You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அழிவுப்பாதைக்கு வழி அமைத்துவிட்டார் அருண் ஜேட்லி: யஷ்வந்த் சின்ஹா கடும் தாக்கு
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அமைச்சரவையில் நிதியமைச்சராக பணியாற்றிய யஷ்வந்த் சின்ஹா, தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் அவர் எழுதியிருக்கும் கட்டுரையில், நாட்டின் பொருளாதாரமானது மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியில் பலருக்கு இதே எண்ணம் இருந்தாலும் மேலிடத்தின் மீதான அச்சத்தால் அமைதி காப்பதாகவும் கூறுகிறார் யஷ்வந்த் சின்ஹா.
'நான் இப்போது பேச வேண்டும்' (I need to speak up now) என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கும் கட்டுரையில், "நாட்டின் பொருளாதார நிலைமையை நிதியமைச்சர் மோசமாக்கிவிட்டார். இந்த நிலையில் நான் அமைதியாக இருந்தால், நாட்டிற்கு ஆற்றவேண்டிய கடமையில் இருந்து தவறியவனாவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
'தேர்தலில் தோற்றபிறகும் ஜேட்லிக்கு வாய்ப்பு'
யஷ்வந்த் சின்ஹா கூறுகிறார், "நான் சொல்வதே கட்சியில் மற்றவர்களின் கருத்தாக இருந்தாலும், அச்சத்தினால் ஏதும் பேசாமல் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்."
எல்லா அமைச்சர்களிலும் திறமையானவராக அருண் ஜேட்லி கருதப்படுகிறார். 2014 தேர்தல்களுக்கு முன்னரே அவர் புதிதாக அமையவிருக்கும் அரசில் நிதியமைச்சராக இருப்பார் என்று தெரிந்துவிட்டது. அமிர்தசரஸ் மக்களவைத் தேர்தலில் அவர் தோல்வியடைந்த நிலையிலும், அவர் அமைச்சராவதற்கு தடையேதும் எழவில்லை.
இதுபோன்ற சூழ்நிலையில் அடல் பிஹாரி வாஜ்பாய், தனது நெருங்கிய கூட்டாளிகளான ஜஸ்வந்த் சிங், பிரமோத் மகாஜன் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடமளிக்கவில்லை என்பதையும் யஷ்வந்த் சின்ஹா நினைவுகூர்கிறார்.
ஒரே சமயத்தில் நான்கு அமைச்சரவை பற்றி கேள்வி
பிரதமர் நரேந்திர மோதியின் அரசில் ஜேட்லி எவ்வளவு முக்கியமானவர் என்பதை அவருக்கு நான்கு அமைச்சரக பொறுப்புகள் வழங்கப்பட்டதில் இருந்து தெரிகிறது. தற்போதும் மூன்று அமைச்சரவைகளுக்கு அவர் பொறுப்பேற்றிருக்கிறார் என்று கூறுகிறார் யஷ்வந்த் சின்ஹா.
"நிதியமைச்சராக பதவி வகித்திருக்கும் எனக்கு அந்த பொறுப்பின் பணிச்சுமைப் பற்றித் தெரியும். எவ்வளவு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்? நிதியமைச்சகத்தின் பணியை மட்டுமே கவனித்துக் கொள்ளும் அமைச்சர் நமக்குத் தேவை. ஜேட்லி போன்ற சூப்பர்மேன்கூட இந்த பொறுப்பை சரியாக செய்ய முடியவில்லை"
அருண் ஜேட்லி பல வழிகளில் அதிர்ஷ்டமான நிதியமைச்சர் என்றே கூறலாம். அவருக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. ஆனால் அவர் அனைத்தையும் வீணடித்துவிட்டார் என்கிறார் முன்னாள் நிதியமைச்சர்.
