You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனா தயாரித்த முதலாவது பயணியர் விமானம் வெள்ளோட்டம்
போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுக்கு மாபெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் சீனாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது பெரிய பயணியர் விமானம், அதனுடைய முதலாவது பயணத்தை மேற்கொண்டுள்ளது.
ஷாங்காயிலுள்ள புதொங் விமான நிலையத்தில் இருந்து சாதாரணமாக மேலேழுந்து பறந்ததாக தோன்றிய காணொளியை சீன அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
உலகளாவிய விமானச் சந்தையில் நுழைவதற்கு சீனாவின் அதிகரித்துள்ள அபிலாஷையின் முக்கிய அடையாளமாக சி919 விமானம் பார்க்கப்படுகிறது.
சீனா நடத்துகின்ற கோமேக் விமானத் தயாரிப்பு நிறுவனம் இந்த வெள்ளோட்டத்தை 2008 ஆம் ஆண்டில் இருந்தே திட்டமிட்டு வந்துள்ளது. ஆனால் அந்த முயற்சி மீண்டும் மீண்டும் தள்ளிப்போடப்பட்டு வந்தது.
பல்லாயிரக்கணக்கான பிரமுகர்கள், விமான தயாரிப்பு தொழிலாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் முன்னிலையில், வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்த விமானத்தின் வெள்ளோட்டத்தில் ஐந்து விமானிகளும், பொறியியலாளர்களும் மட்டுமே பயணித்துள்ளனர்.
இந்த விமானம் வழக்கமாக பறப்பதை விட 7 ஆயிரம் மீட்டர் தாழ்வாக, 3 ஆயிரம் மீட்டர் (9,800 அடி) உயரமே பறக்கும் என்றும், மணிக்கு ஏறக்குறைய 300 கிலோமீட்டர் (186 மைல்) வேகத்தில் பறக்கும் என்றும் இதன் வெள்ளோட்ட பயணத்தையொட்டி அரசு தொலைக்காட்சி தெரிவித்தது.
போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தின் 737 விமானம் மற்றும் த ஏர் பஸ் நிறுவனத்தின் ஏ320 விமானம் போன்றவற்றிற்கு நேரடி போட்டியாக சீனாவின் சி9119 விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சி919 விமானம் இரண்டு எந்திரங்கள் பொருத்தப்பட்ட 168 பேர் வரை ஏற்றி செல்லக்கூடிய விமானமாகும். இதில் இருக்கை வரிசைகளுக்கிடையே பயணிகள் நடக்கக் கூடிய நடை-இடைவெளி ஒன்று மட்டுமே இருக்கும்.
இது 4,075 முதல் 5,555 கிலோமீட்டர் (2,532 - 3452 மைல்) வேகத்தில் பறக்கும் சக்தியுடையது.
சீன ஊடகங்களின்படி, இதனை தயாரிப்பதற்கான செலவு சுமார் 50 மில்லியன் டாலராகும். போயிங் 737 மற்றும் ஏர்பஸ் ஏ320 விமானங்களை செய்வதற்கு ஆகின்ற செலவில் பாதியை விட குறைவான தொகை இதுவாகும்.
இந்த விமானம் இன்னும் இறக்குமதி செய்யப்படும் தொழில்நுட்பத்தையே சார்ந்துள்ளது. இந்த விமானத்தில் இருக்கும் எந்திரத்தை வழங்கும் சிஃஎப்எம் இன்டர்நேஷனல் என்கிற பிரெஞ்ச்-அமெரிக்க விநியோகஸ்தர்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
23 வாடிக்கையாளர்களுக்கு 500 விமானங்கள் தாயரித்து கொடுக்க ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வாடிக்கையாளர்களில் முக்கியமானோர் சீன விமான நிறுவனங்கள்தான். அதில் 'சீன ஈஸ்டன் ஏர்லைன்ஸ்' தான் மிக முக்கிய வாடிக்கையாளராகும்.
சி919 விமானத்திள் பாதுகாப்பு ஒழுங்குகளின் சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகளை ஐரோப்பிய விமானப் பயண நிர்வாகம் தொடங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் வெற்றிகரமாக அமைய இந்த முயற்சி மிக முக்கியமான ஒன்றாகும்.
சீன தலைவர் மா சேதுங்கின் மனைவி ஜியாங் ச்சிங் தனிப்பட்ட வகையில் ஒரு திட்டத்திற்கு ஆதரவு அளித்த 1970களில் இருந்து, சீனா தனக்கு சொந்தமான விமானத் தயாரிப்பு தொழில்துறையை கட்டியமைப்பதற்கு ஆசை கொண்டிருந்தது.
உலகளாவிய விமானச் சந்தையின் 20 ஆண்டுகள் மதிப்பு 2 டிரில்லியன் டாலர் (1.55 டிரில்லியன் பவுண்ட்) என்ற அளவில் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்திகளையும் நீங்கள் வாசிக்கலாம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்