சென்னையில் 'சுதந்திரம்' பெற்ற ரோஹிஞ்சாக்கள்

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை கேளம்பாக்கம் பகுதியில் வாழும் ரோஹிஞ்சா அகதிகள் சென்னை வந்து சேர்ந்த கதை திரைப்படம் போல விரிகிறது.
மியான்மாரில், காலங்காலமாக புத்த மதத்தவர்கள் மற்றும் ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் மத்தியில் பிரச்னை நீடித்து வந்தாலும், 2012ல் நிகழந்த தாக்குதல் பலரை பாதித்தது.
பெரும்பான்மை சமுதாயமான பௌத்த சமூகத்தை சேர்ந்தவர்கள், ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் மியான்மரைச் சேர்ந்தவர்கள் அல்ல, அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று கருதுகின்றனர்.
அடக்குமுறையை எதிர்த்த ரோஹிஞ்சா மக்கள் சிலர் மியான்மரிலேயே இன்னும் வாழ்கின்றனர். ஆனால் வேறு பலர், அருகில் உள்ள வங்கதேசத்துக்கு சென்றனர்.
''குழந்தை இருந்ததால் இந்தியா வந்தேன்''
2014ல் நடந்த தாக்குதலில் ரக்கைன் மாநிலத்தில் மட்டும் சுமார் நாற்பது பேர் இறந்து போனார்கள் என்று ஐ நா தெரிவித்திருந்தது.

2010ல் ராணுவ ஆட்சியை முறியடித்து, ஜனநாயக தேர்தல் நடத்தப்பட்டாலும், ரோஹிஞ்சா இனத்தவர்களுக்கு சுதந்திரம் எட்டாக் கனியாகவே இருந்ததாகச் சொல்கிறார்கள் தற்போது சென்னையில் வசிக்கும் ரோஹிஞ்சா மக்கள்.
ஒவ்வொரு ஆண்டும் நடந்த தாக்குதல்களில் சாதாரண மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பல்வேறு நாடுகளுக்குச் சென்றனர்.
அப்படி 2014ல் பிறந்த ஊரைவிட்டு எங்கு செல்வது என்று புரியாமல், கையில் ஒரு லட்சம் பர்மா ரூபாய்கள், பிறந்து 40 நாளான குழந்தை பாத்திமா மற்றும் மனைவி தஸ்லிமாவுடன் உள்ளூர் ரயில் நிலையத்தில் நின்றார் முகமது யூசப்(25).
ஆளில்லாத்தீவுக்கு அனுப்பப்படும் ரோஹிஞ்சா அகதிகள்
''ஒரு முகவர், கூட்டம் கூட்டமாக மக்களை பாகிஸ்தான், மலேசியா, இந்தியா என அண்டை நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். என்னிடம் இருந்த காசுக்கு ஒருவர் மட்டுமே அனுமதி என்றார். கெஞ்சிக் கேட்டபின், குழந்தையை வைத்துக்கொண்டு எங்கு செல்வாய்? இந்தியாவுக்குப் போ என ரெயிலில் ஏற்றினார்,'' என சம்பவத்தை பிபிசி தமிழிடம் விவரித்தார் யூசப்.
செல்லுமிடம் தெரியாத பயணம்
ஹௌரா ரெயில் நிலையத்தில் வண்டி நின்றுவிட்டது. அடுத்து ஒரு ரெயிலில் மாற்றி அமரவைக்கப்பட்ட அகதிகள் கூட்டத்தில், யூசப் தனது குடும்பத்துடன் அமர்ந்துகொண்டார். அந்த முகவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

''ரெயில் கிளம்பிவிட்டது. எத்தனை நாட்கள் பயணம் என்று தெரியாது, எங்கு செல்கிறோம் என்று தெரியாது. சென்னை சென்ட்ரல் நிலையத்தில் ரெயில் நின்றது,'' என எல்லாமே நேற்று நடந்ததைப் போல விவரிக்கிறார் யூசப்.
சென்னைவாசியான ரோஹிங்ஞ்சா குழந்தைகள்
யூசப்புடன் 18 குடும்பங்கள் சென்னை வந்து சேர்ந்து மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன.
பெரியவர்கள் மட்டும் தங்களது ஊரில் நடந்தது, உறவினர்களைப் பிரிந்து இருப்பது பற்றி பேசிக்கொள்கின்றனர்.
முகாமில் உள்ள குழந்தைகள் சென்னைவாசிகளாக வளர்கின்றனர்.
கேளம்பாக்கம் முகாமில் தமிழ் பேசவும், எழுதவும் தெரிந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஜோர்னத்தாரா.

