You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதுக்கடைகளை உடைக்கும் பெண்கள்; அரசியல் கட்சிகள் அலட்சியம் ஏன்?
- எழுதியவர், கே. முரளீதரன்
- பதவி, பிபிசி தமிழ்
மதுக்கடைகளுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதும் மிகப் பெரிய எழுச்சியாக மதுவுக்கு எதிரான இந்தப் போராட்டங்கள் மாறவில்லை.
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளை ஒட்டி 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டுமென உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதத் துவக்கத்தில் உத்தரவிட்டது. இதனால், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன.
ஏற்கனவே, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் 500 மதுக்கடைகள் அடைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவால் மேலும் சுமார் 3321 கடைகள் மூடப்பட்டதால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட கடைகளை, சாலைகளிலிருந்து 500 மீட்டர் தொலைவில் திறப்பதற்கான இடங்களை டாஸ்மாக் நிர்வாகம் தேட ஆரம்பித்தது. நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் கடைகள் இருக்கவேண்டும் என்பதால், பெரும்பாலான கடைகள், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் அமைந்தன.
ஆனால், புதிதாக கடைகள் அமைக்கப்படுவதை எதிர்த்து அப்பகுதியில் உள்ள மக்கள் கடுமையாகப் போராட ஆரம்பித்தனர். பெரும்பாலான சமயங்களில் இந்தப் போராட்டம் வன்முறையாக வெடித்தது. கடைகள் சூறையாடப்படுவதும், அடித்து நொறுக்கப்படுவதும் வழக்கமானது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள எம். கைகாட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடையை அகற்றச்சொல்லி மக்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், கடந்த மே மாதம் 21ஆம் தேதி அந்தக் கடை சூறையாடப்பட்டது. 50 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
அதே நாளில், புதுக்கோட்டை கொத்தமங்கலத்தில் பெண்களாக இணைந்து ஒரு டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர்.
ஜூன் 8ஆம் தேதியன்று வேடசந்தூர் அருகே கருக்காம்பட்டியில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக டாஸ்மாக் கடை ஒன்று மூடப்பட்டது.
திண்டுக்கல் அய்யலூர், தூத்துக்குடி கழுகுமலை செந்தூர் நகர் ஆகிய இடங்களில் பெண்கள் திரண்டுவந்து டாஸ்மாக் கடைக்கு எதிரான முற்றுகைப் போராட்டங்களை நடத்தினர்.
மதுக்கடைகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவ்வளவு நடந்தும்கூட, இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் வலுவாக எதிரொலிக்கவில்லை.
கடந்த 2015ஆம் ஆண்டிலும் இதேபோல மதுவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்தபோது நிலைமை வேறுவிதமாக இருந்தது.
ஒரு மதுக்கடையை மாற்றக்கோரிய போராட்டத்தின்போது, செல்போன் கோபுரத்தில் ஏறிப் போராடிய, மதுவுக்கு எதிரான போராளியாகப் பார்க்கப்பட்ட சசிபெருமாள், அந்த கோபுரத்திலேயே மரணமடைந்தார்.
இதற்கு முன்பாகவே பாட்டளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகியவை முழுமையாக மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் எனக் கோரி வந்த நிலையில், அந்த ஆண்டு ஜூலை 20ஆம் தேதியன்று, தி.மு.க. தலைவர் கருணாநிதி விடுத்த அறிக்கையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில், சசிபெருமாளின் மரணமும் சேர்ந்துகொள்ள தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாக மது உருவெடுத்தது. இதனால், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என அக்கட்சியும் அறிவிக்க வேண்டியிருந்தது.
ஆனால், இப்போது எந்தக் கட்சியும் இது குறித்து பெரிதாக குரல் கொடுக்காத நிலையில், பொதுமக்களின் போராட்டம் சின்னச்சின்ன அதிர்வுகளை ஏற்படுத்துவதோடு முடிந்துவிடுகிறது.
"அரசியல்வாதிகள் இந்தப் போராட்டங்கள் குறித்தும், மதுப் பிரச்சனை குறித்தும் பெரிதாக இப்போது பேசுவதில்லை என்பது முக்கியமான காரணம்" என்கிறார் மதுவுக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஆனந்தன். 2016ல் கூட, கருணாநிதியின் அறிக்கைக்குப் பிறகே, மது அரசியல் கட்சிகள் விவாதிக்ககூடிய விஷயமாக மாறியது என்று சுட்டிக்காட்டுகிறார் அவர். தவிர அந்த நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதும் ஒரு காரணம் என்கிறார் அவர்.
தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டுவாக்கில் 6,826 மதுக்கடைகள் டாஸ்மாக் நிறுவனத்தால் நடத்தப்பட்டுவந்தன. ஜெயலலிதா 500 கடைகளையும், பழனிச்சாமி 500 கடைகளையும் மூட உத்தரவிட்டதால், கடைகளின் எண்ணிக்கை 5800ஆக குறைந்தது. இதற்குப் பிறகு, நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டதால் சுமார் 3,321 கடைகள் மூடப்பட்டதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் தங்கமணி ஜூன் 20ஆம் தேதியன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
கடந்த 2015-16ல் தமிழக அரசுக்கு மதுவிற்பனை மூலம் 25,845 கோடி வருவாயாக கிடைத்தது. 2016-17ஆம் ஆண்டில் 26, 995.25 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்ததாகவும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டு 3,000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் வரும் ஆண்டில் இந்த வருவாய் கடுமையாகக் குறையக்கூடும். ஆகவே, நீதிமன்ற விதிகளுக்கு உட்பட்டு புதிய இடங்களில் கடைகளைத் திறக்க ஆர்வம் காட்டுகிறது தமிழக அரசு.
