இந்தியாவிலிருந்து விடை பெற்றார் 250 கிலோவாக எடை குறைந்த எகிப்து பெண்
உலகிலேயே அதிக எடையுடையதாக நம்பப்படும் எகிப்து பெண் இமான் அப்ட் எல் அடி, 250 கிலோவுக்கு அதிகமான எடையைக் குறைத்துவிட்டதாக மருத்துவர்கள் கூறுகின்ற மும்பை மருத்துவமனையை விட்டு புறப்பட்டு சென்றார்.

பட மூலாதாரம், SAIFEE HOSPITAL
500 கிலோ எடையுடையவராக கூறப்பட்டஇமான் அப்ட் எல் அடி, தனி விமானத்தில் சிறப்பு சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வந்தார்.
தொடர் சிகிச்சைக்காக அவர் ஐக்கிய அரபு எமிரேட்டிலுள்ள அபுதாபிக்கு சென்றுள்ளார். பயணியர் விமானத்தில், முதல் வகுப்பில் அவர் பயணம் செய்துள்ளார்.
அவரை சிசிக்சைக்கு இங்கு கொண்டு வந்தது தவறான செயலாக போய்விட்டது என்று அவருக்கு எடை குறைப்பு சிகிச்சை மேற்கொண்ட அறுவை சிகிச்சை நிபுணர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் மும்பையில் இமான் அப்ட் எல் அடி சிகிச்சை பெற்று வந்த கடைசி நாட்களில், அவருடைய சகோதரி ஷாய்மா செலிம் சர்ச்சையை கிளப்பினார்.

பட மூலாதாரம், Saifee hospital
சமூக ஊடகங்களில் காணொளி பதிவு ஒன்றை வெளியிட்ட ஷாய்மா செலிம், தன்னுடைய சகோதரியால் இன்னும் பேச அல்லது நகர முடியவில்லை என்றும் இந்த மருத்துவமனை கூறுவதுபோல பெரியளவில் தன்னுடைய சகோதரி உடல் எடை இழந்துவிடவில்லை என்றும் அதில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மருத்துவமனை வன்மையாக மறுத்திருந்தது.
தன்னுடைய சகோதரி மீண்டும் நடக்க தொடங்கும் வரை மருத்துவமனையிலே தங்கியிருக்க ஷாய்மா செலிம் விரும்புவதாகவும், ஆனால், இமான் அப்ட் எல் அடியால் மீண்டும் நடக்க முடியாது என்று எலும்பு சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் அவரிடம் கூறிவிட்டதாகவும், அறுவை சிகிச்சை மருத்துவர் முப்ஃபி லாக்டாவாலா இந்திய செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், DR MUFFAZAL LAKDAWALA
இதனால் தான் செலிம் இந்த குற்றச்சாட்டுக்களை எழுப்பியதாவும், அபுதாபிக்கு அவரை சிகிச்சை பெற அழைத்து செல்ல முடிவெடுத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
"இமான் என்னுடைய சிகிச்சையை விட்டு செல்ல இருப்பதாக சொன்னபோது, நான் திட்டமிட்டப்படி கட்டங்கட்டமாக சிகிச்சை அளிப்பதை தொடர முடியவில்லையே என்று இதயம் உடைந்து போனேன். இருப்பினும், குணமடைய வேண்டும் என்கிற அவரது திறனில் எனக்கு நம்பிக்கை உள்ளது. எங்களது இதயங்களின் ஆழத்தில் இருந்து அவரை எப்போதும் வாழ்த்துகிறோம்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












