You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீரில் பெரிய மசூதிக்கு வெளியே பாதுகாப்பு பணியிலிருந்த மூத்த போலீஸ் அதிகாரி அடித்து கொலை
இந்தியா நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் வியாழக்கிழமை பின்னிரவு வரலாற்று சிறப்புமிக்க பெரிய மசூதிக்கு வெளியே கும்பலொன்றால் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் மற்றும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் கூறுகின்றன.
அந்த சம்பவம் நடந்த போது, முகமத் அயூப் போலீஸ் உடையில் இல்லை என்றும். மசூதிக்கு வெளியே நாசவேலைகளை தடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார் என்றும் போலிசார் உறுதிப்படுத்தினர்.
பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மசூதி பழைய ஸ்ரீநகரில் உள்ள நவ்ஹாட்டா பகுதியில் அமைந்துள்ளது. பிரிவினைவாத தலைவர் மிர்வெய்ஸ் உமர் ஃபரூக்கின் மத அரசியலை அரங்கேற்றும் தளமாக இது உள்ளது.
'' சம்பவம் நடைபெற்ற போது மசூதியில், ரமலான் பண்டிகையின் போது வரும் ஒரு சிறப்பு இரவில் உமர் போதித்து கொண்டிருந்தார். ஒரு ஆண்கள் கூட்டத்தினருடன் அதிகாரிக்கு சண்டை ஏற்பட, தன்னிடமிருந்த சைலன்ஸர் பொருத்தப்பட்ட துப்பாக்கியை எடுத்து சுட்டார். அதில், இருவர் காயமடைந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை சூழ்ந்து கொண்டு அவரை அடித்து கொன்றனர்,'' என்று நவ்ஹாட்டாவில் உள்ள உள்ளூர்வாசியான முனீர் பிபிசியிடம் கூறினார்.
அதிகாரியின் மரணத்திற்கு வழிவகுத்த காரணங்களை போலீஸ் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக போலீஸ் பேச்சாளர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாத தலைவர் மிர்வெய்ஸ் , ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் போதிக்கும் ஜாமியா மஸ்ஜித்தில் இரவு முழுவதும் நடைபெறும் பிரார்த்தனைகள் எவ்வித பிரச்சனைகளின்றி அமைதியான முறையில் நடப்பதை உறுதி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பிற பாதுகாப்பு அதிகாரிகளில் அயூபும் அங்கமாக இருந்தார் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த படுகொலை சம்பவம் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 2017லிருந்து இந்தியா நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் நடைபெற்ற பல தீவிரவாத தாக்குதல்களில் குறைந்தது 17 போலீஸார் கொல்லப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்