"பெரிய தாக்கம் இல்லையென்று சொல்வதை ஏற்க முடியாது. மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஊடகங்கள் அதைப் பெரிதாக விவாதிப்பதில்லை" என்கிறார் பாடம் அமைப்பின் நாராயணன். இவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாகத்தான் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மதுக்கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.
2010, 2011ஆம் ஆண்டுகளிலிருந்து மதுவுக்கு எதிராக தீவிரமான போராட்டங்கள் நடந்துதான் வருகின்றன. ஆனால், வன்முறையில் மக்கள் இறங்க ஆரம்பித்தது இப்போதுதான் என்று சுட்டிக்காட்டுகிறார் நாராயணன்.
ஜெயலலிதாவின் காலகட்டத்தில் நடக்கும் சிறிய போராட்டங்கள்கூட இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். அவரது மறைவுக்குப் பிறகு அந்த அச்சம் விட்டுப்போயிருக்கிறது என்கிறார் அவர்.
தற்போதும் மது முக்கியமான பிரச்சனைதான் என்று கூறும் நாராயணன், தமிழக அரசியலில் தற்போது நிலவும் குழப்பமான சூழல் ஊடகங்களை ஆக்கிரமித்திருப்பது ஒருபுறமிருக்க, அரசியல் தலைவர்களின் கவனமும் அதன் மீதுதான் இருக்கிறது. மது ஒரு முக்கிய விவகாரமாக மாறாததற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார் நாராயணன்.
இம்மாதிரி போராட்டங்கள் மாநிலம் தழுவிய அளவில் ஒரே மாதிரி நடைபெறுவதில்லை. உள்ளூர் பிரச்சனைகளுக்கேற்பவே அப்பகுதி மக்களால் தலைவர்களின்றி நடத்தப்படுகின்றன. உதாரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெங்கல் என்ற கிராமத்தில் புதிதாக இரண்டு மதுக்கடைகள் தலித் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் திறக்கப்பட்டன. இதனை எதிர்த்து கடந்த ஜூன் 12ஆம் தேதியன்று சுமார் பத்து பெண்கள் மட்டுமே முன்னின்று நடத்திய போராட்டத்தால் அந்தக் கடை மூடப்பட்டது. ஆனால், கடையை ஒட்டியுள்ள 'பாரை' குத்தகைக்கு எடுத்திருப்பவர் உறவினர் என்பதால், இந்த விவகாரம் உறவினர்களுக்கிடையான விவகாரமாக மாறியிருப்பதாக புலம்புகிறார்கள் அந்தப் பெண்கள்.
தலித் மக்களின் பகுதியில் அந்தக் கடை அமைந்திருப்பதால், வேறு ஜாதியைச் சேர்ந்தவர்களும் இந்தப் போராட்டங்களில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. தற்போது இந்தக் கடை மூடப்பட்டிருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம் என்ற நிலைமைதான் இருக்கிறது.
மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் நேரடியாக இறங்குவதற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். "ஆண்கள்தான் பெரும்பாலும் குடிப்பவர்கள் என்பதால் அவர்கள் இதில் கலந்துகொள்ள மாட்டார்கள். நாங்கள்தான் கலந்துகொள்ள வேண்டும். பல தருணங்களில் எங்கள் கணவர்களுக்கு மது பாட்டிலையும் பணத்தையும் கொடுத்து எங்களை போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்கும் முயற்சிகளும் நடக்கும்" என்கிறார் வெங்கலைச் சேர்ந்த கீதா.
2015-16ஆம் ஆண்டின் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் ஆண்களில் 41.5 சதவீதம் பேர் குடிக்கிறார்கள். இந்தியாவின் தேசிய சராசரி 32 சதவீதம்தான். தமிழகத்தில் முன்பே கூறியபடி 6,826 கடைகளும் அவற்றோடு இணைந்தபடி சுமார் 3,000 பார்களும் இயங்கிவந்தன. தமிழக அரசுக்குக் கிடைக்கும் வருவாயில் 30 சதவீதம் மதுபான விற்பனையின் மூலம்தான் கிடைக்கிறது.
அனைத்துக் கட்சிகளுமே, பூரண மதுவிலக்குக் குறித்துப் பேசினாலும், நிதர்சனத்தில் அது சாத்தியமில்லை என்பது எல்லோருக்குமே தெரிகிறது.
"ஆனால், ரொம்பவும் மனம் உடைந்துவிடத் தேவையில்லை. சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு, அரசியல் காட்சிகளின் ஆதரவின்றி தன்னிச்சையாக, தொடர்ந்து நடக்கும் போராட்டம் மதுவுக்கு எதிரான போராட்டம்தான். ஒரு நாள் வெற்றிகிடைக்கும்" என்கிறார் ஆனந்தன்.
அரசு மதுபான கடையை தாக்கும் பெண்கள்
பிரபலமாகிவரும் பியர் யோகா
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்