அதிபர் டிரம்புடன் மோதலா?; மறுக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முட்டாள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த நிலையில், டிரம்புடன் உரசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் வதந்தியை டில்லர்சன் மறுத்துள்ளார்.

தான் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவிக்காத ரெக்ஸ் டில்லர்சன், ''இதுபோன்ற சில்லறை விஷயங்களில் தான் தலையிடப்போவதில்லை,'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்து ரெக்ஸ் டில்லர்சன் பரிசீலித்ததாக என் பி சி நிறுவனம் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு டில்லர்சன் அழைப்பு விடுத்தார்.

டிரம்பின் நிர்வாகத்திற்கு தான் அளித்துள்ள கடமை எப்போதும் உறுதியாக இருக்கும் என்றும், தனது தேவை இருக்கும்வரை டிரம்ப் நிர்வாகத்தில் தான் தொடர்ந்து இருப்பேன் என்றும் அந்த சந்திப்பின்போது ரெக்ஸ் டில்லர்சன் திட்டவட்டமாக கூறினார்.

முன்னர், என் பி சி செய்தி நிறுவனம், வெள்ளை மாளிகையிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் என்று குறிப்பிட்டு வெளியிட்ட செய்தியில், கடந்த ஜூலை மாதம் ரெக்ஸ் டில்லர்சன் தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியிருந்தது.

மேலும், அதிபர் டொனால்ட் டிரம்புடனான உரசல் நிலையிலுள்ள பதற்றத்தை தணிக்கும் நோக்கில், ரெக்ஸ் டில்லர்சனுக்கு துணை அதிபர் மைக் பென்ஸ் அறிவுரை வழங்கியதாகவும் என் பி சி வெளியிட்ட செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த செய்தியை ரெக்ஸ் டில்லர்சன் மறுத்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்