You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை முதல் ஹ்யூஸ்டன் வரை: வெள்ளத்திற்கு யார் காரணம்?
- எழுதியவர், நித்யானந் ஜெயராமன்
- பதவி, செயல்பாட்டாளர்
சமீபத்தில் அமெரிக்க நகரான ஹ்யூஸ்டனிலும் இந்தியாவின் மும்பை நகரிலும் ஏற்பட்ட வெள்ளம், கடந்த 2015-ஆம் ஆண்டு இறுதியில் சென்னையை உலுக்கிய வெள்ளம் ஆகியவை பருவநிலை மாற்றம் மற்றும் முறையற்ற திட்டமிடல், நிலத்தை பயன்படுத்துதல் ஆகியவை ஒன்றை ஒன்று சந்தித்துக்கொண்டால் எப்படிப்பட்ட பேரழிவு நிகழும் என்பதற்கான முன்னோட்டம் ஆகும்.
மேற்கண்ட மூன்று நகரங்களும் தங்கள் சுய முயற்சியால் பொருளாதார முன்னேற்றம் அடைந்தவை. கட்டுப்பாடற்ற வளர்ச்சியும், நகரமயமாக்கலும் எச்சரிக்கையையும் நல்லறிவையும் மீறி அங்கு நிகழ்ந்தன. ஆனால், தங்கள் தேர்வுகளுக்காக அந்த மூன்று நகரங்களும் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது.
பேரழிவை உண்டாக்கும் வெள்ளத்தை ஒரு சாதாரண நிகழ்வாகக் கருதிக் கையாளப்படுவதைத் தவிர வேறு பாடங்களை யாரும் கற்றுக்கொண்டதாகத் தோன்றவில்லை. இந்தப் பேரழிவுகளில் இருந்து கற்றுக்கொள்ள இயலாமல் இருப்பதைவிடவும், அவ்வாறு கற்றுக்கொள்ளாமல் இருப்பதால் யாருக்கு பயன், யாருக்கு பாதிப்பு என்பதே முக்கியம்.
பெருகி வரும் மக்கள் தொகையால் ஹ்யூஸ்டன் நகரில் வசிப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 2000-ஆம் ஆண்டுக்குப் பின்னர் 20 லட்சம் அதிகரித்துள்ளது. ஹ்யூஸ்டன் நகரின் கடற்கரையைச் சுற்றி மழை நீரை உறிஞ்சக்கூடிய புல்வெளி பறந்து விரிந்திருந்ததாக 'தி எகனாமிஸ்ட்' சஞ்சிகை கூறுகிறது.
அங்குள்ள ஹேரிஸ் கவுண்ட்டியில் இருக்கும் வெள்ள நீர் வடிகால் பகுதிகளில் மட்டும் 2010-க்கு பிறகு 8,600 கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மோசமான சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் பலனளிக்காத வளர்ச்சியை அரசாங்கங்கள் எவ்வாறு நம்பிக்கொண்டிருந்தன என்பதை சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் வெளிப்படுத்தியது.
2015-இல் பருவமழையால் சென்னை நகரமே ஸ்தம்பித்தபோதும், கடந்த டிசம்பர் மாதம், புயலைத் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டபோதும், சென்னையின் வளர்ச்சிக்கான வழிமுறைகளை அது சந்தித்த இன்னல்கள் மாற்றவில்லை.
ஹ்யூஸ்டனைப் போலவே சென்னையும் கடலோர வெள்ள வடிகால் பகுதியில் அமைந்துள்ளது. சென்னை நகரில் இருக்கும் இயற்கையான மற்றும் செயற்கையான வடிகால்களான நதிகள், ஓடைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட சதுப்பு நிலங்களில் இருந்த நீர்நிலைகளே மழை மற்றும் புயல் வெள்ளங்களுக்கு எதிரான அரணாக உள்ளன.
1980-இல் 47 சதுர கிலோ மீட்டராக இருந்த, சென்னை நகரில் கட்டுமானங்கள் எழுப்பப்பட்டிருந்த இடத்தின் பரப்பளவு, 2012-இல் 402 சதுர கிலோ மீட்டராக இருந்ததாகவும், அதே காலகட்டத்தில் சென்னையின் சதுப்பு நிலத்தின் பரப்பளவு 186 சதுர கிலோ மீட்டரில் இருந்து, 71 சதுர கிலோ மீட்டராக குறைந்துள்ளதாகவும், கேர் எர்த் என்னும் ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
"ஏரிகளும் ஆற்றுப்படுகைகளும் ஆக்கிரமிக்கப்பட்டது சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு முக்கியக் காரணம் ," என்று 2015-இல் அமைக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற நிலைக்குழு அதன் அறிக்கையில் கூறியுள்ளது.
