You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் மூன்றாவது நாளாக திரையரங்குகள் மூடல் : புதுவையும் சேர்கிறது
மூன்றாவதாக நாளாக தொடரும் தமிழக திரையரங்கு மூடல் போராட்டத்திற்கு ஆதரவாக புதுவையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
ஜுலை மாதம் அமலுக்கு வந்த ஜி எஸ் டி வரி என்ற சரக்கு மற்றும் சேவை வரியுடன், தமிழக அரசு விதித்துள்ள மாநில வரியையும் சேர்த்து இரட்டை வரிகளை செலுத்தமுடியாது என கூறி தமிழகத்தில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 3) முதல் 1,000 திரையரங்குகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.
தமிழ் திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ள இந்த போராட்டத்திற்கு, புதுவை திரைப்பட உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அங்கும் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையே, பிரபல நட்சத்திரங்களும், பெரும் தயாரிப்பாளர்களும், தமிழக திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள இரட்டை வரிக்கு எதிர்த்து குரல் கொடுக்க வேண்டுமென நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், இந்த விவகாரத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த லட்சக்கணக்கான ஊழியர்களின் நிலையை தமிழக அரசு கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரியுள்ளார்.
இன்று புதன்கிழமை முதல் தினசரி நாளிதழ்கள், மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் திரைப்பட விளம்பரங்களையும், திரைப்பட தயாரிப்பாளர்கள் நிறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதைப்போல திரையரங்குகளை சார்ந்துள்ள மற்ற தொழில்கள் மற்றும் தொழிலாளர்களும் பாதிப்படைந்துள்ளனர்.
வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 7) ஆம் தேதியன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த தமிழ் திரைப்படங்களின் வெளியீடுகளும் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அப்படங்களின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
குறிப்பாக நடிகர் மாதவன் மற்றும் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகவிருந்த 'விக்ரம் வேதா', நடிகர் அர்ஜுனின் 150 ஆம் படமாக வெளியாகவுள்ள 'நிபுணன்' போன்ற மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படங்களின் வெளியீடும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் தலைவரான அபிராமி ராமநாதன், தமிழக அரசின் முடிவை எதிர்நோக்கியிருப்பதாகவும், நாளை அல்லது வெள்ளிக்கிழமை நல்ல விஷயம் நடக்கும் என்று காத்திருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசு தங்களுக்கு ஆதரவான முடிவை வெளியிட்டால், உடனடியாக திரையரங்குகளை திறக்க தயாராக உள்ளதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்