You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குளிர்காலத்தில் மூடிய அறைக்குள் தூங்குவது உயிருக்கு உலை வைக்கலாம்
- எழுதியவர், பூமிகா ராய்
- பதவி, பிபிசி
வேலைகளை முடித்துவிட்டு, கேட்டரிங் வேனுக்குள் தூங்கப்போன அவர்கள், தந்தூரி அடுப்பையும் உள்ளேயே கொண்டு சென்றனர். வாகனத்திற்குள் சூடாக இருக்கட்டும், நிம்மதியாக தூங்கலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அவர்களின் உறக்கம் மீளாத்துயிலாகிவிட்டது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, அடுத்த நாள் காலை வாகனத்தை திறந்தபோது, உள்ளே இருந்த ஆறு பேரும் சடலமாக இருந்தனர்.
டெல்லி காண்ட் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தைப் போன்ற பல சம்பவங்களை நாம் முன்னரே கேட்டிருக்கிறோம்.
குளிர்காலங்களில் குளிரை சமாளிப்பதற்காக, வீடுகள் மற்றும் கடைகளில் ஹீட்டர், ஃப்ளோவர், கரி அடுப்பு போன்றவற்றை பயன்படுத்துவது வழக்கமானதுதான். ஆனால் இவை பாதுகாப்பானவையா?
மருத்துவர்கள் என்ன சொல்கின்றனர் ?
காற்றோட்டம் மிகவும் அவசியமானது என்கிறார் ஐ.எம்.ஏ மருத்துவர் கே.அகர்வால். காற்றோட்டம் இல்லையென்றால் அங்கு ஆபத்து அதிகம் என்கிறார் அவர்.
குளிரைப்போக்கி சூட்டை உண்டாக்குவதற்காக, கரி, மரத்துண்டு போன்றவற்றை எரிக்கும்போது, அதில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு காற்றோட்டம் இல்லாத இடத்தில் வெளியேறாமல் அங்கேயே சுழல்வதால், அதை சுவாசிப்பவர்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்.
ஒரு காரில் எஞ்சினை மட்டும் இயக்கிவிட்டு காருக்குள் அமர்ந்திருந்தாலும் மூச்சுத்திணறல் ஏற்படும்.
எந்த பொருள் குறைவான பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை வகைப்படுத்த முடியாது என்கிறார் மருத்துவர் அகர்வால். வெப்பத்தை உருவாக்கும் சாதனங்களை பயன்படுத்தும்போது, காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்துக்கொள்வது உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும்.
சரும நிபுணர் அமித் லுத்ராவின் கருத்துப்படி, ஃப்ளோவர், ஹீட்டர் மற்றும் கரி அடுப்பு போன்றவற்றின் முன் அமர்ந்து நெருப்பு காய்வதால் தோலில் வறட்சித்தன்மை ஏற்படும், அதிலும் குறிப்பாக முதியவர்களுக்கு இது அதிக பாதிப்பை அதிகப்படுத்தும்.
இதைத்தவிர, தலையில் பொடுகுத்தொல்லையும் ஏற்படும், ஏற்கனவே பொடுகு பிரச்சனை இருப்பவர்களுக்கு அது மிகவும் அதிகமாகும். உஷ்ணம் ஏற்படுத்தும் உபகரணங்கள், சருமத்தின் இயற்கை ஈரத்தன்மையை இழக்கச்செய்கின்றன.
கார்பன் மோனாக்ஸைடு எப்படி பாதிப்பு ஏற்படுத்துகிறது?
மருத்துவர் சஞ்சய் ராயின் கூற்றுப்படி, கார்பன் மோனோக்ஸைடு ஒரு நச்சு வாயு. கரி அல்லது மரத்துண்டுகள் எரியும் இடத்தில் காற்றோட்டத்திற்கு தேவையான வசதிகள் இல்லையெனில், அங்கு இருப்பவர்கள் பிராணவாயுவுடன் சேர்த்து கார்பன் மோனோக்ஸைடையும் சுவாசிக்கின்றனர்.
கார்பன் மோனோக்ஸைடு, ஹியூமோக்ளோபினுடன் சேர்ந்து, கார்போக்ஸிஹிமோக்ல்லோபினாக மாறிவிடுகிறது.
உண்மையில், ரத்தத்தில் உள்ள ஆர்.பி.சி பிராணவாயுவை உட்கிரகிப்பதற்கு முன்னரே கார்பன் மோனாக்ஸைடுடன் இணைகிறது. பொதுவாகவே, கார்பன் மோனாக்ஸைடு மிகவும் அதிகமாக இருக்கும் இடத்தில் ஒருவர் இருந்தால், அவரின் ரத்தத்தில் பிராணவாயுவைவிட கார்பன் மோனாக்ஸைடு விரைவாக சேரும்.
இதனால் உடலின் பிற பாகங்களுக்கு செல்ல வேண்டிய பிராணவாயுவின் அளவு குறைகிறது. இதனால் ஹைபோக்ஸியா என்ற நிலைமை உருவாகி, திசுக்கள் அழிக்கப்படுவதோடு, மரணத்திற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
ஆரம்ப அறிகுறிகள் என்ன?
நீங்கள் இருக்கின்ற இடத்திலும், சுவாசிக்கிற காற்றிலும் நச்சுத்தன்மை இருக்கிறதா என்பதை அறிவது மிகவும் முக்கியம். காற்றில் கார்பன் மோனாக்ஸைடு அளவு அதிகமாக இருந்தால், தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும்.
இவற்றைத்தவிர, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதோடு கண்களில் எரிச்சலும் தோன்றும்.
மேற்கொள்ளவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள்
குளிர்காலத்தில் வெப்பத்தைக் கொடுக்கும் சாதனங்களைப் பயன்படுத்தினால், அந்த இடத்தில் காற்றோட்டம் இருக்க வேண்டும். மூடப்பட்ட அறைகளில் நிலக்கரி அல்லது மரத்துண்டுகளை எரிக்க வேண்டாம். நீங்கள் ஹீட்டர் அல்லது ஃப்ளோவர் பயன்படுத்தினாலும் கவனம் தேவை. அவற்றை அதிகமாக பயன்படுத்துவதும் ஆபத்து.
டெல்லியில் வேனில் ஆறு பேர் இறந்துபோன சம்பவத்தில் வேனுக்கு உள்ளே தந்தூரி அடுப்பைப் பயன்படுத்தியபோது கதவு திறந்திருந்தால், அவர்களின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்கிறார் மருத்துவர் கே.அகர்வால்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்