ஆர்.கே. நகர்: மதுசூதனன் வேட்பாளர் தேர்வுக்குப் பின்னே நடந்தது என்ன?

டிசம்பர் 21ஆம் தேதி நடக்கவிருக்கும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் அவைத் தலைவர் இ. மதுசூதனன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எம்.எல்.ஏ.வாக இருந்த சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடக்குமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இத் தேர்தலுக்கு தி.மு.க. சார்பில் மருது கணேஷும் அ.தி.மு.க. சசிகலா அணி தரப்பில் டிடிவி தினகரனும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க.வேட்பாளர் யார் என்பதில் இழுபறி நீடித்துவந்தது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. இரண்டாக உடைந்திருந்தபோது, ஓ. பன்னீர்செல்வம் அணி வேட்பாளராக இ. மதுசூதனன் அறிவிக்கப்பட்டார். அப்போது எடப்பாடி அணி சார்பில் டிடிவி தினகரன் வேட்பாளராக இருந்தார்.
இப்போது ஓ. பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி பழனிச்சாமி அணியும் இணைந்துவிட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கு கட்சிக்குள் கடும் போட்டி நிலவியது.
இ. மதுசூதனன் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் என்பதால், அவருக்கு இந்த வாய்ப்பை வழங்குவதற்கு எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். குறிப்பாக, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேட்பாளரை முடிவுசெய்வதற்கு நேற்று கூடுவதாக இருந்த ஆட்சி மன்றக் குழுக் கூட்டமும் தள்ளிவைக்கப்பட்டது.
ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுவதற்கு இ. மதுசூதனன் தவிர முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என். பாலகங்கா, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் தமிழ்மகன் ஹுசைன், தென்சென்னை மாவட்ட முன்னாள் செயலர் ஆதிராஜாராம் உள்ளிட்ட 21 பேர் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் அக்கட்சியின் தலைமையகத்தில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, மதுசூதனன், வளர்மதி, தமிழ்மகன் ஹுசைன், வேணுகோபால் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் இ. மதுசூதனனே ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1991ஆம் ஆண்டில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற மதுசூதனன் கைத்தறித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
ஆர்.கே. நகர் தொகுதியில் டிசம்பர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று டிசம்பர் 24ஆம் தேதி முடிவுகள் வெளிவரும்.
பிற செய்திகள்
- குளிர்காலத்தில் மூடிய அறைக்குள் தூங்குவது உயிருக்கு உலை வைக்கலாம்
- இந்தியா: பல நகரங்களை கலக்கிய ''வித்தியாசமான'' திருடர்
- 'போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையாக அழிக்கப்படும்'
- `என் பிரதமரை கேள்வி கேட்க எனக்கு உரிமையில்லையா?': பிரகாஷ் ராஜ் பிரத்யேக பேட்டி
- பெற்றோரை தேடி பேருந்தின் அடியில் அமர்ந்து சீன சிறுவர்களின் திரில் பயணம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