இது மற்ற நகரங்களுக்கு எச்சரிக்கையுடன் செயல்படத் தொடங்க வேண்டிய தருணம் என்றும் கட்டுமானத் தொழிலுக்காக சட்டவிரோதமாக நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் கும்பல்களை அரசு தடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாடு அரசு அதைச் செய்யாமல், வெள்ளங்களில் இருந்தும், நதிகளில் அதிகமான நீரோட்டங்களில் இருந்தும் காக்கும் இயற்கையான அரணாக இருந்த சதுப்பு நிலங்களை வாரி வழங்குவதைத் தொடர்ந்தது.
சென்னையின் வடக்குப் பகுதியில் உள்ள எண்ணூர் கழிமுகம் பகுதி 8,000 ஏக்கர் பறந்து விரிந்திருக்கும் சதுப்பு நிலமாகும். சென்னையில் பாயும் மூன்று நதிகளில் ஒன்றான கொசஸ்தலை நதியின் வெள்ளநீரை அது உறிஞ்சுகிறது.
1996 முதல் 2000 வரை, ஒரு பெரிய துறைமுகம், பல நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் தேவைகளுக்காகவே அந்த சதுப்பு நிலப்பரப்பில் 1,000 ஏக்கருக்கு மேலாக விதிகளுக்குப் புறம்பாக ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.
ஜூலை 2017-இல், தமிழக அரசின் காமராசர் துறைமுகத்தின் சார்பில் 1,000 ஏக்கர் பரப்பளவுள்ள கடலை ஒட்டிய நிலப்பரப்பில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்வதற்காக, போலியான வரைபடங்களை வைத்து ஒப்புதல் வழங்கி விதிமீறலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஹ்யூஸ்டனை விடவும் பல மடங்கு மக்கள்தொகை அடர்த்தி நிறைந்த நகரம் சென்னை. பெரும்பாலும் ஏழ்மை நிலையில் இருக்கும் தொழிலாளர்கள், கொசஸ்தலை நதியை ஒட்டியுள்ள பகுதிகளிலும், எண்ணூர் சிற்றோடையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வசிக்கின்றனர். ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளாலும், இனிமேல் நடக்கவுள்ள ஆக்கிரமிப்புகளாலும் அவர்கள் வெள்ள அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.
வெள்ளம் மட்டுமே கவலை தரக்கூடிய விடயமல்ல. ஹார்வி புயல் ஹ்யூஸ்டனில் ஏற்படுத்தியதைப்போல வேதிப்பொருள் தொழிற்சாலை விபத்துக்களும் நிலைமையை மோசமாக்கக்கூடும்.
சென்னையில் உள்ள மணலி பகுதியில் ஒரு பெட்ரோலிய சுத்திகரிப்புத் தொழிற்சாலையும், டஜன் கணக்கில் பெட்ரோலிய வேதிப்பொருள் தொழிற்சாலைகளும் உள்ளன. அவை அனைத்தும் கொசஸ்தலை நதியின் வெல்ல வடிகால் பகுதியில் அமைந்துள்ளன.
2015-இல் ஏற்பட்ட வெள்ளம் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளை பெரிதும் பாதித்தது. நிலக்கரி மற்றும் நிலக்கரி சாம்பல் குவியல்கள் வெள்ளத்தை தடுத்ததால் சிலர் அங்குள்ள மின் உற்பத்தி நிலையத்தில் தஞ்சமடைந்தனர். மற்றவர்கள் வெள்ளநீரில் மாட்டிக்கொண்டனர்.
நியூ யார்க் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டியளித்த எழுத்தாளர் லாரி மெக்மர்ட்ரீ, ஹ்யூஸ்டன் மீண்டும் தன் இயல்பு நிலைகுத் திரும்பும் தன்மை உடைய நகரம் என்றார்.
சாதி, இன, வர்க்க வேறுபாடுகளால் காட்டப்படும் பாகுபாடுகளை அத்தகைய கருத்துகள் மறைக்கின்றன. பணம் படைத்த மேல் தட்டு வர்கத்தினரே பழைய வாழ்க்கைக்குத் திரும்புகின்றனர். ஏழைகள் தாங்கள் பல தசாப்தங்களாக பெற்ற நம்பிக்கையை ஒரே பேரழிவில் இழந்துவிட்டு, தங்கள் வாழ்வை மீண்டும் கட்டமைக்கவோ, பாதிப்புகளில் இருந்து மீண்டு வரவோ முடியாமல் தவிக்கின்றனர்.
சென்னை நகரைத் தாக்கும் வல்லமை உடைய புயல் இன்னும் வரவில்லை. அது வரும்போது, இன்றைய ஆட்சியாளர்கள் எடுத்த முடிவுகள் இந்நகரின் ஏழைகளின் வாழ்வில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பின்விளைவுகளைக் கொண்டுவரும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :