You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
`இதுதான் தர்மயுத்தமா?` ஓ.பி.எஸ். மீது சமூக வலைதளத்தில் கேள்விக்கணை!
தமிழக அரசியலின் பரபரப்பான சூழலில் அதிமுக அணிகள் இணைக்கப்பட்டதை அடுத்து சமூக வலைதளங்களில் மக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் பிரிந்த அதிமுக-வின் இரண்டு அணிகளும் இன்று மாலை இணைந்தன. தமிழகத்தின் துணை முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றுக் கொண்டார். சமீப நாட்களாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக அணிகளின் இணைப்பு இன்று நடைபெற்றதை அடுத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் கருத்துகளும் எழுந்துள்ளன.
முக்கியமாக அதிமுக இரண்டாக பிரிந்த போது, தர்மயுத்தம் நடத்துவோம் என்று கூறிய ஓ.பன்னீர் செல்வத்தின் தர்மயுத்தம் இது தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதவி, அதிகாரம், பணபேரம் அடிப்படையிலேயே இரு அணிகளும் இணைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாஜக அரசின் திரைக்கதையில் அதிமுக இயங்கி வருகிறது என்றும் தனது பதிவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறமிக்க இந்த இணைப்பு குறித்து டிவிட்டரில் விமர்சித்து கருத்து பதிவு செய்த நடிகர் கமலுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், `போலிக்குல்லா போடுபவர்கள் காவிக்குல்லாவை விமர்சிப்பதா?' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுமட்டுமல்லாமல், அம்மா ஆசையை அமாவாசை அன்று நிறைவேற்றியுள்ளார்கள் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக அரசியலை பாஜக பின்னாலிருந்து இயக்குகிறது என்ற விமர்சனமும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில் இந்த இணைப்பு குறித்து விமர்சித்துள்ளார்.