லஞ்சம் கேட்டதால் தொழிற்சாலை துவங்க கொரிய நிறுவனம் மறுப்பா? தமிழக அரசு விளக்கம்

கியா மோட்டர்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்தபோது, மாநில அரசின் சார்பில் லஞ்சம் கேட்கப்பட்டதால் அந்நிறுவனம் விலகிச்செல்லவில்லையென்றும், தனது கொள்கை முடிவின் அடிப்படையிலேயே விலகிச் சென்றது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகத்தில் உள்ள வெளிநாட்டு ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள்

பட மூலாதாரம், Getty Images

தென்கொரியாவைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான கியா மோட்டர்ஸ் தமிழகத்தில் தனது தொழிற்சாலையை அமைக்க முடிவுசெய்து, தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது அரசு வழங்கும் நிலத்தின் மதிப்பைப் போல ஒன்றரை மடங்கு அதிக தொகை லஞ்சமாகக் கேட்கப்பட்டதாகவும் அதன் காரணமாக அந்த நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் தற்போது தொழிற்சாலையைத் துவங்க முடிவுசெய்திருப்பதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாக விவாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இது தொடர்பாக தமிழக அரசு விளக்கமொன்றை அளித்துள்ளது.

அதன்படி, கியா மோட்டர்ஸ் நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலையை ஆரம்பிப்பது என்று முடிவுசெய்தவுடனேயே தமிழக அரசின் சார்பில் அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டு பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள வெளிநாட்டு ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள்

பட மூலாதாரம், Getty Images

கியா மோட்டர்ஸின் பங்குதாரரான ஹுண்டாய் நிறுவனம் முதலீடு செய்துள்ள இடங்களில் முதலீடு செய்வதில்லை என்ற கொள்கை முடிவின் காரணமாகவே அந்த நிறுவனம் இங்கே முடிவுசெய்ய இயலவில்லை என தமிழக அரசிடம் தெரிவித்திருப்பதாகவும் தமிழக அரசு கூறியிருக்கிறது.

ஹுண்டாய் நிறுவனம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் மேலும் 5000 கோடி ரூபாயை முதலீடு செய்ய முடிவெடுத்திருப்பதையும் மாநில அரசு சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்த செய்திகள் உங்களது ஆர்வத்தை தூண்டலாம்

அதேபோல ஃபோர்ட் கார் நிறுவனம் குஜராத்தில் புதிய முதலீடுகளைச் செய்ததற்குக் காரணம், உற்பத்தி செய்த கார்களை வட இந்தியாவுக்குக் கொண்டுசெல்வதற்கு ஆகும் செலவுகளைக் குறைப்பதற்காகவே என்றும் 1300 கோடி ரூபாய் செலவில் ஆராய்ச்சி மையத்தை அந்நிறுவனம் தமிழகத்தில்தான் துவங்குகிறது என்றும் மாநில அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

மேலும் பிஎஸ்ஏ பிஜோ கார், யமஹா மியூசிகல்ஸ் உள்பட 15,000 கோடி ரூபாய் அளவுக்கு புதிய முதலீடுகள் தமிழகத்தில் செய்யப்படவிருப்பதாகவும் மாநில அரசு தெரிவித்திருக்கிறது.

ஆகவே, நிலம் ஒதுக்கீடு செய்வதற்காக லஞ்சம் கேட்டதால் தொழிற்சாலைகள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு வேண்டுமென்றே அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யபடுவது என மாநில அரசு கூறியிருக்கிறது.

இதையும் படிக்கலாம்:

காணொளிக் குறிப்பு, சார்ளி சாப்ளினின் அமெரிக்க விசா ரத்தானது ஏன்? மனம் திறக்கும் மகன்