"பெரிய மரம் தரையில் வீழ்ந்தால் அதன் தாக்கம் நிலஅதிர்வாக வெளிப்படும்"

    • எழுதியவர், ரெஹான் ஃபஜல்
    • பதவி, பிபிசி

1984 அக்டோபர் 31ஆம் தேதி இந்திய பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டார். அதையடுத்து, டெல்லி மற்றும் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் சீக்கிய சமூகத்தினர் மீதான வெறுப்பு, கலவரங்களாக மாறி நாட்டையே உலுக்கின.

சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகள் நாடு முழுவதும் நடைபெற்றது என்று சொன்னாலும், டெல்லியில்தான் பாதிப்பு அதிகமாக இருந்தது. சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களை பற்றிய 'When a tree shook delhi: The 1984 Carnage and Its Aftermath' என்ற புத்தகம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

கலவரங்கள், உயிர் இழப்புக்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலி மற்றும் அரசியல்வாதிகளுடன் போலீசாரின் கூட்டணி போன்ற பல்வேறு செய்திகள் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

"பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபிறகு, சீக்கியர்களுக்கு எதிரான மக்களின் சீற்றம் வன்முறையாக வெளிப்பட்டது. அவரின் படுகொலை இந்தியாவையே உலுக்கிவிட்டதாக மக்கள் கருதியதையும் உணர்ந்தேன். ஒரு பெரிய மரம் வேரோடு கீழே விழுந்தால், அதன் தாக்கம் நிலஅதிர்வாக வெளிப்படும்."

இந்த வார்த்தைகளை சொன்னது அப்போதைய பிரதமரும், இந்திராகாந்தியின் மகனுமான ராஜீவ் காந்தி. 1984 நவம்பர் 19ஆம் நாளன்று டெல்லி போட் கிளப்பில் கூடியிருந்த மக்களிடம் பேசிய ராஜீவ் காந்தி இப்படிக் கூறினார்.

வீடுகளை, உறவுகளை இழந்து அனாதைகளாக, அனாதரவாக நின்ற ஆயிரக்கணக்கான சீக்கியர்களைப் பற்றியோ, அவர்களுக்கு ஆறுதலையோ, பொறுப்பான பதவியில் இருந்த ராஜீவ் காந்தி எதுவும் கூறவில்லை. அவரின் இந்த வார்த்தைகள் ரத்தம் சொட்டும் காயத்தின் மீது உப்பைத் தூவி, வலியை அதிகப்படுத்தும் செயலாகவே பார்க்கப்பட்டது.

உணர்வுப்பூர்வமான அறிக்கை

'சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களை, வன்முறைகளை கொலைகளை நியாயப்படுத்தும் முயற்சி' என்று ராஜீவ் காந்தியின் வார்த்தைகள் கருதப்பட்டன. இதனால் ஏற்பட்ட பரவலான அதிருப்தியை சரிசெய்யவும், நியாயப்படுத்தவும் காங்கிரஸ் கட்சி பல முயற்சிகள் எடுக்க வேண்டியிருந்தது.

"எந்த நோக்கத்தில் என்ன காரணத்திற்காக சொல்லப்பட்ட கருத்து என்பதை அதைச் சொன்னவர்தான் சரியாக சொல்லமுடியும். ஒரு கருத்தை புரிந்துக் கொள்ளும்போது, எந்த நேரத்தில், எந்த சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டது, சொன்னவரின் மனநிலையையும் கருத்தில் கொள்ளவேண்டும்" என்று சொல்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித்.

"எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பவர், தாராள குணமுடையவர். குறுகிய மனப்பான்மையோடு, மற்றவர்களை புண்படுத்தும் விதத்தில் மனதிற்கு தோன்றிய கருத்துகளை அவர் வெளியிட்டிருப்பார் என்று நான் நம்பவில்லை." என்று குர்ஷித் கூறுகிறார்,

ஆரம்ப நிகழ்வுகள்

இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட தகவல் தீயாக பரவியதும், கலவரங்களும் காட்டுத்தீயாக இடைவிடாமல் பற்றியெரியத் தொடங்கின. அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங், தனது ஏமன் பயணத்தை முடித்துக்கொண்டு உடனடியாக நாடு திரும்பினார்.

