‘பச்சை’ முட்டாள்தனம் ! – பிபிசி செய்தியாளரின் சொந்த அனுபவம்

ஜஸ்டின் ரவுலட்
படக்குறிப்பு, ஜஸ்டின் ரவுலட்

பச்சைக் குத்திக் கொள்ளப் போகிறீர்களா ? ஐந்து நிமிடம் இதனை படித்து விட்டு உங்கள் முடிவினை எடுங்கள். பிபிசி தென் ஆசியா செய்தியாளர் ஜஸ்டின் ரவுலட் பச்சைக் குத்துவது தொடர்பாக தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

இனி அவரது வார்த்தைகளில்,

நான் முட்டாள்தனமான ஒரு காரியத்தை செய்துவிட்டேன்.

அதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை.

ஒரு வேளை நான் பத்து தலை ராவணனின் தாக்கத்தினால் இந்த காரியத்தை செய்திருக்கலாம்.

ராவணனை முற்றாக தோல்வியுற செய்தார் கடவுள் ராமன்.

இதன் காரணமாக இங்கு தசரா கொண்டாடப்படுகிறது.

இந்துகளால் கொண்டாடப்படும் பண்டிகையிலேயே கட்டுக்கடங்காத பண்டிகை இது.

தசரா பண்டிகையின் போது, கடவுள் ராமனின் மகத்தான வெற்றியை சித்தரிக்கும் நிகழ்வொன்று நடைபெறும்.

அந்த நிகழ்வில், ராமனின் வெற்றியை சித்தரிக்கும் விதமாக, பெரிய மீசை மற்றும் வில்லத்தனமான சிரிப்புக் கொண்ட ராவணன் மற்றும் அவரது படையினரின் உருவபொம்மை பட்டாசுப் பொருட்களால் நிரப்பப்பட்டு, அந்த நிகழ்ச்சியில் இறுதியில் கொளுத்தப்படுவதற்காக வைக்கப்பட்டு இருக்கும்.

கடந்த ஆண்டு என் மனைவியும், நானும் எங்களது நான்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தசரா கொண்டாட்டங்கள் பெரிய அளவில் நடைபெறும், பழைய டெல்லி நகரத்தின் வாயில்களுக்கு வெளியே பரந்து விரிந்திருக்கும் ராம்லீலா மைதானத்திற்கு சென்றோம்.

சூரிய ஒளி பொன் நிறத்தில் மாறும் அந்தப் பொழுதில், நாங்கள் நெருக்கி அடிக்கும் அந்தக் கூட்டத்திற்குள் இணைந்தோம்.

ஆனால், அங்கு நடப்பது எதுவும் எனக்கு தெரியவில்லை. அந்த விழா நடந்த திறந்த வெளி சூழலும் அதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

தசரா பண்டிகை

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் ஜூகாத் என்ற கருத்தாக்கம் உண்டு.

ஒரு சிக்கலான பிரச்சனைக்கு எளிமையான மற்றும் மலிவான தீர்வு என்று அதற்குப் பொருள்.

அடிப்படையில் அது பிரச்சனையை சரியாகத் தீர்க்காமல் தற்காலிகத் தீர்வு காணுவது என்று அர்த்தம்.

இந்த விழாக்களில் விளையாடும் ரங்க ராட்டினங்கள் இது போலத்தான்.

இது போன்ற ஒரு பாதுகாப்பு பட்டைகள் இல்லாத ராட்டினத்தில், நான், எனது 14 மற்றும் 15 வயது மகள்கள் பீதியுடன் சுற்றி வரும்போது, கீழே, காய்ந்த சேற்று நிலத்தில் ஒரு விரிப்பு போடப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.

அந்த விரிப்பின்மீது உட்கார்ந்து கொண்டு, அந்த நபர் , "தற்காலிக" டேட்டு ( பச்சைகுத்துதல்) போட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

எனக்கு பொதுவாக பச்சை குத்திக்கொள்வதே பிடிக்காது.

எங்கே என் குழந்தைகளின் நல்ல சருமத்தில் ஏதாவது அசிங்கமான படம் வரையப்பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே நான் வாழ்பவன்.

