ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாக திமுக புகார்

பட மூலாதாரம், Marudhu Ganesh/Facebook
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் டிசம்பர் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருது கணேஷ், தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாக புகார் அளித்துள்ளார்.
ஆர் கே நகரில் 40-ஆவது பிரிவில் உள்ள மூன்று வீதிகளில் புதிதாக சாலை போடும் பணிகள் நடந்ததாகவும், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
சாலை போடும் பணிகள்:
புகார் அளித்துள்ளது குறித்து மருது கணேஷிடம் விளக்கம் கேட்டபோது ,''ஆர்.கே. நகர் தொகுதியில் சனிக்கிழமை (நவம்பர் 25) சாலை போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இதுபோன்ற பணிகளை மேற்கொள்வது தேர்தல் விதிமீறல் என்று விளக்கிக் கூறி புகார் அளித்த பின்னரும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,'' என்றார்.
''ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26அன்று இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்று சரிபார்க்கும் வேலை நடைபெற்றது. அதில் தேர்தல் விதிமுறைகளின்படி, திருத்தப்பட்ட பட்டியலை வைத்து சரிபார்க்காமல் , பழைய பட்டியலைக் கொண்டு சரிபார்க்கும் பணி நடந்தது. இவற்றை கண்டித்து புகார் அளித்துள்ளேன்,'' என மருது கணேஷ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம்:
மருது கணேஷ் அளித்துள்ள புகார் பற்றி தேர்தல் ஆணைய அதிகாரி டி.கார்த்திகேயனிடம் பேசினோம்.
''புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றால் அது விதிமீறல் ஆகும் . மருது கணேஷ் கொடுத்துள்ள புகாரை பெற்றவுடன் தற்போது நடைபெறும் பணிகள் விதிகளுக்கு உட்பட்டு செய்யப்படுகிறதா என்று விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி 256 இடங்களில் மிகவும் வெளிப்படையாகவே நடந்துவருகிறது. அதில் எந்த விதிமீறல்களும் இல்லை,''என கார்த்திகேயன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார் .
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