ஜெயில் சிங், விமானநிலையத்தில் இருந்து நேரடியாக இந்திரா காந்தியின் உடல் இருந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார். டெல்லியில் ஆர்.கே.புரம் பகுதி வழியாக குடியரசுத் தலைவரின் வாகனங்கள் சென்றபோது முதல் தாக்குதல் நடத்தப்பட்டது.

குடியரசுத் தலைவரின் செய்தித் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்த தர்லோசன் சிங், பிறகு தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராகவும் பணிபுரிந்தவர், அவர் சென்ற வாகனம் தாக்கப்பட்டது.

"குடியரசுத் தலைவருடன் விமான நிலையத்தில் இருந்து சென்றவர்களில் நானும் ஒருவன். அவரது காருக்கு பின்னால் அவருடைய செயலரின் வாகனம் அதன்பிறகு என்னுடைய கார் சென்று கொண்டிருந்தது." என்று தர்லோசன் சிங் நினைவுகூர்கிறார்,

"முதல் இரண்டு வாகனங்கள் சென்றுவிட்டன. திடீரென்று என்னுடைய காரின் முன்னால் வந்த கும்பலில் இருந்தவர்கள், கைகளில் இருந்த எரியும் தீப்பந்தங்களை வீசியெறிந்து ஆக்ரோஷமாக கூச்சலிட்டார்கள். பீதியடைந்தாலும், வாகன ஓட்டி மிகுந்த சிரமத்துக்கு இடையில் என்னை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு சேர்த்தார்."

"எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற கியானி ஜெயில் சிங், இந்திரா காந்தியை பார்ப்பதற்காக வண்டியை விட்டு கீழே இறங்கியதும், அங்கிருந்த மக்கள் அவரை சுற்றி வளைத்துக் கொண்டார்கள். அவரது காரையும் மறித்தார்கள். குடியரசுத் தலைவரின் பாதுகாவலர்கள் அவரை மிகுந்த சிரமத்துக்கு இடையில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள்." என்கிறார்.

கற்பனைகூட செய்து பார்க்கமுடியாத வன்முறை

இது தொடக்கம்தான். சீக்கிய சமூகத்தை சேர்ந்த குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்கின் நிலைமையே இப்படி என்றால், மற்றவர்களின் நிலையை சிந்தித்துப்பாருங்கள்!

அதன்பிறகு அடுத்த இரண்டு நாட்களுக்கு சீக்கியர்களுக்கு எதிராக நடந்தவை அனைத்தும் கற்பனைகூட செய்து பார்க்கமுடியாத கொடூரமான சம்பவங்கள்.

1984 நவம்பர் 2: இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் ராகுல் பேதி தன்னுடைய அலுவலகத்தில் இருந்தார். டெல்லியில் திரிலோக்புரி பகுதியில் 32வது பிளாக்கில் சீக்கியர்கள் பலர் வெட்டிக் கொல்லப்படுவதாக தகவல் கிடைத்தது.

"எங்கள் அலுவலகத்திற்கு வந்த மோகன் சிங் என்பவர் திரிலோக்புரியில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் பற்றி சொன்னார். அதை கேள்விப்பட்ட நான், அலுவலகத்தில் இருந்து மேலும் இருவரை அழைத்துக் கொண்டு அவருடன் அங்கு சென்றேன். எங்களை பல இடங்களில் கும்பல்கள் தடுத்தன. ஆயிரக்கணக்கான மக்கள் கும்பல்களில் இருந்ததை கண்டு அதிர்ச்சியாக இருந்தது." என்கிறார் ராகுல்.

