தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று ஆளுநரிடம் முறையிட முடிவு

அ.தி.மு.கவில் இரு பிரிவுகளாகச் செயல்பட்ட ஓ. பன்னீர்செல்வம் அணியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும் இணைந்துள்ள நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள், இன்று மாநில பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முறையிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாற்றியமைக்கப்பட்ட தமிழக அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், கே.பாண்டியராஜன் மாநில அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அணிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அணியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இதையொட்டி அவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு நேற்றிரவு சென்று சுமார் 20 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களில், தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் தங்கதமிழ்ச் செல்வன், வெற்றிவேல், பழனியப்பன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களும் இதில் அடங்குவர்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்ச்செல்வன், "நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஓ. பன்னீர்செல்வம் அரசுக்கு எதிராக வாக்களித்தார். அவரை இவ்வளவு வலுக்காட்டாயமாக சேர்க்க வேண்டிய அவசியம் என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.
"எடப்பாடி பழனிசாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருக்காவிட்டால் இந்த ஆட்சி அமைந்திருக்காது. அப்படியிருக்கும் நிலையில், யாரைக் கேட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது?" என்றும் தங்கத்தமிழ்ச் செல்வன் குறிப்பிட்டார்.
"10 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் ஓ. பன்னீர்செல்வத்தை மதிக்கும் முதல்வர் பழனிசாமி, 20 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் எங்களை மதிக்காதது ஏன்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் அ.தி.மு.க. விதிகளின்படி பொதுக்குழுவைக் கூட்டவும் கட்சியிலிருந்து யாரையும் நீக்கவும் பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றும் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் வெற்றிவேல் கூறுகையில், "தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை செவ்வாய்க்கிழமை சந்தித்து அணிகள் இணைப்பு விவகாரம் குறித்து முறையிடவுள்ளோம்" என்றார்.
ஆலோசனை
இதற்கிடையே, சென்னையில் அதிமுகவில் நேற்று ஏற்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பாக தமது ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் திங்கள்கிழமை காலை முதலே தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார்.
இரு அணிகள் இணைந்த பிறகு தினகரன் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. தனக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் 23ஆம் தேதி அனைவரையும் சந்திக்கவுள்ளதாக தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.கவிற்கு தற்போது 135 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
இப்போது 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனுக்கு ஆதரவாகவும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராகவும் இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்பட்சத்தில், தற்போதைய அரசுக்கு பெரும் நெருக்கடி உருவாகும்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












