You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சனியை ஆராய்ந்த காசினி சனியிலேயே மோதி தம்மை அழித்துக்கொண்டது
வளையம் சூழ்ந்த சனிக்கோளைப் பற்றிய மனித குலத்தின் புரிதலை மேம்படுத்த உதவிய அமெரிக்காவின் காசினி விண்கலன் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை தம்மை அழித்துக்கொண்டது.
சனியின் வளிமண்டலத்தில் பாய்ந்து தம்மை அழித்துக்கொள்ளும்படி தரைக்கட்டுப்பாட்டுத் தளம் உத்தரவிட்டது. அதன் பிறகு 1 நிமிடம் பிழைத்திருந்த காசினி பிறகு துண்டுதுண்டாக உடைந்து சிதறியது.
க்ரெனிச் நேரப்படி 11.55க்கு அந்த விண்கலத்துடனான தொடர்பை இழந்தது கலிபோர்னியாவின் பாசடேனாவில் உள்ள காசினி கட்டுப்பாட்டு அறை.
1997 செப்டம்பர் 15ம் நாள் தம் பயணத்தைத் தொடக்கிய காசினியின் நீண்ட பயணம் சரியாக 20 ஆண்டுகள் நிறைவடையும் நாளில் முடிவுக்கு வந்தது.
"அனைவருக்கும் வாழ்த்துகள். இது மிகச்சிறந்த பயணம், காசினி மிகச்சிறந்த விண்கலன், நீங்களெல்லாம் மிகச்சிறப்பான குழு. இத்துடன் இந்தப் பயணம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கிறேன்" என்றார் கட்டுப்பாட்டுக் குழுவிடம் பேசிய நாசாவின் ஏர்ல் மைஸ்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறை விஞ்ஞானிகளிடமிருந்து ஒரு தயக்கமான கைத்தட்டல் வெளியானது.
காசினியின் தொடர்பலை அறுந்து போனது என்பது அந்தக் கலன் சனியின் வாயுவெளியில் விழுந்துவிட்டதைக் காட்டுகிறது. அந்த வேகமான மோதலை அந்தக் கலன் 45 விநாடிகள் மட்டுமே தாக்குப்பிடித்திருக்கும். பிறகு துண்டுகளாகச் சிதறியிருக்கும். அத்துடன் வரலாற்றிலேயே அதிக வெற்றிகரமாக நடந்த ஒரு விண்வெளிப் பயணம் முடிவுக்கு வந்தது.
காசினியின் பயணம் தொடங்கி 20 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் பயணக் காலத்தை கழித்துவிட்டுப் பார்த்தால், அந்தக் கலன் 13 ஆண்டுகளாக சனியை நெருக்கமாகச் சுற்றி ஆராய்ந்து வந்தது. சூரியனில் இருந்து 6வதாக இருக்கும் சனிக்கோளைப் பற்றிய புரிதலை பெருமளவு மாற்றியமைத்தது இந்தக் கலன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்