You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மீசை வைத்ததற்காகத் தாக்கப்பட்ட தலித் இளைஞர்கள்; சமூகத் தளங்களில் எதிர்ப்பு பிரசாரம்
மீசை வைத்திருந்ததற்காக குஜராத்தில் இரண்டு தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவதை அடுத்து தாக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சமூக வலைத்தளப் பயன்பாட்டாளர்கள் பலர் தங்கள் வாட்ஸ் அப் கணக்கிலும் மற்றும் டிவிட்டர் பக்கத்திலும் முகப்பு படங்களை மாற்றிவருகின்றனர்.
கடந்த வாரம் குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டத்தில் உள்ள லிம்போதரா கிராமத்தில், மீசை வைத்திருந்த காரணத்துக்காக தலித் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. தாம் மீசை வைத்திருந்ததற்காக ராஜ்புத் ஜாதியைச் சேர்ந்த ஒருவர் தம்மைத் தாக்கியதாக அவர் போலீசில் புகாரும் அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அவரது உறவினர் ஒருவரும் அதே காரணத்திற்காக அதே நபர்களால் கத்தியால் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
இத்தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் ஆதரவைக் காட்டும் விதமாகவும் வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்கள் பலர் தங்களது முகப்பு படங்களை மாற்றி வருகின்றனர்.
ஒரு சிலர் தாங்கள் மீசையுடன் இருக்கும் புகைப்படங்களை முகப்பு படங்களாக வைத்துள்ளனர். மேலும் #MrDalit மற்றும் #DalitWithMoustache போன்ற ஹேஷ் டேக்குகளை டிவிட்டரில் பயன்படுத்தியுள்ளனர்.
தலித் சமூகத்தினர் மீசை வைத்திருப்பது ஆதிக்க சாதியினரை எரிச்சலூட்டுகிறது என்றால் தலித் சமூகத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் மீசை வளர்க்க வேண்டும் என சமூக வலைத்தள பயன்பாட்டாளர் ஒருவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
"மாறிவரும் இந்தியாவில் தலித்துகள் பலர் நன்கு படிக்கவும், உடுக்கவும் தொடங்கியுள்ளனர். ஆனால், சாதியமைப்பில் நம்பிக்கை உள்ளவர்களால் இதை ஏற்க முடியவில்லை. தங்கள் எரிச்சலைக் காட்டுவதற்காக அவர்கள் தலித்துகளிடம் இப்படி நடந்துகொள்கின்றனர்," என்கிறார் குஜராத்தில் தனியார்ப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் மயூர் வேதர். தமது வாட்சப் செயலியில் தமது முகப்புப் படத்தையும் இந்த சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக மாற்றிக்கொண்டதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
குஜராத்தில், தசரா விழாவை ஒட்டி நடந்த நடன நிகழ்ச்சியைப் பார்த்ததற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை தலித் ஒருவர் அடித்தே கொல்லப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த மே மாதம், சஹரன்பூரில் நடந்த சாதிக் கலவரங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான தலித்துகள் தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்