்கள் உள்ளதாகவும், தேவைப்பட்டால் அதனையும் வெளியிடுவோம் என்றார் வெற்றிவேல்.

"என்னை எல்லா வழிகளிலும் தடுக்கப்பார்க்கிறார்கள். அம்மா உயிரோடு இருந்ததையே சொல்லக்கூடாதுன்னு சொல்றாங்க.. ஒரு மிகப்பெரிய தலைவரை, அவர் இறந்த பிறகு தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகிறார்கள். இதை எதிர்கட்சிகள் செய்தால் அது வேறு விஷயம், அவர்களுக்கு ஏதேனும் அரசியல் ஆதாயம் இருக்கும்... ஆனா, இதை செய்வது அனைத்தும் அரசாங்கம்..." என்று குற்றம் சுமத்தினார்,
மேலும், "இது மற்றும் அல்ல, வேறு சில ஆதாரங்களும் அம்மா குறித்து உள்ளது. அம்மாவை கொச்சைப்படுத்த யார் முயற்சித்தால் இனிமேல் சும்மா இருக்க மாட்டோம். நடவடிக்கையும் எடுப்போம்" என்றார்.
தமிழ் நாட்டு மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் இன்று உண்மைதன்மை வெளியிடப்பட்டு இருக்கிறது. மருத்துவமனையில அம்மா டி.வி. பார்த்துக்கிட்டு, ஜூஸ் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க என்றார்.
செய்தியாளர்கள் ஆர்.கே நகர் தேர்தல் சமயத்தில் இந்த வீடியோ வெளியிடப்படுவதற்கு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்று கேட்டதற்கு, "தேர்தல் குறித்து இப்போது பேசாதீர்கள். தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. " என்றார் வெற்றிவேல்.
"இந்த வீடியோ மருத்துவமனையில் எடுக்கப்பட்டது. முழு விவரத்தை எங்கு தெரிவிக்க வேண்டுமோ அங்கு தெரிவிப்போம்." என்று கூறினார்.
விசாரணை ஆணையம் என்னை அழைக்கவில்லை. அழைத்தால் இந்த வீடியோவை அவர்களிடம் கொடுப்போம் என்று தெரிவித்தார்.
இந்த காணொளியை வெளியிடுவது தொடர்பாக சசிகலாவிடம் அனுமதி பெறவில்லை என்று வெற்றிவேல் கூறினார்.
பிற செய்திகள்
- ஏமனிலிருந்து ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையில் இரான் சின்னம்
- வட கொரியாவுடன் இன்னும் தொடர்பில் இருக்கும் நாடுகள் எவை?
- ஐக்கிய அரபு அமீரகத்தில் மசூதி கட்டிய 'இந்து' கோடீஸ்வரர்
- ஜெருசலேம் விவகாரம்: ஐ.நாவின் வரைவுத் தீர்மானத்தை நிராகரித்தது அமெரிக்கா
- உலகின் மிகவும் ஆபத்தான இடத்திற்குச் சுற்றுலா செல்ல ஆசையா?
- ''குஜராத் தேர்தல் முடிவு பா.ஜ.கவுக்கு ஒரு எச்சரிக்கை மணி''
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