எனவேதான் நான் என் மனைவியை ( பெயர் பீ-Bee) என் உடலில் ஒரு தற்காலிக பச்சை குத்திக் காண்பித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தலாம்,அது வேடிக்கையாக இருக்கும் என்று எண்ணினேன்.

ஒரு இதயத்தின் படத்தை போட்டு, அவளின் பெயரை அதில் எழுதினால் என்ன, அவள் பிறந்த நாளுக்காக இதைச் செய்யலாமே என்று எண்ணினேன்?

நிச்சயமாக நான் "தண்ணி" அடித்திருக்கவில்லை. நம்புங்கள் !

என் மனைவியின் பெயருடன், ஒரு ஆர்டின் சின்னத்தையும் பச்சைக் குத்திக் கொள்ள முடிவு செய்து, அந்த பச்சைக் குத்துபவரிடம், "இந்த டாட்டூகளை அழித்து விடலாம் அல்லவா...?" என்றேன்.

அவர், "ஆமாம்,ஆமாம்,ஆமாம்"என்றார்.

"இது தற்காலிகமானது தானே...?"

அதற்கும் அவர், "ஆமாம்,ஆமாம்,ஆமாம்"என்றார்.

"உண்மையான டாட்டூகள் இல்லை தானே...?"

"ஆமாம்,ஆமாம்,ஆமாம்"

அவர் வைத்திருந்த சிறிய பச்சை குத்தும் கருவியின் குரோம் மூக்கு என்னைத் தொடுவதை உணர்ந்தேன்.

என்னால் ஊசி குத்தப்படுவதை உணரமுடியவில்லை.

அவர் எனக்கு மை டப்பாவை காண்பித்தார். ஆம், தற்காலிக பச்சைக் குத்திக் கொள்வதற்கு மை தேவை தானே...?

அவர் லேமினேட் செய்து வைத்திருந்த, அவர் வரைந்த இதயச் ( ஹார்ட்டின்) சின்னம் மற்றும் என் மனைவியின் பெயரில் உள்ள எழுத்துகளான B, E, E ஆகிய எழுத்துகளை அவரிடம் காட்டினேன்.

அவர், "ஆமாம்,ஆமாம்,ஆமாம்" என்று சொல்லியவாரே என் கரங்களை இறுகப் பற்றினார்.

அவர் எனக்கு பச்சைக் குத்திக் கொண்டிருந்தார். அது எனக்கு தெரியவே இல்லை. ஏனெனில், எனக்கு அது வலிக்கவே இல்லை.

எனக்கு தெரிந்தவர்களில் சிலர் முன்பே பச்சைக்குத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பச்சைக் குத்திக் கொள்ளும் போது வலிக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

எனக்கு வலிக்கவெல்லாம் இல்லை. சிறு முள் குத்துவது போலதான் நான் உணர்ந்தேன்.

அனால், இது என்னை கவலையடைச்செய்தது. ஆனால், அதற்குள் அவர் கரத்தின் மேற்பகுதியில் சீரற்ற முறையில் இதயச் சின்னத்தை வரைந்திருந்தார்.

காணொளிக் குறிப்பு, ராவணனை வதம் செய்யாமல் வழிபட்டு வரும் ஓர் இந்திய கிராமம்

இதற்கு முப்பது நொடிகள் தான் ஆகி இருக்க வேண்டும்.

பின் அவர் வார்த்தைகளை பச்சைக் குத்த தொடங்கினார்.

Love என்று எழுதுவதற்காக முதலில் L என்ற வார்த்தையை குத்தினார். பின் 'O' என்ற வார்த்தையை குத்த தொடங்கினார்.

இப்போது எனக்கு கவலையாக இருந்தது. நான் என் கரங்களை இழுக்க முயன்றேன்.

"வேண்டாம், வேண்டாம், வேண்டாம்" என்று பச்சை குத்துபவரிடம் கூறியபடியே கரங்களை இழுத்தேன்.

என் கரங்களை இழுத்த பின், என் கரங்களில் இருந்த மையை பதற்றத்துடன் அழித்தேன்.

கருப்பும் -நீலமும் கலந்த அந்த மை அப்போதும் அழியவில்லை,ஆனால், அப்போது பச்சை குத்திய பகுதி சிறிது வீங்கி இருந்ததை என் விரல்கள் உணர்ந்தன.

