பாலியல் வல்லுறவு வழக்கில் ஹரியானா சாமியாருக்கு 20 ஆண்டுகள் சிறை

getty images

பட மூலாதாரம், Getty Images

பாலியல் வல்லுறவு வழக்கில் ஹரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையை இந்திய நீதிமன்றம் இன்று விதித்துள்ளது.

இது தொடர்பாக குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு எதிராக 2002-ஆம் ஆண்டில் மத்திய புலனாய்வுத் துறை வழக்கு தொடர்ந்தது.

15 ஆண்டு கால விசாரணை முடிவில் குர்மீத் ராம் ஹரீம் சிங்கை "குற்றவாளி" என்று ஹரியானாவின் பஞ்ச்குலா நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்தது.

அவருக்கான தண்டனை விவரத்தை பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜெக்தீப் சிங் இன்று அறிவித்தார்.

அப்போது நீதிபதி, குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகக் கூறினார்.

getty images

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட அடுத்த சில நொடிகளில், குர்மீத் சிங்கின் தேரா சச்சா செளதா தலைமையகத்தில் இருந்து சில ஆதரவாளர்கள் கோபத்துடன் வெளியே வந்தனர்.

அவர்களில் ஒரு பிரிவினர் அந்த தலைமயகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களை தீயிட்டுக் கொளுத்தினர்.

அந்த தலைமையகத்தின் வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த வளாகத்துக்கு உள்ளே குர்மீத் சிங்கின் தீவிர ஆதரவாளர்களாக நம்பப்படும் சுமார் 15 ஆயிரம் பேர் இருப்பதாக பிபிசி செய்தியாளர் ஷாலு யாதவ் கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

முன்னதாக, தண்டனை தொடர்பான சிபிஐ மற்றும் குர்மீத் சிங் தரப்பு வாதங்களை நீதிபதி கேட்டார்.

அப்போது சிபிஐ தரப்பு வழக்கறிஞர், "பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள குர்மீத்துக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும்" என்று வாதிட்டார்.

ராம் ரஹீம் தரப்பு வழக்கறிஞர், "சமூகத்தில் பல்வேறு சமுதாயப் பணிகளையும் நலத் திட்டங்களையும் செயல்படுத்தி வருபவர் குர்மீத் சிங். அவரது பொது சேவையை கவனத்தில் கொண்டு தண்டனையை அறிவிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

தண்டனை விவரம் அறிவிக்கப்படுவதையொட்டி, குர்மீத் சிங் அடைக்கப்பட்டிருந்த ரோத்தக் சொனய்ரா சிறை வளாகத்துகத்துக்கு நீதிபதி ஜெக்தீப் சிங் சண்டீகரில் இருந்து ரோத்தக் சிறைச்சாலை அருகே உள்ள ஹெலிபேட் பகுதிக்கு ஹெலிகாப்டரில் அழைத்து வரப்பட்டார்.

பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

getty images

பட மூலாதாரம், Getty Images

தண்டனை விவரம் அறிவிக்கப்படுவதை முன்னிட்டு ரோத்தக் பகுதி முழுவதும் மத்திய துணை ராணுவப்படையினரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

1999 முதல் 2001-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தனது இரண்டு பெண் சீடர்களை பாலியல் வல்லுறவுக்கு குர்மீத் ராம் ரஹீம் சிங் ஆளாக்கியதாக 2002-ஆம் ஆண்டில் புகார் எழுந்தது.

இந்த வழக்கு பஞ்சாப் - ஹரியானா மாநில உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்கின் குற்றப்பத்திரிகை அம்பாலா நீதிமன்றத்தில் 2007-ஆம் ஆண்டில் சிபிஐ தாக்கல் செய்தது.

getty images

பட மூலாதாரம், Getty Images

இதைத்தொடர்ந்து 2008-ஆம் ஆண்டில் குர்மீத் சிங் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அதன் பிறகு 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் குர்மீத் சிங் மீது புகார் தெரிவித்த இரு பெண்களின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த அம்பாலா நீதிமன்றம் பஞ்ச்குலா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால், தேரா சச்சா செளதா அமைப்பின் தலைவரும் சாமியாருமான குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான வழக்கும் பஞ்ச்குலா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

குர்மீத் ராம் ரஹீம் சிங்கை குற்றவாளி என்று கடந்த வெள்ளிக்கிழமை பஞ்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தவுடன் அவரது ஆதரவாளர்கள் பஞ்ச்குலா, சிர்ஸா உள்பட பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

இதைத்தொடர்ந்து வன்முறையை ஒடுக்க காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூடு, தடியடி உள்ளிட்ட சம்பவங்களில் 38 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் வன்முறை மேலும் பரவாமல் தடுக்க ஹரியானா, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :