You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வரலாறு காணாத பொருளாதார ஏற்றத்தாழ்வு: ஒரு சதவீதம் பேரிடம் 22 சதவீத வருமானம்
இந்தியாவில் ஏழை பணக்காரர்களிடையே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு, ஏறத்தாழ ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு தற்போது உச்சத்தில் இருக்கிறது என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு.
இந்த ஏற்றத்தாழ்வு தற்போது திடீரென அதிகரித்துள்ளது என்கிறார்கள் இந்த ஆய்வைச் செய்த ஃபிரஞ்ச் பொருளியல் வல்லுநர் லூகாஸ் சேன்சல், தாமஸ் பிக்கெட்டி ஆகியோர்.
இவர்களில் பிக்கெட்டி என்பவர், 2013ல் வெளியாகி அதிகம் விற்கப்பட்ட 'மூலதனம்' என்ற நூலின் ஆசிரியர். முதலாளித்துவம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை பற்றி இ்ந்த நூல் ஆய்வு செய்தது.
இவர்கள் தற்போது செய்துள்ள புதிய ஆய்வின் விவரம்:
குடும்ப நுகர்வு கணக்கெடுப்பு, அரசாங்கக் கணக்குகள், 1922ல் இந்தியாவில் வருமான வரி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து 2014ம் ஆண்டு வரையிலான வருமான வரிப் புள்ளிவிவரம் ஆகியவற்றை அவர்கள் ஆய்வு செய்தனர்.
வருமான அடிப்படையில் மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதம் பேருக்கு நாட்டின் மொத்த வருமானத்தில் எத்தனை சதவீதம் செல்கிறது என்பதை 1922ல் இருந்து ஆய்வு செய்யும்போது அது தற்போது எப்போதும் இல்லாத உயரத்தில் உள்ளது என்கிறது புள்ளிவிவரம்.
மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதம் பேர் 1930களில் 21 சதவீதத்துக்குக் குறைவான தேசிய வருமானத்தைப் பகிர்ந்துகொண்டனர். இந்த விகிதம் படிப்படியாகக் குறைந்து மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதம் பேர் 1980களில் 6 சதவீத வருமானத்தைதான் பகிர்ந்துகொண்டனர். தற்போது இந்த 1 சதவீதம் பேர் மொத்த வருவாயில் 22 சதவீதத்தை ஈட்டுகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளில் மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதம் பேரின் வருமானம் அதிகம் செறிவடைந்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் அதிரடியான மாற்றங்களுக்கு உள்ளானது என்பது உண்மை.
1970 வரை இந்தியப் பொருளாதாரம் கராறான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்தது. சமூகவாத நோக்கில், கொள்கை சார்ந்த திட்டமிடல் நடந்தது. ஆண்டுக்கு 3.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி தவழ்ந்துதான் சென்றது. மேம்பாடு பலவீனமாகவும், ஏழ்மை நிறைந்தும் இருந்தது.
கட்டுப்பாடுகள் லேசாகத் தளர்த்தப்பட்டதும், வரிவிகிதம் குறைந்ததும், மிதமான பொருளாதார சீர்திருத்தமும் 1980களில் வளர்ச்சி வேகம் பிடிக்கக் காரணமாக இருந்தன. வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 5 சதவீதம் என்னும் அளவை எட்டியது.
90களில் சற்று வலுவான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதையடுத்து சுறுசுறுப்படைந்த வளர்ச்சி விகிதம் 2000க்குப் பிந்தைய பத்தாண்டுகளின் மையப்பகுதியில் இரட்டை இலக்கத்தை நோக்கி நகர்ந்தது.
அதன்பிறகு வளர்ச்சி விகிதத்தின் வேகம் குறையத் தொடங்கியது. எனினும், உலகத்தில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாகவே இந்தியா இருந்து வருகிது.
இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் இடையிலான முதல் காலாண்டில் வளர்ச்சி 5.7 சதவீதமாக இருந்தது. கடந்த மூன்றாண்டு காலத்தில் வளர்ச்சி மிகத் தாமதமாக இருந்த காலகட்டம் இது.
மெலிந்த பொருளாதாரத் தேவைகள்
ரூ.500, 1000 நோட்டுகளை செல்லாமல் ஆக்கிய சர்ச்சைக்குரிய நடவடிக்கை, சரிந்துவரும் தனியார் முதலீடு, பலவீனமான கடன் வளர்ச்சி ஆகியவையே வளர்ச்சி குறைந்ததற்கு முக்கியக் காரணிகள். இப்படி வளர்ச்சி குறைவது கவலைக்குரியதாக இருக்கிறது.
"இருபது ஆண்டுகால வேகமான வளர்ச்சிக்குப் பிறகும் உலகில் உள்ள மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகவே இந்தியா இருக்கிறது. எனவே, அதிவேக பொருளாதார வளர்ச்சிக்கான தேவை முடிந்துவிடவில்லை," என்கிறார் நோபல் பரிசு பெற்றப் பொருளியல் அறிஞர் அமார்த்திய சென்.