"எப்படியோ மாலைவேளையில் மோகன் சிங் சொன்ன இடத்தைச் சென்றடைந்தபோது, சுமார் 240 அடி நீளமான தெருவில் நடந்து செல்லவே இடம் இல்லாத அளவு சடலங்களும், வெட்டுப்பட்ட உடல் பாகங்களும் இறைந்துகிடந்தன. கால் வைக்கவே இடம் இல்லாமல் இருந்த நிலையை பார்த்து திகைத்து நின்றோம்."

"குழந்தைகள், பெண்கள் என பாகுபாடில்லாமல் அனைவரும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். அங்கு இறந்து கிடந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 320 என்று பிறகு தெரியவந்தது. அதுபோன்ற கொடூரமான காட்சியை வாழ்க்கையில் மறக்கமுடியாது. சுமார் பத்தாயிரம் மக்கள் அங்கு சுற்றி வளைத்திருந்தார்கள்." என்கிறார் ராகுல்.

கேள்விக்குள்ளாகிய போலிசாரின் நடவடிக்கை

இந்திய விமானப்படையில் கேப்டனாக பணிபுரிந்து, 1971 ல் மகாவீர் சக்ரா விருதுபெற்ற மன்மோகன் வீர் சிங் தல்வார் சந்தித்தது வேறுவிதமான பிரச்சனை. ஐந்தாயிரம் பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டை சூழ்ந்து தீவைத்தது.

அவரிடம் அந்த சம்பவம் பற்றி கேட்டறிய விரும்பினோம். ஆனால் அதைப்பற்றி நினைத்துப் பார்க்கவே விரும்பாத அவர், "பழைய புண்ணை மீண்டும் கிளறி ரணமாக்காதீர்கள்" என்று சொல்லிவிட்டார்.

ஆனால், தற்போது கலிஃபோர்னியாவில் வசிக்கும் ஜஸ்வீர் சிங் அந்த அவலத்தில், தன் குடும்பத்தினர் கொத்தாக கொல்லப்பட்ட கொடூரத்தை பகிர்ந்துக் கொள்கிறார்.

"டெல்லியில் யமுனை நதிக்கு அருகில் இருக்கும் ஷாத்ராவில் எங்கள் வீடு இருந்தது. எங்களுடைய கூட்டுக் குடும்பத்தில் மொத்தம் 26 பேரை கொன்று குவித்தார்கள். 33 ஆண்டுகளாக கணவன் இல்லாமல், எப்படி வாழ்கிறாய் என்று கேட்டு அம்மாவை கேவலப்படுத்தினார்கள், பிற பெண்களையும் அசிங்கமாக பேசினார்கள்." என்கிறார் ஜஸ்வீர் சிங்.

"எங்கள் முழுக் குடும்பமும் கொன்று குவிக்கப்பட்டது. குழந்தைகள் காப்பாற்ற யாருமே இல்லாமல் அனாதையாக நின்றார்கள். அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வர முடியாமல் மனதளவில் பாதிக்கப்பட்டோம்." ஜஸ்வீர் மனதின் வடுக்களை வலியுடன் கூறுகிறார்.

இதில் காவல்துறையின் பங்கு குறித்த கேள்விகள் எழுந்தன. புகார்களை போலீசார் கண்டுக்கொள்ளாமல் விட்டதோடு, சில இடங்களில் வெறி கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியபோது அவர்களுக்கு துணையாக போலீஸ் செயல்பட்டது என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

"போலிஸ், சீக்கியர்களை காப்பாற்றுவதற்கு பதிலாக அவர்களுக்கு எதிராக செயல்பட்டது." என்று கூறுகிறார் கலவரங்களுக்கு பிறகு சீக்கியர்களின் சார்பில் நீதிமன்றங்களில் வாதிட்ட வழக்கறிஞரும், 'When a tree shook delhi: The 1984 Carnage and Its Aftermath' என்ற புத்தகத்தை இணைந்து எழுதியவருமான ஹர்விந்தர் சிங் ஃபுல்கா.

