You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஜராத்: குடியிருப்பு பகுதிகளில் திடீரென தோன்றிய சிவப்பு நிற குறியீடு
அண்மையில் அகமதாபாத் நகரில் பல முஸ்லீம் மற்றும் சில இந்து வீட்டுவசதி சங்கங்களின் நுழைவுவாயிலில் சிவப்பு நிற பெருக்கல் குறியீடுகள் வரையப்பட்டிருந்தன.
இதனால் அப்பகுதிகளில் பதற்றம் உண்டாகியது. இது தொடர்பாக விசாரிக்க போலீசாருக்கு அப்பகுதிவாசிகள் கடிதம் எழுதினர்.
அகமதாபாத்தில் பதற்றம்
மாநகராட்சி பணியாளர்கள் இவற்றை வரைந்துள்ளதை போலீசார் கண்டுபித்துள்ளனர். தற்போது இந்த குறியீடுகளை நீக்கிவிட்டு மாநகராட்சி அவ்விடத்தில் வெள்ளையடித்துள்ளது.
பால்டி பகுதியில் உள்ள அமன் காலணி, எலைட் ஃபிளாட்ஸ், டிலைட் ஃபிளாட்ஸ் மற்றும் சாஹ்லி ஃபிளாட்ஸ் போன்ற கட்டடங்கள் மீது சிவப்பு நிற குறியீடுகள் வரையப்பட்டிருந்தன.
இந்த குடியிருப்புகளில் பெரும்பாலும் முஸ்லீம்கள் வசிக்கின்றனர். அகமதாபாத்தின் ஆடம்பர பகுதியான பால்டியில் வணிகர்கள் மற்றும் மேல்தர மற்றும் நடுத்தர முஸ்லீம் குடும்பங்கள் அதிகம் வசிக்கின்றனர்.
பால்டி பகுதிவாசிகள் இந்த சின்னங்களை காலையில் கண்டறிந்துள்ளனர். பின்னர் இவற்றால் அப்பகுதியெங்கும் பலவிதமான வதந்திகள் பரவின.
இந்த சின்னங்களை மாநகராட்சியின் துப்புரவு தொழிலாளர்கள் வரைந்ததை கண்டறிந்த போலீசார் அதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
''மாநகராட்சி ஊழியர்கள் வீடுகளை அடையாளம் காண இவ்வாறு சின்னங்களை உருவாக்கியுள்ளனர். குறிப்பாக முஸ்லீம் குடியிருப்புகள் என்றில்லை பல இந்து சமூக குடியிருப்புகளிலும் வீடு வீடாக குப்பை சேகரிக்கும் திட்டத்துக்காக மாநகராட்சி பணியாளர்கள் இவ்வாறு செய்தனர்'' என்று அகமதாபாத் போலீஸ் ஆணையாளர் ஏ.கே. சிங் விளக்கினார்.
அமர் காலனியை சேர்ந்த முபின் லகாடியா கூறுகையில், ''இதை யார் செய்தது என்று தெரியவில்லை. ஆனால், நாங்கள் இதனால் அச்சத்தில் உள்ளோம். எனது மனைவி மற்றும் குழந்தைகள் வெளியே செல்வதற்கு அச்சப்பட்டனர் என்று கூறினார்.
எலைட் காலனியின் பாதுகாவலர் கூறுகையில், " முதலில் இந்த சிவப்பு நிற குறியீடு சின்னத்தை பார்க்க விசித்திரமாக இருந்தது. ஆனால், இதே போன்று பல வீடுகளில் வரைந்திருந்ததைக் கண்டு பயந்துவிட்டோம்" என்றார்.
2002 ஆம் சம்பவத்திற்கு தொடர்புடையதா?
2002 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் போது எரிக்கப்பட்ட பால்டி டிலைட் ஃபிளாட்ஸ் மீதும் இந்த செஞ்சிலுவை சின்னம் வரையப்பட்டிருந்தது.
டிலைட் ஃபிளாட்சில் வசிக்கும் ஒவேஷ் சரேஷ்வாலா பிபிசியிடம் கூறுகையில் "யாராக இருந்தாலும் இந்த அச்சமிருக்கும். சிவப்பு நிற குறியீடுகள் , தாக்குதல் அல்லது பயங்கரவாதத்தைக் குறிக்கும். யார் எங்களை தாக்க நினைக்கிறார்கள்?"
இதுகுறித்து காவல்துறையினருக்கு கடிதம் எழுதி உதவி கேட்டுள்ளதாகவும் அதிகாரிகள் இதனை விசாரிக்க உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பால்டியை ஜுஹபுராவாக (ஜுஹபுரா, இந்தியாவில் உள்ள மிகப் பெரிய இஸ்லாமிய மக்கள் வாழக்கூடிய சேரிகளில் ஒன்று) மாற்றுவதை நிறுத்த வேண்டும் என எழுதப்பட்டிருந்த சில சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளும் இருந்தன. எனவே இந்த சுவரொட்டிகளுக்கும், சில இடங்களில் வரையப்பட்டுள்ள செஞ்சிலுவை சின்னங்களுக்கும் தொடர்பு இருக்குமோ என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து விசாரித்து வருவதாக காவல்துறை ஆணையர் ஏ.கே. சிங் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கு குஜராத் மாநிலம் தயாராகிக் கொண்டிருக்கும் இச்சூழலில், அம்மாநில மற்றும் தேசிய ஊடகங்கள் இந்த சர்ச்சைக் குறித்து விவாதித்து வருகின்றன. தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது. கடந்த 22 வருடங்களாக குஜராத்தில் பா.ஜ.க ஆளும் கட்சியாக உள்ளது.
பிற செய்திகள்:
- குடும்பத்திற்கு உதவ பேருந்தை திருடிய 13 வயது சிறுவன்!
- ஜிம்பாப்வே: ராணுவத்தின் அடுத்த நடவடிக்கை என்ன?; காத்திருக்கும் குடிமக்கள்
- மனிதக் கழிவுகளின் ஆற்றலில் இயங்கும் கழிவறைகள்
- அதிகாரிகளை சந்தித்த ஆளுநர்: மாநில சுயாட்சிக்கு ஆபத்தா?
- தாயிடமிருந்து பிரிந்த சிறுத்தை குட்டிகள்: மீண்டும் சேர்ந்தது எப்படி?
- கலிஃபோர்னியா: துப்பாக்கிதாரியிடமிருந்து குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்