''எங்க தெருவில ஒருத்தரை வெட்டிட்டாங்க. எல்லா பக்கமும் போலீஸ் வரும். நாங்க இங்க வந்துட்டோம். இங்க அப்பிடி இல்ல, நல்லா இருக்கோம். ஸ்கூல்ல புத்தகம், ட்ரெஸ் குடுத்தாங்க,'' என்கிறாள் சிறுமி ஜோர்னத்தாரா.
ஜோர்னத்தாராவை போலவே 20 குழந்தைகள் முகாமிற்கு அருகில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள். பத்து குழந்தைகள் அங்கன்வாடிக்கு செல்கிறார்கள்.
பள்ளி திரும்பிய குழந்தைகள் தங்களது வகுப்புகளில் கற்பிக்கப்பட்ட பாடல்களைப் பாடி விளையாடுகிறார்கள்.
பெரியவர்களுக்கு புரியாவிட்டாலும், குழந்தைகள் படிப்பதை எண்ணி மகிழ்கிறார்கள்.
முகாமில் இருப்பவர்களில் முதிய நபர் 65 வயது ஜாபர் ஹுசைன்.

''2012ல் நான் என் நாட்டில் இருந்து வெளியேறினேன். என் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. காரணம் தெரியாது. எந்த நேரமும் ஆபத்து என்ற சிக்கலான தருணத்தில் என் குடும்பத்தைப் பிரிந்து, என் மனைவி பாத்திமா மற்றும் ஒன்பது பிள்ளைகள், பேர பிள்ளைகள் என எல்லோரையும் பிரிந்து இரண்டு ஆண்டுகள் காஷ்மீரில் இருந்தேன்,'' என்கிறார் ஹுசைன்.
இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் நீடித்த பிரச்சனை அவரை அங்கிருந்து மீண்டும் துரத்தியது.
2014ல் இந்தியாவின் வெவ்வேறு ரயில் நிலையங்களில் அலைந்து, சென்னையை வந்தடைந்தார்.
''நான் தனியாக இருப்பதைவிட அங்கு என் மனைவி பாத்திமா சிரமப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை,'' என்கிறார் ஹுசைன்.
இதயங்களை இணைக்கும் இணையவசதி
சுமார் 4,000 கிலோமீட்டர் துரத்தில் ரக்கைன் இருந்தாலும், அங்கு தினமும் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்வது இங்குள்ள இளைஞர்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்று.

''இணைய வசதி எங்களை குடும்பங்களுடன் இணைக்கிறது. பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற வசதிகள் உதவியாக இருக்கின்றன,'' என்கிறார்கள் இளைஞர்கள்.
முகாமைச் சேர்ந்த குடும்பத்தில் உள்ள ஆண்கள், கேளம்பாக்கத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இரும்பு, செய்தித்தாள் உட்பட பழைய பொருட்களை சேகரித்து விற்கும் வேலை, தனியார் நிறுவனங்களில் பாதுகாவலர் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
ரோஹிஞ்சா பெண்களின் நிலை
இங்குள்ள பெண்கள் வேலைக்குச் செல்வதை விரும்புவதில்லை என்கிறார்கள்.
அவர்களுக்கு மொழி ஒரு தடையாக இருந்தாலும், அதைத் தாண்டி அவர்கள் சொல்லும் காரணம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
''ஊரில் இருந்த சமயத்தில், திடீரென போலீஸ்காரர்கள் வருவார்கள். எங்கள் வீடுகளுக்குள் புகுந்து, பொருட்களை வெளியே வீசுவார்கள். பணத்தை எடுத்துகொள்வார்கள். யாரையாவது கைது செய்வார்கள். இந்த சம்பவங்களால் பயந்துபோன பெண்கள் இங்குள்ள போலீஸ்காரர்களைப் பார்த்தாலும் பயப்படுகிறார்கள்,'' என்கிறார் யூசுப்.
தையல் கற்கும் பெண்கள்
சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகள் ரம்ஜான் மற்றும் பிற பண்டிகை தினங்களில் உணவு வழங்குவதாகவும், இங்குள்ள பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

