You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக காங்கிரஸ் மகளிர் அணியினர் மோதல்
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைமையகமான சத்யமூர்த்தி பவனில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் செயலாளர், மாநில மகளிர் காங்கிரஸ் கட்சிச் செயலாளர் ஆகியோர் அடிதடியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்திருக்கிறார்.
சத்யமூர்த்தி பவனில் இன்று திருநாவுக்கரசர் தலைமையில், கட்சிக்குப் புதிதாக உறுப்பினர்களைச் சேர்ப்பது குறித்த கூட்டம் நடைபெற்றது.
இதற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது.
இதற்குப் பிறகு அனைவரும் சத்யமூர்த்தி பவனின் கீழ் தளத்தில் வந்துகொண்டிருந்தபோது, திடீரென மகளிர் காங்கிரஸின் செயலர் ஹசீனா சையது, திருவள்ளூர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் நிர்வாகி கவுரி கோபால் ஆகியோர் மோதிக் கொண்டனர்.
இந்த மோதல் திடீரென அடிதடியாக உருவெடுத்தது.
மகளிர் காங்கிரஸின் மாநிலத் தலைவர் ஜான்சி ராணி, ஹசீனா சையதின் கணவரை பிடித்துத் தள்ளும் காட்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின.
ஹசீனா சையத், அவரது கணவர் ஒரு பக்கமாகவும் கவுரி கோபால், ஜான்சி ராணி ஆகியோர் மற்றொரு தரப்புமாகவும் மோதிக்கொண்டனர்.
இது குறித்து ஹசீனா சையதிடம் கேட்டபோது, "நடந்துவந்துகொண்டிருந்தபோது, திடீரென கவுரி கோபால் தன்னை பின் பக்கத்திலிருந்து தாக்கினார். நான் நிலைகுலைந்துபோனேன். பிறகு, மாநிலத் தலைவரின் அறைக்குச் சென்றேன். அங்கும் வந்து சேலையைப் பிடித்து இழுத்தார்" என்று தெரிவித்தார்.
பிறகு, ஜான்சி ராணி தன் தாலியைப் பிடித்து இழுத்ததால் தான் திருப்பித் தாக்கியதாகவும் கணவரை அழைத்ததாகவும் ஹசீனா தெரிவித்தார்.
இது தொடர்பாக தான் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்திருப்பதாகவும் ஹசீனா கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்னைக்கு வந்தபோது, தனக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகளின் 'பாஸ்களை' கவுரி கொடுக்க மறுத்துவிட்டதாகவும் அது தொடர்பாக ஏற்கனவே பிரச்சனைகள் இருந்ததாகவும் ஹசீனா தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜான்சி ராணியிடம் கேட்டபோது, தான் இது குறித்து கட்சித் தலைமையிடம் பேசிக்கொள்வதாகவும், கருத்து எதையும் தெரிவிக்க விரும்பவில்லையென்றும் கூறினார்.
இந்த அடிதடி சம்பவம் தொடர்பாக, காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டாமென திருநாவுக்கரசர் கூறியிருப்பதால் காவல்துறையிடம் புகார் அளிக்கப்படவில்லை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென திருநாவுக்கரசர் கூறியிருக்கிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்