You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணையே குறை கூறிய நீதிமன்றம்
ஓர் இளம் பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை இடை நிறுத்தம் செய்தது மட்டுமல்லாமல், பாதிப்புக்கு ஆளான பெண்ணையே "ஒழுக்கமற்றவர்" என்று கூறியுள்ள ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பு பிற்போக்காக இருப்பதற்காக தனித்து நிற்கிறது என்று டெல்லியில் உள்ள பிபிசியின் செய்தியாளர் கீதா பாண்டே குறிப்பிடுகிறார்.
தங்கள் சக மாணவி ஒருவரை கூட்டு பாலியல் வல்லுறவு செய்த குற்றத்திற்காக, கீழமை நீதிமன்றம் ஒன்றினால் கடந்த மார்ச் மாதம் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட ஜிண்டால் குளோபல் லா ஸ்கூல் என்னும் சட்டக் கல்லூரியின் மாணவர்கள் மூவருக்கு, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு பிணை வழங்கியுள்ளது.
அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹர்திக் சிக்ரி மற்றும் கரண் சப்ரா ஆகிய இருவருக்கும் 20 ஆண்டுகளும், அவர்களது நண்பர் விகாஸ் கார்குக்கு 7 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது.
வேறு சில குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக அவர்களுக்கு குறைந்த கால தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.
நீதிமன்றத்தின் ஆவணங்களின்படி, சிக்ரியுடன் கடந்த 2013 நவம்பர் மாதம் பாதிக்கப்பட்ட பெண், ஒரு மாத காலம் மட்டும் விருப்பத்தின்பேரில் உறவில் இருந்த பின்னர், அவருடனான உறவை முறித்துள்ளார்.
ஆனால், அதற்குப் பிந்தைய 18 மாதங்கள், சிக்ரி அவரது நிர்வாணப் புகைப்படங்களை பயன்படுத்தி, அவரை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்ததுடன், தன் நண்பர்களுடன் பாலுறவு கொள்ளவும் அவரைக் கட்டாயப்படுத்தியுள்ளார். ஒரு முறை சிக்ரி மற்றும் சப்ரா ஆகியோர் அந்தப் பெண்ணை கூட்டு வல்லுறவு செய்துள்ளனர்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்படும்போது, தங்களை பிணையில் விடுவிக்குமாறு அவர்கள் மூவரும் மனு செய்ததற்கு நீதிமன்றம் இசைவு தெரிவித்தது.
சிறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் பல ஆண்டுகளாக சிறையில் வாடும் ஒரு நாட்டில், இப்படியொரு பெரும் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பிணையில் விடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"பாதிக்கப்பட்டவரையே அவமானப்படுத்தும் மிகச் சில உதாரணங்களில்" ஒன்று என்று அந்த 12 பக்க நீதிமன்ற உத்தரவை இந்திய ஊடகங்கள் வர்ணித்துள்ளன.
பியர் அருந்துதல், புகை பிடித்தல், போதைப்பொருள் உட்கொள்ளுதல், தன் அறையில் ஆணுறையை வைத்திருத்தல், தன் பெற்றோருடன் வசிக்காமல் இருத்தல் ஆகியவற்றால் அவர் வல்லுறவு செய்யப்பட்டதாக அந்த உத்தரவில் அவர் மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தங்கள் உத்தரவில் நீதிபதிகள் மகேஷ் கிரோவர் மற்றும் ராஜ் சேகர் அற்றி ஆகியோர், "பாதிக்கப்பட்டவரின் கவலைகள், சமூகத்தின் தேவைகள் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் நீதியின் கூறுகள்" ஆகியவற்றை சமநிலைப்படுத்த முயல்வதாகக் கூறியுள்ளனர்.
"இந்த இளம் உள்ளங்கள் கல்வி, தங்களை திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பு, சமூகத்தில் இயல்பான மனிதர்களாக வாழ்வதற்கான வாய்ப்பு ஆகியவை மறுக்கப்பட்டால், அது ஓர் அபத்தமான விடயமாகும்," என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தத் தீர்ப்பு இந்தியாவின் பல பகுதிகளிலும் போராட்டங்களை தூண்டியுள்ளதுடன், சமூக ஊடகங்களிலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்தத் தீர்ப்பை கண்டித்து பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் change.org இணையத்தளத்தில் ஒரு மனுவையும் உருவாக்கியுள்ளனர்.
இந்தத் தீர்ப்பு அப்பெண்ணுக்கு, "பாலியல் வல்லுறவுக்கு ஆகாமல் இருக்கும் உரிமை இல்லை" என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கருணா நந்தி பிபிசியிடம் கூறியுள்ளார்.
"பெண்கள் சமத்துவத்திற்காக போராடிப் பெற்ற சட்டப்பூர்வமான சமத்துவம் ஆகியவை இத்தகைய தீர்ப்பால் பறிபோகும்," என்றும் கூறுகிறார் அந்தப் பெண் வழக்கறிஞர்.
"விருப்பத்தின்பேரில் சம்மதம் தெரிவிப்பதற்கான சட்டப்பூர்வமான விளக்கத்தையும் , 'எளிதில் உடன்படக்கூடிய' குணம் கொண்டுள்ள பெண்களுக்கும் இது பொருந்தும் என்றும் தெளிவாக உணர்த்தும் முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் அறியாத வகையில் அமைந்துள்ளது. விருப்பத்தின்பேரில் உறவு கொண்ட பின்னர் நிகழும் எந்த பாலுறவும் வல்லுறவே," என்கிறார் கருணா.
ஆணாதிக்கம் ஆழமாக வேரூன்றியுள்ள இந்த சமுதாயத்தில் பாலியல் குற்றங்களுக்காக பெண்கள் மீது குற்றம் சாட்டப்படுவது இயல்பாக உள்ளது. ஜீன்ஸ் மற்றும் குட்டை பாவாடை அணிவது, ஆண் நண்பர்களுடன் பழகுவது, செல்பேசி பயன்படுத்துவது, இரவு நேரங்களில் வெளியில் செல்வது ஆகியவை பாதிக்கப்பட்டவர்கள் மீதே குறை கூறுவதற்கான காரணங்களாக உள்ளன.
2003-ஆம் ஆண்டு வரை பாதிக்கப்பட்டவரையே அவமானப்படுத்துவது ஒரு சட்டத்திலேயே இடம் பெற்றிருந்தது.
இந்திய சாட்சிய சட்டம் 1872-இன் பிரிவு 155(4), பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்கள் 'பொதுவாகவே மோசமான நடத்தை உடையவர்கள்' என்று குற்றம் சாட்டப்பட்டவர்களால் நிரூபிக்கப்பட்டால், அந்தப் பெண்களையே விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கான வழிவகை இருந்தது.
1980-இல் இந்த பழமைவாத சட்டத்தை திருத்த பரிந்துரை செய்த இந்திய சட்ட ஆணையம், பாதிக்கப்பட்டவர்களின் மாண்பையும் சுயமரியாதையையும் அழிக்கும் வகையில் அமைந்திருப்பதால் இப்பிரிவை நீக்கவும் 2000-ஆம் ஆண்டு பரிந்துரை செய்தது.
பல தசாப்தங்கள் கடந்து வந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழி சுமத்தப்படுவது இன்னும் தொடர்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்