பின் கூட்டத்தில் இருந்த என் மனைவியை கண்டடைந்த போது, என் கரங்களை அவளிடம் காட்டினேன். அவள், "என்ன செய்து இருக்கிறீர்கள்?" என்றார் நடந்ததை அறியும் ஆவலுடன்.

என் மகள்கள் எக்காளமாக என்னைப் பார்த்து சிரித்தார்கள். ஒரு தந்தை தவறுதலாக பச்சை குத்திக் கொண்டு வந்தால், யார்தான் சிரிக்க மாட்டார்கள்?

அந்த சமயத்தில், முதல் வாணவேடிக்கை அந்த மைதானத்தில் வெடித்தது.

ராவணன் இன்னும் சிறிது நேரத்தில் கொளுத்தப்படப் போகிறார். அவர் இல்லாமல் போக போகிறார், அதுபோல நானும் இப்போது எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பிரச்னையை இல்லாமல் ஆக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அதிலிருந்து உடனே வெளியேற வேண்டுமென்று விரும்பினேன்.

பச்சைக்குத்திக் கொண்டதை காட்டும் ஜஸ்டின் ரவுலட்
படக்குறிப்பு, பச்சைக்குத்திக் கொண்டதை காட்டும் ஜஸ்டின் ரவுலட்

நிச்சயம் இந்த விஷயத்திலிருந்து வெளியேற ஒரு வழி இருக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால், அப்படி ஒரு வழியும் இருக்கவில்லை.

உங்களுக்கு தேவைப்படாத இந்த அறிவுரையை சொல்கிறேன்.

டாட்டூவை நீங்களே அகற்றுவதற்கான குறிப்புகளை எப்போதும் இணையத்தில் தேடாதீர்கள்.

என்னிடமிருந்த ஒரே ஒரு மதுவகையான, ஜின்னை ஊற்றிக் கழுவிப் பார்த்தேன்.

பலிக்கவில்லை.

உப்புக் கரைச்சல் கொண்டு அதை அழிக்க முயன்றேன்.அது காயத்தை உண்டாக்கியதே தவிர டாட்டூ அழியவில்லை.

எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

இப்போது என் கையில் ஒரு வெள்ளை தழும்பும், அதோடு ஒரு மட்டகரமான டாட்டூவும் உள்ளது.

என் மனைவி ரத்தத் தொற்று நோய் ஏதேனும் ஏற்பட்டுவிடுமோ என்று கவலையடைய தொடங்கினாள். அவளின் இந்த கவலையின் காரணமாக, டெல்லியில் நான் ஒரு மருத்துவரை சந்தித்தேன்.

ஜஸ்டின் ரவுலட், அவரது மனைவி பீ

பட மூலாதாரம், Leonie Broekstra

படக்குறிப்பு, ஜஸ்டின் ரவுலட், அவரது மனைவி பீ

தெருவோரமாக இது போன்ற டாட்டூகளை குத்திக் கொள்வது, எவ்வளவு அபாயகரமானது என்பதை அவரிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்பினேன்.

அந்த மருத்துவர் சிரித்துக் கொண்டே, "இதனால் நோய் தொற்று ஏற்படுவது மிக மிக இயல்பான ஒன்று" என்றார்.

மேலும் அவர், "ஏன் இதனால் ஹெபடைடிஸ் A அல்லது B நோய் ஏற்படலாம். ஏன் ஹெ.ஐ.வி பரவும் அபாயம் கூட இருக்கிறது" என்றார்.

"உண்மையாகவா?" என்றேன்.

"ஆம்...ஹெ.ஐ.வி பரவும் பரவலான வழி இது. பல காலமாக இதை பார்த்து வருகிறேன்." என்றார்.

இரண்டு வாரங்களுக்கு பின், இரத்த பரிசோதனையின் முடிவுகள் வந்தன. ஆனால், எந்த நோய்களும் இல்லை.

என் கரங்களில் குத்தப்பட்ட டாட்டூ எங்கும் செல்லப்போவதில்லை. அசிங்கமான அதனை, என் கரங்களில் வைத்துக் கொள்ள போகிறேன்.

ஒரு நிரந்தர நினைவூட்டலாக என் கரங்களிலேயே அதை வைத்துக் கொள்ளப் போகிறேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :