You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெட்ரோல், டீசல் விலையை இந்திய அரசு குறைக்காததற்கு காரணம் அரசியலா, வருவாயா?
- எழுதியவர், பரஞ்சோய் குஹா டாகூர்தா
- பதவி, பொருளாதார ஆய்வாளர்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது அதிகமாகிவிட்டது. ஆனால் இந்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பாதியாக குறைந்திருக்கிறது.
2014 ஜூன் மாதத்தில் 115 டாலர்களாக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை, தற்போது 50 டாலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தியாவின் எண்ணெய்த் தேவைகளில் 80 சதவிகிதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் மொத்த இறக்குமதி செலவில் 33 சதவிகிதம் எண்ணெய்க்காக செலவிடப்படுகிறது.
கச்சா எண்ணெய் தயார் செய்யப்பட்டு, குழாய் மூலம் அனுப்பப்படும் செலவைத் தவிர, சுங்க வரி மற்றும் கலால் வரியால் எண்ணெய் விலைகள் அதிகரித்து, மக்களின் சுமையை கூடுதலாக்குகிறது. இந்த வரிகளை விதிக்கும் மத்திய நிதியமைச்சகம் அதை அதிகரிக்கிறது, வசூலிக்கிறது. இந்த வரிகளின் முழுப்பயனும் அரசுக்கே செல்கிறது.
அரசுக்கு நன்மை
அதாவது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைவதால் கிடைக்கும் பயனில் 75 முதல் 80 சதவிகிதம் அரசுக்கும், எஞ்சிய 20 முதல் 25 சதவிகிதம் வரை மட்டுமே மக்களுக்கும் செல்கிறது.
நுகர்வோரின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது, லிட்டர் ஒன்றுக்கு கொடுக்கும் விலையில் கிட்டத்தட்ட பாதித் தொகையானது அரசுக்கே சென்று சேர்கிறது.
மாநிலத்துக்கு மாநிலம் வரிகள் வேறுபட்டாலும், லாபமடைவது அரசே, நுகர்வோர் அல்ல.
அரசுக்கு லாபமாக இருக்கும் எண்ணெய் விலை, சாதாரண நுகர்வோருக்கு சுமையாகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், குறைந்தபட்சம் ஐந்து லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு எண்ணெய் மூலம் கிடைத்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை என அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும், இந்தியாவில் எண்ணெய் விலை அதிகமாகவே இருக்கிறது.
இதற்கு காரணம் இந்திய அரசு விதிக்கும் சுங்க வரி, மற்றும் கலால் போன்ற வரிகளே.
விலைவாசி உயர்கிறது
பெட்ரோல், டீசலின் விலை உயர்வு அத்துடன் நின்று விடாமல், அதன் தாக்கமாக, போக்குவரத்து செலவு அதிகரித்து அடக்க விலை அதிகரிக்கிறது.
எனவே பிற பொருட்களின் விலைகளும் உயர்ந்து, ஒட்டுமொத்தமாக அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது.
நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைகிறது, மொத்த விலை குறியீடும் அதிகரிக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் விலைவாசி குறையவில்லை என்றால் அதற்கு ஒரே காரணம் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறையாததுதான்.
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறையவில்லை என்று கூறிக்கொண்டே, அரசு தனது கஜானாவை நிரப்புகிறது.
இந்தியன் ஆயில் நிறுவனமோ, பாரத் பெட்ரோலியமோ அவை அரசு நிறுவனங்கள் தானே? பார்க்கப்போனால், எண்ணெய் விலை அதிகமாக இருப்பதால் சில தனியார் நிறுவனங்களும் பயனடைகின்றன. ஆனால் எண்ணெய்த் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கு சொற்பமே.
பெட்ரோல் மற்றும் டீசலின் மீதான வரிகளை அரசு ஏன் குறைக்கவில்லை என்ற மாபெரும் கேள்விக்கான பதில் பிரதம மந்திரியோ அல்லது நிதியமைச்சரிடமே இருக்கிறது என்றாலும், நிதர்சனம் நம் கண் முன்னே தெரிகிறது.
இந்திய அரசின் தரவுகளின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும், மோசமாக இருக்கிறது. தனியார் துறைக்கு முதலீடுகள் வருவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை, வங்கிகளில் கணிசமான பணம் தேங்கிக் கிடக்கிறது.
வருவாய்க்கு வேறு வழி இல்லை
இதுபோன்ற சூழ்நிலையில், கடந்த ஆண்டு உயர் மதிப்புமிக்க ரூபாய் நோட்டுகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டது.
அதனால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டது. அரசுக்கு வருவாய்க்கு வேறு வழியும் இல்லாததால், வருவாயை அதிகரிக்க பெட்ரோலிய பொருட்களுக்கான வரியைத் தவிர அரசுக்கு வேறு மார்க்கம் இல்லை.
எண்ணெய் மீதான வரியை அரசு குறைக்காததற்கும் காரணம் இதுவே.
எண்ணெய் விலையை குறைக்கக்கூடாது என்பதற்கு வேறு எந்தவிதமான அரசியல் ரீதியான காரணமும் அரசுக்கு இல்லை.
உலகின் பல நாடுகளில் இந்தியாவைவிட எண்ணெய் விலை அதிகம் என்று பெட்ரோலிய அமைச்சர் டிவிட்டரில் செய்தி வெளியிடுகிறார்.
ஆனால் வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் பெட்ரோல் டீசல் விலை அதிகம் என்பதை அமைச்சர் குறிப்பிடவில்லை.
ஜப்பான் போன்ற நாடுகளின் தனிநபர் வருமானது, இந்திய குடிமகனின் தனிநபர் வருமானத்தைவிட பத்து மடங்கு அதிகம்.
இதுபோன்ற ஒப்பீடுகளும், தரவுகளும் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துபவை. எனவே இவற்றில் இருந்து சராசரி மனிதன் விலகியே நிற்கிறான்.
(பிபிசி செய்தியாளர் பிரதீப் குமாருடன் மேற்கொண்ட உரையாடலின் அடிப்படையில்)
பிற செய்திகள்
- முடிந்தது காசினி விண்கலனின் நீண்ட பயணம்
- ரோஹிஞ்சா முஸ்லிம்களின் வீடுகள் எரிப்பு: புதிய ஆதாரங்கள்
- இரண்டே மாதங்களில் 38 பில்லியன் டாலர் செலவிட்ட கத்தார்!
- `பாகிஸ்தானில் தவறுதலாக தரையிறங்கிய இந்திய போர் விமானம்'
- அமெரிக்கா: ஹார்வி புயலுக்குப் பிறகு கரை ஒதுங்கிய மர்ம உயிரினம்
- ரோஹிஞ்சா அகதிகளுக்கு உதவிகள் கிடைக்கத் தாமதம் ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்