ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவை நேரலை ஒளிபரப்பு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது அனைத்து வாக்கெடுப்பு மையங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்களிக்கும் காட்சிகள், தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளில் நேரலையில் ஒளிபரப்பாகும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்களன்று தெரிவித்துள்ளனர்.

திமுக வேட்பாளர் மருது கணேஷ்

பட மூலாதாரம், மு.க.ஸ்டாலின்

படக்குறிப்பு, திமுக வேட்பாளர் மருது கணேஷுக்காக ஆர்.கே நகரில் பிரசாரம் செய்யும் கட்சியின் பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின்

இடைத்தேர்தலின் போது முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக வேட்பாளர் மருது கணேஷ் தொடுத்த வழக்கில் பதில் அளித்த தேர்தல் ஆணையம், அவர் கோரியது போல ஆர்.கே.நகரில் உள்ள 968 தெருக்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த முடியாது என்றும் அனைத்து வாக்கெடுப்பு மையங்களிலும் வெப்டெலிகாஸ்ட் முறையில் நேரலையாக காட்சிகள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டு அறைகளில் ஒளிபரப்பாகும் என்றும் தெரிவித்துள்ளது.

தேர்தலில் முறைகேடுகளை தடுப்பதற்கு, கவனத்திற்கு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

ராணி மேரி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி டி.கார்த்திகேயன் மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வாதன் ஆகியோர் பார்வையிட்டனர்.

வாக்கெடுப்பு மையங்களில் கேமராக்கள்

பட மூலாதாரம், SAM PANTHAKY/AFP/Getty Images

படக்குறிப்பு, தேர்தல் வாக்கெடுப்பு மையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளில் நேரலையில் ஒளிபரப்பாகும்

செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், அனைத்து அரசியல் கட்சிகளும் செவ்வாய்க்கிழமை மாலை ஐந்து மணியுடன் பிரசாரத்தை நிறைவு செய்வார்கள் என்று குறிப்பிட்டார்.

''ஐந்து மணிக்கு மேல் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் சென்னையின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்.கே.நகரில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். சுதந்திரமாகவும், நேர்மையான முறையிலும் தேர்தல் நடத்தப்படும்,'' என்று கார்த்திகேயன் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசிய காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் ஆர்.கே.நகரில் தேர்தல் விதிமுறைமீறல் புகார்களுக்காக இதுவரை 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் ரூ. 30.48லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

161 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தேர்தலின் போது மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரத்தில் டிடிவி தினகரன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆர்.கே.நகர் தேர்தல் தேர்தல் பிரசாரத்தில் டிடிவி தினகரன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :