You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கருணாநிதியின் 94வது பிறந்த நாள் மற்றும் சட்டமன்ற வைரவிழா: கட்சியினர் உற்சாகம்
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாள் மற்றும் அவரது சட்டமன்ற வைரவிழாவை அக்கட்சியினர் இன்று பிரம்மாண்டமாகக் கொண்டாடிவருகின்றனர்.
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் நிலையில், காலை முதலே தொண்டர்கள் அங்கு குவிந்தனர். ஆனால், கருணாநிதி உடல்நலமின்றி இருப்பதால், அவரைச் சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. இருந்தபோதும், தொடர்ந்து அவரது இல்லத்தின் முன்பாக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இதேபோல, அவரது சிஐடி காலனி இல்லமும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பிறந்த நாளன்றும் கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தொண்டர்களை கருணாநிதி சந்திப்பது வழக்கமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அவர் அங்கு இல்லாத நிலையிலும் அங்கு தொண்டர்கள் வந்து செல்கின்றனர்.
சென்னை நகரின் பல பகுதிகளிலும் தி.மு.க. தொண்டர்கள் கட்சிக் கொடிகளையும் பதாகைகளையும் சாலை நெடுகிலும் கட்டியுள்ளனர். நகரம் முழுவதும் அக்கட்சித் தொண்டர்கள் வாழ்த்துச் சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளனர். ஆங்காங்கே ஒலிபெருக்கிகளை வைத்து, வாழ்த்துப் பாடல்களையும் அவர்கள் ஒலிபரப்பிவருகின்றனர்.
கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி, இன்று மாலை சென்னையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் மிகப் பெரிய பொதுக்கூட்டத்திற்கு தி.மு.க. ஏற்பாடுசெய்துள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, திருணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக சட்டப்பேரவையின் வடிவில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவரின் பிறந்த நாளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டவர்கள் வாழ்த்துச் செய்திகளைத் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி உடல்நலமின்றி இருக்கும் நிலையில், அவருக்கு சோனியா காந்தியின் வாழ்த்துச் செய்தியை அவரது உதவியாளர் படித்துக் காட்டும் காட்சியையும் பிறந்த நாள் மலரை அவர் பார்வையிடும் காட்சியையும் தி.மு.க. நேற்று வெளியிட்டது.
காணொளி: தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துரையை கேட்கும் கருணாநிதி
தொடர்படைய செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்