You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலக தொழில் முனைவோர் மாநாட்டில் கவனம் ஈர்த்த 13 வயது ஆட்டிசம் மாணவர்
- எழுதியவர், பள்ளா சதீஷ்
- பதவி, பிபிசி தெலுங்கு
ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் உலக தொழில் முனைவோர் மாநாட்டில் 13 வயதாகும் ஹமிஷ் ஃபின்லேசன் என்ற மாணவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
உலக தொழில் முனைவோர் மாநாடு ஹைதராபாத்தில் நவம்பர் 28 முதல் 30 வரை நடைபெற்றது.
7 ஆம் வகுப்பு படிக்கும் ஆட்டிசம் பாதிக்கப்பட்டுள்ள இளம் மாணவரான ஹமிஷ் இதுவரை 5 செல்பேசி மென்பொருட்களை (apps) உருவாக்கியுள்ளார்.
"வீடியோ கேம்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் வீடியோ கேம்களை விளையாடுகிறேன். இதற்கான நிரல்களை உருவாக்குவதைக் கற்றுக்கொண்டு திறன்பேசிகளுக்கான செயலிகளை உருவாக்கி வருகிறேன். என்னிடம் சில புதிய யோசனைகள் உள்ளன. நான் புதிய விளையாட்டுக்களை உருவாக்கி, அவற்றை மேம்படுத்தி வருகிறேன். வீடியோ கேமின் டிஜிட்டல் வெளியில் வேலை செய்ய விரும்புகிறேன்," என்று ஹமிஷ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
"ஆட்டிசம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தனி நபரும் வேறுபட்ட அளவில் பாதிக்கப்படுகின்றனர். மனிதர்களை அடையாளம் காணுதல், எழுதுதல் மற்றும் வாசிக்கும் போன்ற திறன்கள் ஆட்டிசம் பாதித்த ஒவ்வொரு நோயாளிகளுக்கும் அளவில், தன்மையில் வேறுபடுகின்றன. சிலர் அதிக திறமையுடையவர்களாக இருப்பர். சிலர் கணக்குகளை மிக நன்றாகவே செய்வர்" என்கிறார் ஹமிஷின் தந்தை கிரேம் ஃபின்லேசன்.
"ஹமிஷ் எங்களோடு மட்டுமே இருப்பார். சில நாட்கள் அவர் நன்றாக இருப்பார். சில நாட்கள் துன்பப்படுகிறார், பள்ளிக்கு செல்லும் அவர், கணிதம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை கற்கிறார். இருப்பினும், அவர் எழுதுவதற்கு கஷ்டப்படுகிறார்" என்று அவருடைய தந்தை தெரிவிக்கிறார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆட்டிசம் தொடர்பான திறன்பேசி செயலிகளை ஹமிஷ் உருவாக்கியுள்ளார்.
"நானொரு ஆட்டிசம் பாதித்த குழந்தை. பலருக்கு ஆட்டிசம் பற்றி அதிகம் தெரியாது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை மக்கள் கேலி செய்கின்றனர். அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். ஆட்டிசம் பற்றி மக்கள் கொண்டிருக்கும் மனத் தடைகளை உடைத்தெறிய நான் முயல்கிறேன். ஆட்டிசம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக செல்பேசி செயலிகளை உருவாக்கி அவர்களும் சிறந்ததொரு வாழ்க்கை வாழ்வதற்கு உதவ முயல்கிறேன்" என்று ஹமிஷ் கூறியிருக்கிறார்.
விளையாட்டு மற்றும் தொழில்நுட்பத்தில் ஹமிஷ் கொண்டிருக்கும் விரும்பம், குழந்தைப் பருவத்தில் இருந்தே செல்பேசி செயலிகளை உருவாக்கச் செய்துள்ளது. தற்போது அவர் தமது 6வது செல்பேசி செயலியை உருவாக்கி வருகிறார்.
காணொளி: ஆட்டிசம் பாதிப்பை குறைக்க யோகா பயிற்சி
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்