1991ல் இருந்து 2012 வரை, அதிலும் குறிப்பாக 2002க்குப் பிறகு செல்வம் ஓரிடத்தில் குவிவது திடீரென அதிகரித்திருப்பது பொருளாதார சமத்துவமின்மை தொடர்பான தங்கள் ஆய்வில் தெரிவதாக லூகாஸ் சேன்சலும், தாமஸ் பிக்கெட்டியும் வாதிடுகின்றனர். உச்சியில் இருக்கிற 10 சதவீதம் மக்களுக்கே இந்தியா ஒளிர்கிறது (2014 கணக்கின்படி எட்டுகோடி பேர்). நடுவில் உள்ள 40 சதவீதம் பேருக்கு அது ஒளிரவில்லை என்று அவர்களது ஆய்வு முடிவு சொல்கிறது.
நுற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் சேர்ந்து உருவாக்கிய முதல் 'உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை'யை இந்தப் பொருளியல் வல்லுநர்கள் டிசம்பரில் வெளியிட இருக்கிறார்கள். இந்தியாவின் ஏற்றத்தாழ்வை பிற நாடுகளின் நிலைமையோடு ஒப்பிடுவதோடு இதை எப்படிக் கையாளவேண்டும் என்பது தொடர்பான தங்கள் ஆலோசனைகளையும் அப்போது வழங்குவார்கள்.
தாராளமயத்துக்குப் பல பாதைகள்
குறிப்பிட்ட காலகட்டத்தில் சமமற்ற வளர்ச்சி என்பது இந்தியாவில் மட்டுமே நடக்கவில்லை; ஆனால், சந்தைப் பொருளாதாரம் என்பது ஏற்றத்தாழ்வாகவே இருக்கவேண்டும் என்பதில்லை என்கிறார்கள் இவர்கள்.
உச்சியில் இருக்கிற 1 சதவீதம் பேருக்கும் மற்ற எல்லோருக்கும் இடையிலான வளர்ச்சி வேறுபாடு இந்தியாவில் மிக அதிகமாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உயரத்தில் இருப்பவர்களின் வருமானம் சீனாவில் உள்ளவர்களைவிட அதிவேகத்தில் வளர்ந்துளது.
அடுத்தடுத்து வந்த அரசுகள் வளர்ச்சிக்கென கடைப்பிடித்த வழிமுறைகள் இந்த ஏற்றத்தாழ்வுக்குக் காரணமாகியுள்ளன. 1978க்குப் பிறகு சீனாவும் தாராளமயத்தைக் கடைபிடித்தது. அதனால் வேகமான வருமான வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும் உண்டானது. இப்படி அதிகரித்த ஏற்றத்தாழ்வு 2000வது ஆண்டுகளில் நிதானம் அடைந்தது. இப்போது இந்தியாவில் உள்ளதைவிட சீனாவில் ஏற்றத்தாழ்வு குறைவு.
கம்யூனிசத்தில் இருந்து சந்தைப் பொருளாதாரத்துக்கு "திடீரென்றும் மூர்க்கமாகவும்" மாறிய ரஷியாவில் இந்தியாவில் உள்ளதைப் போன்றே ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.
"மிக அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த பொருளாதாரத்தில் இருந்து தாராளமயப் பொருளாதாரத்துக்கு மாறிச் செல்வதற்குப் பல வழிமுறைகள் உள்ளன என்பதை இது காட்டுகிறது. இப்படி உள்ள பல வழிகளில் அதிக ஏற்றத்தாழ்வுள்ள பாதையை இந்தியா தேர்ந்தெடுத்தது. வேறு பாதையையும் அது தேர்ந்தெடுத்திருக்க முடியும்," என்று சான்சல் தெரிவித்தார்.
உலகின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வந்தாலும் சில நாடுகள் இந்தப்போக்கைத் தடுத்து நிறுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, ஆங்கிலோ சாக்சானியப் பகுதிகளிலோ, வளர்ந்துவரும் நாடுகளிலோ இருப்பதைக் காட்டிலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்றத்தாழ்வு மிகக் குறைவாக இருக்கிறது.
"உலகின் பிற நாடுகளை ஒப்பிடும்போது மேற்கு ஐரோப்பிய நாடுகளில், மூலதனத்தைவிட, தொழிலாளர்களுக்கு சாதகமாக செய்யப்பட்ட சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள், திறமையான வரி அமைப்புகள், கல்வி, வீட்டுவசதி, சுகாதாரம், போக்குவரத்து ஆகியவற்றில் அரசாங்க முதலீடு ஆகியவையே இந்நாடுகளில் ஏற்றத்தாழ்வு குறைவாக இருக்கக் காரணம்".
இந்தியாவில் வெகுமக்களை உள்ளடக்கிய வளர்ச்சி, வருமானம், செல்வம் குறித்த வெளிப்படையான புள்ளிவிவரம் ஆகியவற்றை மேம்படுத்த என்ன செய்யலாம் என்பது பற்றிய தீவிர உரையாடல்கள் நடத்த இந்தப் புதிய ஆய்வு உதவவேண்டும்.
பிற செய்திகள்
- வெளியேற்றம்: தமிழ் நாட்டில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் உணர்வுகள் என்ன?
- பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோதியின் ரொக்க சூதாட்டம் (சிறப்பு கட்டுரை)
- ஊட்டச்சத்துக்கு குறைபாட்டை போக்க வெனிசுவேலா அதிபரின் நூதன "முயல் திட்டம்"
- பாகிஸ்தான் `கௌரவக் கொலை’: மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட காதலர்கள்
- குரங்கு செல்ஃபியின் காப்புரிமை புகைப்பட கலைஞருக்கே!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்