You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்த முன்னாள் ராணுவத் தளபதி மரணம்
சர்வதேச நீதிமன்றத்தில் நடந்த போர்க்குற்ற வழக்கின் மேல் முறையீட்டில் தமக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டவுடன் போஸ்னிய குரேஷியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஸ்லோபோதன் பிரல்ஜக் (72) விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
முன்னாள் சோஷியலிஸ்ட் குடியரசான யுகோஸ்லாவியாவில் இருந்து போஸ்னியா-ஹெர்சகோவினா தனிநாடாகப் பிரிந்து செல்லத் தீர்மானித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் மூண்டது.
1992-95 காலகட்டத்தில் நடந்த அப்போர் போஸ்னியப் போர் என்று அறியப்பட்டது. அப்போரில், மோஸ்தர் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக பிரல்ஜக் உள்ளிட்ட போஸ்னிய குரேஷிய ராணுவ, அரசியல் புள்ளிகள் ஆறு பேருக்கு 2013ல் தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் மேல் முறையீடு செய்தனர். நெதர்லாந்தின் தி ஹேக்கில் உள்ள முன்னாள் யுகோஸ்லாவியாவுக்கான சர்வதே குற்றவியல் தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று புதன்கிழமை இறுதித் தீர்ப்பு வழங்குவது தொடங்கியது.
தலைமை வகித்த நீதிபதி கார்மெல் ஏஜியஸ் பிரஜ்லக்குக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து தீர்ப்பை வாசித்துக் கொண்டிருந்தார். உடனே, தாம் குற்றவாளி இல்லையென்று குரலெழுப்பிய பிரல்ஜக், கையிலிருந்த ஒரு பாட்டிலில் இருந்த திரவத்தை அருந்திவிட்டு, நீதிபதியைப் பார்த்து தாம் நஞ்சு அருந்தியதாகக் குறிப்பிட்டார்.
இதைக்கேட்டு தடுமாறிய நீதிபதி தீர்ப்பை ஒத்திவைப்பதாகக் கூறிவிட்டு உடனடியாக ஆம்புலன்சை அழைத்தார். சிறிது நேரத்தில் அங்கு ஆம்புலன்ஸ் வந்தது. அதே நேரம் ஒரு ஹெலிகாப்டரும் அந்த இடத்தில் பறந்துகொண்டு நின்றது.
உடனடியாக பிரல்ஜக்குக்கு முதலுதவி அளித்து அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் அங்கே அவர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மரணத்துக்கு வருந்துவதாகக் குறிப்பிட்ட குரேஷிய பிரதமர் ஆண்ட்ரெஜ் ப்ளென்கோவிக், பிரல்ஜக்கின் செய்கை இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு போஸ்னிய குரேஷியர்களுக்கு எதிராகவும் குரேஷிய மக்களுக்கு எதிராகவும் இழைக்கப்படும் ஆழ்ந்த அநீதியைப் பற்றிப் பேசுவதாகக் குறிப்பிட்டார்.
போஸ்னியா-ஹெர்சகோவினாவில் நடந்த இப்போரில் இழைக்கப்பட்ட எல்லா குற்றங்களாலும் பாதிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் இரங்கலைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட அவர் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு அதிருப்தியையும் வருத்தத்தையும் தருவதாகவும் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
- 'போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையாக அழிக்கப்படும்'
- இந்தியா: பல நகரங்களை கலக்கிய ''வித்தியாசமான'' திருடர்
- உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர்
- இலங்கை இயற்கை சீற்றம்: 6 பேர் பலி, முப்படைகளை ஈடுபடுத்த சிறிசேன உத்தரவு
- குளிர்காலத்தில் மூடிய அறைக்குள் தூங்குவது உயிருக்கு உலை வைக்கலாம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்