நேபாளத்தில் இருந்து வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட காண்டாமிருகம் மீட்பு
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்தியாவிற்குள் அடித்துவரப்பட்ட ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் மீட்கப்பட்டு, நேபாளத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

பட மூலாதாரம், ISHWOR JOSHI
நேபாளத்தின் சிட்வான் தேசிய பூங்காவைச் சேர்ந்த இந்த பெண் காண்டாமிருகம், அங்கிருந்து 42 கி.மீ. தூரத்தில் உள்ள இந்திய கிராமமான பாகாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பூங்காவைச் சேர்ந்த மேலும் நான்கு காண்டாமிருகங்கள் தேடப்பட்டுவருகின்றன. ஒரு காண்டாமிருகம் இறந்துபோய், அதன் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சமீபகாலங்களில் தீவிரமாகப் பெய்த பருவமழையின் காரணமாக நேபாளம், வங்கதேசம், இந்தியாவின் சில பகுதிகளில் கடும் வெள்ளசேதம் ஏற்பட்டிருக்கிறது.
மீட்புப் பணியில் யானைகள்
இந்த வெள்ளத்தில் நேபாளத்தின் சிட்வான் பள்ளத்தாக்கு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள சிட்வான் தேசியப் பூங்காவில் வசிக்கும் 600 காண்டாமிருகங்கள் வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இப் பகுதியில் சிக்கியிருந்த 500க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணியில் பத்துக்கும் மேற்பட்ட யானைகளும் படகுகளும் கடந்த வாரம் ஈடுபட்டன.
வெள்ளத்தில் இந்தியாவுக்கு அடித்துவரப்பட்ட இந்த இரண்டரை வயது காண்டாமிருகத்தை நேபாளம் அமைத்த 40 பேர் கொண்ட குழு மீட்டுச் சென்றது.

பட மூலாதாரம், ISHWOR JOSHI
"இந்தக் குட்டி காண்டாமிருகத்தை திரும்பக்கொண்டுவர இந்திய வனத்துறை அலுவலர்கள் உதவினார்கள்" என்று பி.பி.சி.யிடம் தெரிவித்தார் அப் பூங்காவின் துணைக் கண்காணிப்பாளர் நரேந்திர ஆர்யள்.
கரும்புத் தோட்டம் ஒன்றில் நின்றிருந்த இந்தக் காண்டாமிருகத்திற்கு மயக்க ஊசி போட்டு, லாரியில் ஏற்றிச் சென்றதாகக் கூறும் ஆர்யள் இதை நூற்றுக் கணக்கானவர்கள் நேரில் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், ISHWOR JOSHI
காணாமல் போன நான்கில் இரண்டு காண்டாமிருகங்கள் இந்தியாவின் வால்மீகி நகரில் உள்ள பாதுகாக்கப்பட்ட புலிகள் சரணாலயத்திற்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப் பகுதி சிட்வான் மாவட்டத்தை ஒட்டி இந்தியாவுக்குள் அமைந்துள்ளது.
மேலும் இரண்டு காண்டாமிருகங்கள் அருகிலுள்ள நேபாள கிராமமான நாவல்பர்சாயில் இருக்கும் கரும்புத் தோட்டத்திற்குள் இருக்கின்றன. மற்றுமொரு இரண்டரை வயது காண்டாமிருகத்தின் சடலம் நிலையில் செவ்வாய்க்கிழமையன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த இரண்டு காண்டாமிருகங்களும் வெள்ளம் வடிந்த பிறகு மீட்கப்படும் என ஆர்யாள் தெரிவித்தார்.
ஜூன் மாதம் துவங்கி செப்டம்பரில் முடிவடையும் பருவமழைக்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
அசாமில் உள்ள காஸிரங்கா தேசியப் பூங்காவில் ஆறு காண்டாமிருகங்கள் நீரில் மூழ்கி இறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிற செய்திகள்
- 75 வயது மணமகன் 70 வயது மணமகள்: ஒரு விநோதத் திருமணம்
- 10 வயது சிறுமிக்கு சிசேரியன் பிரசவம்: தாயும் சேயும் நலம்
- காஷ்மீர் பதற்றங்களின் சாட்சியாக விளங்கும் கடைக்கார தாத்தா
- இலங்கை கடற்படையின் தளபதியாக 47 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர் நியமனம்
- தாவரங்களை போலியோ தடுப்பு மருந்தாக மாற்றும் முயற்சி வெற்றி?
- குஜராத்: கிராமத்தில் வீதி உலா செல்லும் சிங்கங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












