You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிறைக்குள் சாதாரண உடையில் சசிகலா: கசிந்தது காணொளி
பெங்களூரு சிறையில் சாதாரண உடையில் அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் சசிகலா நடமாடும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இந்த காணொளியை பெங்களூரு சிறைத்துறை துணைத் தலைவராக ஐபிஎஸ் அதிகாரி ரூபா மோட்கில் பணியாற்றியபோது பதிவு செய்ததாகவும் அது தற்போது கர்நாடகா காவல்துறையின் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் பெண்கள் சிறை வளாகத்தில் உள்ள சிறையில் சசிகலா, இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு சிறையில் விதிகளை மீறி சிறப்பு வசதிகள் செய்து தரப்படுவதாக கர்நாடகா சிறைத் துறையின் டிஐஜி ரூபா மோட்கில் கடந்த மாதம் குற்றம்சாட்டினார்.
இந்த வசதிகளை பெறுவதற்காக சிறைத் துறையின் தலைமை இயக்குநர் சத்யநாராயாணா (தற்போது ஓய்வு பெற்று விட்டார்) உள்ளிட்ட சில சிறை அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் ரூபாய் இரண்டு கோடி அளவுக்கு சசிகலா தரப்பு லஞ்சம் கொடுத்ததாக ரூபா அறிக்கை தயாரித்து அதை கர்நாடகா அரசுக்கும் சம்பந்தப்பட்ட சத்யநாராயணாவுக்கும் அனுப்பி வைத்தார்.
நாடு முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பானதையடுத்து சிறைத் துறை டிஐஜி பொறுப்பில் இருந்து ரூபா இடமாற்றம் செய்யப்பட்டு பெங்களூரு நகர போக்குவரத்து காவல்துறை டிஐஜி மற்றும் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே, சிறையில் கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்நிலைக்குழுவை மாநில முதல்வர் சித்தராமையா நியமித்தார்.
காவல், சிறைத் துறை அதிகாரிகள் பணியில் விதிகளை மீறி செயல்பட்டது தொடர்பான ரூபாவின் புகாரை மாநில லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், சிறையில் சசிகலாவுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை என்று சத்யநாராயணராவ் கூறினார்.
இத்தகைய சூழலில் சிறையில் சோதனை நடத்தியபோது தனது ஹேண்டிகேம் மூலம் பதிவு செய்த காட்சிகளை சிறை அலுவலர்கள் அழித்து விட்டதாக ரூபா குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் சசிகலா சாதாரண உடையில் தமது உறவினர் இளவரசியுடன் சிறைக்குள் ஒரு பையுடன் வருவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.
இது பற்றி டிஐஜி ரூபா பிபிசி தமிழிடம் கூறுகையில், "இந்த காணொளி எவ்வாறு கசிந்தது என எனக்குத் தெரியாது. சிறை விதிகளின்படி கைதிகளுக்கான சீருடையைத்தான் சசிகலா அணிய வேண்டும். அதை மீறி சசிகலாவும் அவரது உறவினரும் சாதாரண சீருடையில் நடமாடும் காட்சி வெளியானதன் மூலம் அவர்களுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டது தெளிவாகிறது" என்றார்.
சிறையின் வெளிப்புறத்தில் இருந்து உள்ளே நுழைவது போன்ற காட்சிகள் அந்த விடியோவில் உள்ளது. இதனால் சசிகலாவும் இளவரசியும் சிறைக்கு வெளியே அனுமதிக்கப்பட்டார்களா என்பது குறித்து கர்நாடக லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து வருவதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இணைவதற்கான இறுதிகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் சசிகலா தொடர்புடைய சிசிடிவி காட்சி இணையதளத்தில் வெளியாகியுள்ளது அதிமுகவிலும் இரு மாநில அரசியலிலும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :