You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்யாவில் வீட்டிற்கு நடுவே முளைத்த சாலை
அண்டை நகரத்தில் பணிபுரியும் ரஷ்ய தம்பதிகள், வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு, அங்கு புதிய சாலை சென்று கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
ரஷ்யாவில் `ஜாவோத் வோஸ்க்ரெசென்ஸ்கி` மாவட்டத்தில் புதிய நெடுஞ்சாலையில் இருக்கும் இடிக்கப்பட்ட வீட்டின் புகைப்படங்கள் ரென் டிவியில் காட்டப்பட்டது. எஞ்சியுள்ள வீட்டின் பகுதியில் யாரும் வசிக்கமுடியாது.
வீட்டு உரிமையாளர்கள் நிரந்தரமாக இங்கு வசிக்கவில்லை. அண்டை நகரான நிஜ்னி நோவ்கோரோட்டில் அவர்கள் பணிபுரிகின்றனர். தங்கள் வீடு இடிக்கப்படுவது பற்றிய தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறுவதாக ரியா நொவொஸ்டி செய்தி நிறுவனம் கூறுகிறது.
"யாரும் வீட்டை இடிக்கவில்லை" என்று முதலில் கூறிய உள்ளூர் அதிகாரிகள், வீட்டு உரிமையாளர்களில் ஒருவரான 'வலெரியா உடாலோவா' வீட்டின் உரிமைக்கான ஆவணங்களை அலுவலகத்திற்கு வந்து காட்டியதும் தங்களது கருத்தை மாற்றிக்கொண்டனர்.
சாலை அமைக்கும் பணி மேற்கொள்வதற்கு முன் ஆய்வு மேற்கொண்டப்போது தவறு நேர்ந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தற்போது கூறுகின்றனர்.
புதிய வீடு கட்டுவதற்காக 3.6 மில்லியன் ரூபிள்கள் ($62,000; £48,000) இழப்பீடு கோரும் உடாலோவா, இந்த பிரச்சனை முடிவுக்கு வரும்வரை சாலையின் நடுவில் கூடாரம் அமைத்து தங்க திட்டமிட்டிருப்பதாக 'லெண்டா செய்தி வலைதளம்' தெரிவிக்கிறது.
வீட்டின் உரிமையாளர்கள் கோரும் இழப்பீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ள உள்ளூர் அதிகாரிகள், ஒரு வாரத்திற்குள் முடிவை தெரிவிப்பார்கள்.
சீரற்ற சாலையில் பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ளமுடியாது என்று உள்ளூர் அதிகாரிகள் மறுத்ததால், தங்கள் கிராமச் சாலையை பழுதுபார்க்கும் பணியை வயது முதிர்ந்த பெண்கள் குழு ஒன்று கடந்த வாரம் மேற்கொண்டது அனைவராலும் பாராட்டப்படுவதை ரஷ்ய அரசின் தொலைகாட்சி ஒளிபரப்பியது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :