தனது திருமணத்தை துணிச்சலாக நிறுத்திய 12 வயது சிறுமி: போராளியாக மாறியது எப்படி?

- எழுதியவர், ஸ்ரீகாந்த் பங்காலே – அமே பதக்
- பதவி, பிபிசி மராத்தி
சுனிதா தேவிதாஸ் உப்பாலே, மகாராஷ்ராவின் ஜால்னா மாவட்டத்தில் உள்ள நந்தபூர் கிராமத்தில் வசிக்கிறார்.
அவர் ஏழாவது வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது, அவரின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தனர். அப்போது அவருக்கு வயது 12.
திருமணம் குறித்து அவரின் விருப்பமும் கேட்கப்படவில்லை, அவருக்கு திருமணம் நடக்கவுள்ளது என்பதை சுனிதாவிற்கு தெரிவிக்கவுமில்லை.
யார் மாப்பிள்ளை, என்ன செய்கிறார் என்பதெல்லாம் அவருக்கு தெரியாது. அடுத்த சில நாட்களில், உறவினர்களின் அழுத்தத்தால், சுனிதாவின் பெற்றோர், அவருக்கு நிச்சயதார்த்தம் செய்தனர்.
12 வயதில் திருமணம் செய்துகொள்ள சுனிதாவிற்கு விருப்பமில்லை. அவர் மேற்படிப்பு படித்து, அரசு அதிகாரியாக விரும்பினார்.
தனக்கு இவ்வளவு இளம் வயதில் திருமணம் செய்துவைக்கக் கூடாது என்று பெற்றோரையும், உறவினர்களையும் அவர் சமாதானம் செய்ய முயன்றார்.

நேர்மறையான பதில் கிடைக்காததால், தனது பள்ளி ஆசிரியரை அணுகினார் சுனிதா. இந்த வயதில் தனக்கு திருமணம் வேண்டாம் என அவர் ஆசிரியரிடம் தெரிவித்தார்.
அந்த ஆசிரியர், ஜால்னா மாவட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணனின் தொலைபேசி எண்ணை சுனிதாவிடம் அளித்தார்.
அந்த அதிகாரிக்கு போன் செய்த சுனிதா, "என் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி திருமணம் செய்யப்படுகிறது" என்றார்.
உடனடியாக அந்த அதிகாரி, `அனைவருக்கும் கல்வி` குழுவை, சுனிதாவின் கிராமத்திற்கு அனுப்பி வைத்தார். 18 வயது பூர்த்தியடையாத பெண்ணிற்கு திருமணம் செய்து வைப்பது என்பது சட்டத்திற்கு எதிரானது என்பதை சுனிதாவின் பெற்றோருக்கு அவர்கள் விளக்கினர்.
மேலும், அவ்வாறு செய்வதனால் நடக்கக்கூடிய விஷயங்கள் குறித்து அவர்கள் எச்சரித்தனர்.
தாங்கள் செய்வது தவறு என்பதை புரிந்துகொண்ட சுனிதாவின் பெற்றோர், திருமண எண்ணத்தை கைவிட்டனர். சுனிதா தொடர்ந்து படிக்க அனுமதிக்கவும் முடிவு செய்தனர்.
திருமணத்திற்கான காரணம்?
சுனிதாவின் தந்தையான தேவிதாஸ் உப்பாலேவிற்கு ஐந்து குழந்தைகள். மூன்று பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள்.

அவரிடம் 1.5 ஏக்கர் நிலம் இருந்தாலும், அதற்கு தண்ணீர் பாசனத்திற்கான வழிகள் இல்லை.
அவரின் மூத்த மகள்கள் இருவருக்கு திருமணம் செய்யும்போதே அவர் மிகவும் சிரமப்பட்டார். "என் மகளின் படிப்பிற்கு மேற்கொண்டு என்னால் செலவு செய்ய முடியவில்லை. விவசாயத்தில் எனக்கு எந்த வருமானமும் இல்லை. அதனால், திருமணம் செய்யாமல் அவளை எதற்காக வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும்? என நான் யோசித்தேன்" என்று கூறினார்.
18 வயது பூர்த்தி அடையாத பெண்ணுக்கோ, 21 வயது பூர்த்தியடையாத ஆணுக்கோ, திருமணம் செய்து வைப்பது என்பது சட்டரீதியாக தவறு என்று தெரிந்த பிறகே தனது தவறை அவர் உணர்ந்துள்ளார்.
"இப்போது என் மகள் படிக்கிறாள். அவளின் விருப்பம் போல நான் படிக்க வைப்பேன். கல்வியை முடிக்கும் வரை, மகளின் திருமணம் குறித்து நான் யோசிக்க மாட்டேன்" என்கிறார் அவர்.
சுனிதாவின் செயலால் ஏற்பட்ட தாக்கம்?
தனது சொந்த திருமணத்தை தடுத்த பிறகு, `அனைவருக்கும் கல்வி` குழுவுடன் இணைந்து அருகாமையில் உள்ள கிராமங்களுக்கு பயணிக்கிறார் சுனிதா. குழந்தைத் திருமணத்திற்கு எதிராக பிரசாரங்களிலும் ஈடுபடுகிறார்.

"என் பெற்றோர், இளவயதிலேயே எனக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார்கள். நீங்கள் அதை உங்களின் மகள்களுக்கு செய்யாதீர்கள். எனக்கு எது நடப்பதாக இருந்ததோ, அது அவர்களுக்கு நடக்கக்கூடாது" என்று அவர் தெரிவிக்கிறார்.
"எங்களின் பெண் குழந்தைகளுக்கு நாங்கள் இளம்வயதில் திருமணம் செய்ய மாட்டோம். உங்களின் பேச்சை கேட்ட பிறகு, ஆணும் பெண்ணும் சமம் என்பதை நாங்கள் உணர்கிறோம். பெண்களும் பெரிய அதிகாரிகளாக வரலாம்" என்று, அவரிடம் அங்குள்ள பெண்கள் கூறுகின்றனர்.
ஐ.ஏ.ஏஸ் கனவு
சுனிதா, 7-ஆம் வகுப்பு வரையில் அரசு பள்ளியில் படித்தார். பிறகு, மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ், அவருக்கு பத்னாபூரில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி வித்யாலயாவில் இடம் கிடைத்தது.
அங்கு பத்தாம் வகுப்பை சுனிதா முடித்தார். அதன் பிறகு தனது கிராமத்திற்கே திரும்பிய சுனிதா, அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
தனது இலக்கை அடைவேன் என்பதில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளார் சுனிதா.
"நான் படிக்க வேண்டும் என்பதற்காக, இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளவில்லை. எல்லா தடைகளுக்கு இடையிலும், நான் தொடர்ந்து படிப்பேன், ஐ.ஏ.எஸ் அதிகாரியாகுவேன்" என்கிறார் சுனிதா.
சுனிதா, தனது திருமணத்திற்கு எதிராக மட்டும் போராடாமல், குழந்தைத் திருமணத்திற்கு எதிராக மற்றவர்களும் போராட ஊக்கமளிக்கிறார்.
"பெண்களே, உங்களுக்கு தைரியம் நிச்சயமாக வேண்டும். உங்களின் பெற்றோர், உங்களுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்துகொள்ள கூறினால், அதை எதிர்த்து பேசுவதற்கான தைரியத்தை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்" என்கிறார் சுனிதா.
"நீங்கள் தீர்க்கமாக முடியாது என்று கூறினால், உங்களின் விருப்பத்திற்கு எதிராக யாராலும் செயல்பட முடியாது" என்று சுனிதா கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













