டெல்லி: கள்ளச்சாராயக் கடைகளை எதிர்த்த பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கியதாக புகார்

பாதிக்கப்பட்ட பெண்

பட மூலாதாரம், Delhi Commission for Women

படக்குறிப்பு, பாதிக்கப்பட்டப் பெண் பேசி வைரலாகிய காணொளியின் படம்

இந்தியத் தலைநகர் டெல்லியில், கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக போராடிய பெண் ஆர்வலர் தாக்கப்பட்டு, நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமையன்று நடைபெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்தில், இந்த பெண் ஆர்வலர் மற்றும் அவரின் சக ஆர்வலர்கள் கள்ளச்சாராயக் கடைகளை அடையாளம் காண இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.

டெல்லி மகளிர் ஆணையத்தில் தன்னார்வத் தொண்டராக இருக்கும் இந்தப் பெண், தன் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற போது, நிர்வாணமாக அழைத்துச்செல்லப்பட்டார் என இப்பெண் கூறுவதை போலீசார் மறுத்துள்ளனர்.

சட்டவிரோதமாக மதுக்கடைகள் வைத்திருப்பவர்களை எதிர்த்து போராடியதால், தான் "தாக்கப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டதாக" பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ள காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

தன்னார்வலராக இருக்கும் இப்பெண்ணின் உடம்பில் "இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்ட அடையாளங்கள்" இருந்ததாக மகளிர் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்கும் நபர்களால் அவர் தாக்கப்பட்டதாகவும் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. "சில பெண்கள் சண்டையிட்டுக் கொண்டபோது" இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனை வெறும் சண்டை என டெல்லி போலீஸ் குறிப்பிடுவது "அவமானகரமான" உள்ளதாக டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மைல்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அங்கு நடந்த ஒரு கைகலப்பில், அப்பெண்ணின் உடை "சிறிதளவு கிழிந்ததாகவும்", ஆண்கள் யாரும் அவரை தாக்கவில்லை என்றும் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாளிடம் காவல்துறை தெரிவித்துள்ளது.

தலைநகரில் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது "அதிர்ச்சியாகவும், அவமானகரமானதாகவும்" உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :