உலகின் `மிகச் சிறிய` செயற்கைக் கோளை வடிவமைத்துள்ள தமிழக மாணவன்
இந்தியாவைச் சேர்ந்த ஒரு பதின்ம வயது மாணவர் வடிவமைத்துள்ள, உலகின் மிகச்சிறியதெனக் கருதப்படும் செயற்கைக்கோள், வரும் ஜூன் மாதத்தில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, நாசாவின் ஒரு மையத்தில் இருந்து சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்படவுள்ளது.

பட மூலாதாரம், TWITTER/@RIFARH_SHAAROOK
சமீபத்தில் நாசா இணைந்து நடத்திய ஒரு போட்டியில், ரிஃபாத் ஷாரூக்கின் 64-கிராம் (0.14 பவுண்டு) சாதனம் தேர்வு செய்யப்பட்டு, அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முப்பரிமாண வடிவில் அச்சிடப்பட்ட கார்பன் இழையின் செயல்திறனை நிரூபிப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது என்கிறார் 18 வயதான , ரிபாத் ஷாரூக்.
தனது கண்டுபிடிப்பு, சுற்றுவட்டப்பாதையின் கீழ் நான்கு மணிநேரம் வேலை செய்யும் என்று உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ரிபாத் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், இந்த சிறிய செயற்கைக் கோள், விண்வெளியில் ஈர்ப்பு சக்தி குறைவான சுற்றுச் சூழலில் சுமார் 12 நிமிடங்கள் செயல்படும்.
''நாங்கள் இந்த செயற்கைக் கோளை ஆரம்ப நிலையி்லிருந்து வடிவமைத்தோம். இதில் ஒரு புது விதமான கணினி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எட்டு சென்சார்கள் இருக்கும். இந்த சென்சார்கள் புவியின் வேகம், சுழற்சி மற்றும் காந்த சூழலை அளவிடும்,'' என்றார்.
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான அப்துல் கலாமின் நினைவாக இந்த செயற்கைக்கோளுக்கு 'கலாம்சேட்'(KALAM SAT) என்று பெயரிடப்பட்டுள்ளது. அப்துல் கலாம் இந்தியாவின் வானூர்தி அறிவியல் லட்சியங்களுக்கான ஒரு முன்னோடி.

பட மூலாதாரம், FACEBOOK/RIFATHSHAAROOK
நாசா மற்றும் ஐடூடுல் என்ற ஒரு கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய 'கியூப்ஸ் இன் ஸ்பேஸ்' ( Cubes in Space) என்ற போட்டியில் ரிபாத் ஷாரூக்கின் இந்த செயற்கைக் கோள் திட்டம் தேர்வு செய்யப்பட்டது.
இந்திய குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரிடம் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் இயங்கும் சென்னையில் உள்ள 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்ற அமைப்பில் தமிழகத்தை சேர்ந்த ரிபாத் ஷாரூக் தற்போது ஒரு முன்னணி ஆராய்ச்சியாளராக உள்ளார்.
கலாம்சேட் இவரது முதல் கண்டுபிடிப்பு அல்ல. இளம் அறிவியலாளர்களுக்கான ஒரு தேசிய அளவிலான போட்டியில் தனது 15 வயதில் ஒரு ஹீலியம் வானிலை பலூனை அவரது வடிவமைத்திருக்கிறார்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