''பாதுகாப்போடு இங்கு இருக்கிறோம். ஆனாலும் ஏதோவொன்று எங்களை தடுக்கிறது. வேலைக்குச் செல்வதை தவிர்க்கிறோம். துணி தைக்க தற்போது பழகுகிறோம்,'' என்கிறார்கள் முகாமில் உள்ள பெண்கள்.
ஆனால் அவ்வப்போது குடும்பத்துடன் கோவளம் கடற்கரைக்குச் சென்று வருகிறார்கள் பெண்கள்.
''போட்டோ எடுக்க வேண்டாம்''
சமீபத்தில் கடற்கரைக்கு சென்று வந்த தஸ்லீமா, இங்குள்ள பெண்களைப் போல சேலை உடுத்திக்கொள்ள விருப்பமாக உள்ளது என்கிறார்.
''எங்கள் ஊரில் போலீஸ் அல்லது வெளியாட்கள் வந்தால், உடனடியாக எங்கள் தலையை, முகத்தைக் கட்டாயமாக மூடிக்கொள்ளவேண்டும். இங்குள்ள பெண்கள் வெளியே செல்லும்போதும் கூட தங்களின் முகத்தை மூடுவதில்லை என்பது எனக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது,'' என்கிறார் தஸ்லீமா.
சில பெண்கள் தங்களை படமெடுப்பதை விரும்பவில்லை.

தங்களின் படம் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியானால், அவரது சொந்தங்கள் விமர்சனம் செய்வார்கள் என்ற பயம் மற்றும் இங்கு அவர்கள் வந்துவிடக் கூடும் என்பதால் படம் எடுக்கவேண்டாம் என்கிறார்கள்.
தமிழக சட்டசபையில் விவாதிக்கப்பட்ட ரோஹிஞ்சா மக்களின் நிலை
கேளம்பாக்கம் முகாமில் இடவசதி மிகவும் குறைவாக இருப்பதாகக் கூறுகின்றனர்.
முகாம் கட்டிடத்திற்குள் நாம் சென்றபோது, பெரிய அறை ஒன்றை அவர்கள் துணியால் தடுத்து வைத்து சிறு சிறு குடியிருப்புகளாக பிரித்து வாழும் நிலையைப் பார்க்கமுடிந்தது.
''கொஞ்சம் கூட தனிமையான இடம் இல்லை. மழைக்காலங்களில் மிகவும் சிரமப்படுகிறோம். அப்போது குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்துவிடும்,'' என்கிறார்கள் முகாம்வாசிகள்.

தற்போது நடைபெற்றுவரும் சட்டசபை கூட்டத்தொடரில் ரோஹிஞ்சா மக்களுக்கு அளிக்பட்டுள்ள தற்காலிக குடியிருப்பு பற்றி விவாதிக்கப்பட்டது என்கிறார் அகதிகள் மறுவாழ்வு துறையின் ஆணையர் உமாநாத்.
''மத்திய அரசு மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவும் இணைந்து மியான்மரில் உள்ள நிலை பற்றியும், இங்குள்ள மக்களின் நிலை பற்றியும் விவாதித்து முடிவு எடுக்கவேண்டியுள்ளது. இவர்களை நிரந்தரமாக இலங்கை அகதிகளைப் போல தங்கவைக்கலாமா அல்லது அவர்களின் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பவேண்டுமா என்று முடிவு செய்யவேண்டும்,'' என்கிறார் அதிகாரி உமாநாத்.
சுதந்திரக் காற்று
மத்திய அரசு எடுக்கும் முடிவை கொண்டு, இந்த தற்காலிக குடியிருப்பை மாற்றிக்கொடுப்பது பற்றி முடிவு செய்யப்படும், என்றார் உமாநாத்.

ரோஹிஞ்சா மக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் சென்னையில் வேலை செய்ய அனுமதி உள்ளது என்றும் ஆணையர் தெரிவித்தார்.
மொழி, உணவு, சுற்றுப்புறம் என எதுவுமே பழக்கமில்லாத ஒன்றாக இருந்தாலும், பல சிக்கலையும் ரோஹிஞ்சா மக்கள் பொறுத்துக்கொள்வதற்கு காரணம் இங்கு அவர்கள் சுவாசிக்கும் சுதந்திரக் காற்று.
மியான்மார் : ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்குமா?
பிற செய்திகள்
- முஸ்லிம் பெண்களுக்கு ஹலால் செக்ஸ் வழிகாட்டி
- `தப்பாக தொட்ட பக்கத்து வீட்டுப் பையன்'
- சினிமா விமர்சனம்: விக்ரம் வேதா
- காணாமல் போனோர் பிரச்சனைக்கான அலுவலகம் - ஐநா வரவேற்பு
- நீல் ஆம்ஸ்ட்ராங் பயன்படுத்திய தூசி பை 18 லட்சம் டாலருக்கு ஏலம்
- மலிவு விலை ஜியோ மொபைல்: அறிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்!
- தனக்கு மூளை அறுவை சிகிச்சை நடக்கும்போது கிடார் வாசித்த கலைஞர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்