"கல்யாண்புரி காவல்நிலையத்தில் கிட்டத்தட்ட 600 பேர் கொல்லப்பட்டனர். படுகொலைகளில் பெரும்பாலானவை நவம்பர் முதல் தேதி நிகழ்ந்தன. அங்கு காவல்துறையினர் கைது செய்த 25 பேரும் சீக்கியர்கள்தான்."

"நவம்பர் முதல் மற்றும் இரண்டாம் தேதிகளில் வேறு யாரையும் காவல்துறையினர் கைது செய்யவேயில்லை. அதுமட்டுமல்ல, சீக்கியர்களை பிடித்து வன்முறை செய்யும் கும்பலிடம் போலீசார் ஒப்படைத்தார்கள்." என்கிறார் ஹர்விந்தர் சிங் ஃபுல்கா.

'வன்முறை திட்டமிடப்பட்டதா?'

இங்கு எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த கலவரங்கள் திடீரென்று நடைபெற்றதா? அல்லது வேண்டுமென்றே திட்டமிடப்பட்டதா?

'When a tree shook delhi: The 1984 Carnage and Its Aftermath' புத்தகத்தை எழுதிய மனோஜ் மித்தாவின் கருத்துப்படி, நடைபெற்ற எல்லா சம்பவங்களுமே அரசியல் தலைவர்களின் ஆசீர்வாதத்துடனேயே நடைபெற்றது.

இந்திராகாந்தி கொல்லப்பட்ட அக்டோபர் 31ஆம் தேதி, நடைபெற்ற வன்முறை வேண்டுமானால் திடீரென்று இயல்பாக வெகுண்டெழுந்த சீற்றத்தால் நடைபெற்றதாக இருக்கலாம்.

ஆனால் நவம்பர் முதல் மற்றும் இரண்டாம் தேதிகளில் நடந்த சம்பவங்கள் திட்டமிடப்படாமல் நடந்திருக்க முடியாது. நாட்டின் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதும், வன்முறைகள் வெடித்தெழும் என்று கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏன்?

மனோஜின் கருத்துப்படி, "வன்முறை கோரதாண்டவம் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்கு பிறகே, அதாவது நவம்பர் முதல் நாளன்றுதான் அரங்கேறியது."

"அரசியல் தலைவர்கள் தங்கள் பகுதிகளில் கூட்டம் நடத்தி, திட்டமிட்டார்கள். மக்கள் ஆயுதங்களுடன் வன்முறை செயல்களில் ஈடுபட முழுமையாக தயார் செய்தார்கள். அது போலீசுக்கும் தெரியும், அவர்களும் அரசியல் தலைவர்களுக்கு உதவினார்கள்."

வன்முறை செயல்கள் அரங்கேறியது, அவற்றை தடுக்காமல் போலீசார் கைகட்டி வேடிக்கைப் பார்த்தது ஆகியவை, இந்த சம்பவங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டவை என்பதை தெளிவாக காட்டுகிறது என்கிறார் ஹர்விந்தர் சிங்.

"சீக்கியர்களின் வீடு எது என்பது போன்ற குறிப்பான தகவல்கள் ஆயுதங்களை ஏந்திய கும்பலுக்கு தெரிந்திருந்தது. ஆயிரக்கணக்கான லிட்டர் மண்ணெண்ணெய் அவர்களுக்கு எப்படி கிடைத்தது? சுலபமாக பற்றி எரியக்கூடிய வெடிமருந்து பொருட்களும், பல்வேறு அளவுகளில் இரும்புக் கம்பிகளும் அவர்களிடத்தில் இருந்தது."

அரசியல்வாதிகளின் விளையாட்டு

இங்கு பல்வேறு கேள்விகள் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. போலீசார் ஏன் இப்படி நடந்துக் கொண்டார்கள்? அவர்கள் கடமையை ஏன் சரியாக செய்யவில்லை. காவல்துறை, அரசியல்வாதிகளின் கைப்பாவையாக ஏன் மாறியது?