பணவிலக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி
யஷ்வந்த் சின்ஹாவின் கருத்துப்படி, "இன்று பொருளாதாரம் என்ன நிலையில் இருக்கிறது? தனியார் முதலீடு வீழ்ச்சியடைந்துவிட்டது. தொழில்துறை உற்பத்தி சுருங்கிக் கொண்டே செல்கிறது. விவசாயமோ நெருக்கடியில், கட்டுமானம் மற்றும் பிற சேவைத்துறைகளும் மந்தமாகிவிட்டன. ஏற்றுமதி கடினமான நிலையை எதிர்கொள்கிறது, பணவிலக்க நடவடிக்கையோ பலனை தரவில்லை. பணவிலக்கமும், கவனக்குக்றைவாக அமல்படுத்தப்ப்ட்ட ஜி.எஸ்.டி வரிவிதிப்பும் பலரை பாதித்துவிட்ட்து. புதிய வாய்ப்புகள் எதுவுமே கண்ணுக்கு தெரியவில்லை."
சின்ஹா கூறுகிறார், "காலாண்டுக்கான வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. பணவிலக்க நடவடிக்கை இதற்கு காரணமில்லை என்று அரசு கூறுகிறது. இந்த விஷயத்தில் அவர்கள் சொல்வது உண்மைதான். வளர்ச்சி விகிதம் குறைவது அதற்கு முன்பே தொடங்கிவிட்டது. பணவிலக்க நடவடிக்கை என்பது வளர்ச்சிக் குறைவு என்ற தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிவிட்டது."
பொருளாதார பின்னடைவிற்கான தொழில்நுட்ப காரணங்களையும் முன்னாள் நிதியமைச்சர் கூறுகிறார். இது குறித்து பிரதமர் மோதியும் கவலையடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அருண் ஜேட்லியை இலக்கு வைக்க காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு சரியாகன சந்தர்ப்பம் கிடைத்தால் அவர் அதை விட்டுவிடுவாரா என்ன?
ட்விட்டரில் யஷ்வந்த் சின்ஹாவின் கட்டுரையை பதிவிட்டுள்ள அவர், "லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன், உங்கள் இணை விமானி மற்றும் நிதியமைச்சர் பேசுகிறேன். உங்கள் இருக்கை பெல்ட்டை கட்டி எச்சரிக்கை நிலைக்கு வரவும். நமது விமானத்தின் இறக்கைகள் காணாமல் போய்விட்டன".
காங்கிரஸ் கட்சிக்கு கொண்டாட்டம்
யஷ்வந்த் சின்ஹா அருண் ஜேட்லி மீது நேரடியாக தாக்குதல் நடத்தியதால், சமூக ஊடகங்களில் சர்ச்சைகளும் சூடுபிடித்தன. காங்கிரஸ் கட்சிக்கோ சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்த கதையாகிவிட்டது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டிருக்கிறார்.
"யஷ்வந்த் சின்ஹா அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உண்மையைக் கூறிவிட்டார். இனிமேலாவது பொருளாதாரம் மூழ்கிவிட்டது என்ற உண்மையை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? முதல் உண்மை: 5.7% வளர்ச்சி விகிதம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் வளர்ச்சி விகிதம் 3.7% அல்லது அதைவிட குறைவாக உள்ளது. இரண்டாவது உண்மை: மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு புதிய விளையாட்டு."
ஆதரவு கொடுக்கும் மணீஷ் திவாரி
ஒரு வீடியோவை பதிவிட்டு கூறுகிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி., "பொருளாதாரம் சிக்கலில் இருப்பதாக சின்ஹா கூறுவது சரியானதே. மோதி தலைமையிலான அரசில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்திய பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்துவிட்டார். நாட்டு நடப்பைப் பற்றி பேரரசருக்கு யாராவது ஒருவர் சொல்லித்தானே ஆகவேண்டும்? யஷ்வந்த் சின்ஹா அந்த வேலையை செவ்வனே செய்துவிட்டார்."
யஷ்வந்த் சின்ஹாவின் கருத்துகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக ஊடகங்களில் பல கருத்துகள் வலம் வருகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்