பதவி விலகிய 14 மணி நேரத்திற்குள் மீண்டும் முதல்வரான நிதிஷ்: இம்முறை பாஜக ஆதரவு
பிகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ்குமார் 6- ஆவது முறையாக இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பட மூலாதாரம், AFP
மாநிலத்தின் துணை முதல்வராக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுஷில்குமார் மோதி பதவியேற்றுக் கொண்டார்.
முன்னதாக, கடந்த புதன்கிழமையன்று மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை நேரில் சந்தித்த நிதிஷ்குமார் தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.
அதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தற்போதுள்ள சூழலில் ஆட்சி நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. ஒத்தகருத்து எதுவும் உருவாகாத நிலையில், எனக்கு இதனைத் தவிர வேறு வாய்ப்புகள் இல்லை'' என்று தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோதி வாழ்த்து
புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிதிஷ்குமாருக்கும், துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள சுஷில் குமார் மோதிக்கும் பிரதமர் மோதி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், AFP
மேலும், பிகாரின் முன்னேற்றம் மற்றும் செழுமைக்காகவும் இணைந்து செயல்பட காத்து கொண்டிருக்கிறேன் என்றும் மோதி ட்விட்டர் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட நிலையில், இந்த பிரம்மாண்ட கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையை பெற்றது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, நிதிஷ் பா.ஜ.கவை கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், தற்போது பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராக பதவியேற்றது சமூக வலைத்தளங்களில் கடும் விவாதங்களையும், எதிர்ப்புகளையும் கிளப்பி வருகிறது.
ஏன் கூட்டணி முறிந்தது?
அண்மையில் லாலு பிரசாத் யாதவின் மகனும், மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி உள்ளிட்டோர் மீது ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத்துறை வழக்குப் பதிவு செய்தது.

பட மூலாதாரம், TWITTER @LALUPRASADRJD
இது தொடர்பாக எழுந்த பிரச்சனையால் தற்போது நிதிஷ்குமார் பதவி விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த மாதத்தில் லாலுபிரசாத் யாதவ் மற்றும் அவரது பல உறவினர்களின் இல்லங்களில் ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ சோதனை நடத்தியது.
முன்னதாக, புதன்கிழமை மாலையில் ஐக்கிய ஜனதாதள தலைவர்களுடன் நிதிஷ் குமார் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு ஆளுநரை சந்தித்த நிதிஷ் குமார் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