1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களில் போலீசாரின் பங்கை விசாரிக்கும் பொறுப்பு மூத்த போலிஸ் அதிகாரி வேத் மார்வாஹ்வுக்கு வழங்கப்பட்டது. அவர் தனது அறிக்கையை 1985ஆம் ஆண்டின் மத்தியிலேயே வழங்கிவிட்டார். அவர் தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கைகள் பிறகு அமைக்கப்பட்ட வேறொரு குழுவிடம் வழங்கப்பட்டது.

"போலீசார் ஒரு கருவிதான். தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் கருவியை பயன்படுத்தலாம். அரசியல்வாதிகள் தங்களிடமிருந்து விரும்புவதை போலிஸ் அதிகாரிகள் குறிப்பாக புரிந்துகொள்கிறார்கள். அரசியல்வாதிகளின் எழுத்துப்பூர்வமான அல்லது வாய்வழி உத்தரவுகளுக்காக காத்திருப்பதில்லை."

"ஆனால் அரசியல்வாதிகளின் விருப்பத்திற்காக செயல்படாமல், மக்களின் நலனுக்காக கடமையாற்றும் அதிகாரிகளும் இருந்தார்கள். கலவரத்தின்போது அதுபோன்ற இடங்களில் நிலைமை கட்டுக்குள் இருந்தது. முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் டெல்லி சாந்தினி செளக் பகுதியில் மிகவும் பிரபலமான குருத்வாரா இருக்கிறது". என்கிறார் வேத் மார்வாஹ்.

"அங்கு காவல்துறை துணை ஆணையராக பொறுப்பில் இருந்த மேக்ஸ்வெல் பரேரா அந்தப் பகுதியில் சீக்கியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்தார். அரசியல்வாதிகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்த போலிசார் இருந்த பகுதிகளில் வன்முறை தாண்டவமாடியது."

வெட்கித் தலைகுனிந்த அரசு

இந்திராகாந்தி இறந்து 21 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக்கோரினார். அவரின் தலை வெட்கத்தால் தலைகுனிந்தது.

ஆனால் வருத்தம் தெரிவித்ததுடன் அரசு விவகாரத்தை கைகழுவி விடமுடியுமா? சுதந்திர இந்தியாவின் மிகவும் கொடூரமான வன்முறைச் சம்பவங்களின் மோசமான நினைவுகள் அழிந்துவிடுமா?

காங்கிரஸின் மூத்தத் தலைவர் சல்மான் குர்ஷித் கூறுகிறார், "இதற்கான பதிலை நீதிபதிதான் கொடுக்கமுடியும். நியாயம் கிடைத்துவிட்டாலும்கூட, பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்வார்கள்? நியாயம் கிடைத்துவிட்டாலும், வலியை யாரால் சரி செய்யமுடியும் என்று கேட்பார்கள். நியாயம் கிடைத்ததா இல்லையா என்பதை எப்படி சொல்லமுடியும். யார் பாதிக்கப்பட்டார்களோ, யார் வலியை அனுபவித்தார்களோ, அவர்களே இதற்கான பதிலை அளிக்கமுடியும்".

பூசிமெழுகும் பதில்களும், கருத்துகளும் வன்முறை சம்பவங்களை மறக்கடித்துவிடுமா? சரி, 1984க்கு பிறகு இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நடக்காமல் நின்றுபோய்விட்டதா?

1988இல் பாகல்பூரில், 1992-93இல் மும்பையில், 2002இல் குஜராத்தில் என வன்முறைகள் வெவ்வேறு காரணங்களுக்காக பல்வேறு காலகட்டங்களில் தனது கோரமுகத்தை வெளிக்காட்டிக் கொண்டேயிருக்கிறது.

ஆனால் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை கிடைக்கிறதா? இல்லை என்ற காரணத்தால்தான் வன்முறை இன்றும் இங்கு வாழ்வாங்கு வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :