You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
2018 இல் போட்டி விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தும் சீனா
விக்கிப்பீடியாவுடன் போட்டியிடும் வகையில், அடுத்த ஆண்டு தேசிய என்சைக்ளோபீடியாவின் ஒரு பதிப்பை சீனா வெளியிடுகிறது. இதில், தலா 1,000 வார்த்தைகள் கொண்ட 3,00,000 உள்ளீடுகள் இருக்கும்.
இருபதாயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் இந்த திட்டத்திற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். .
தன்னார்வலர்களால் வெளிப்படையாக திருத்தப்படக்கூடிய விக்கிபீடியா போலல்லாமல், அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிஞர்களால் சீனாவின் தேசிய என்சைக்ளோபீடியா உருவாக்கப்படும்.
விக்கிபீடியாவை சீனாவில் அணுகமுடியும் என்றாலும் அதன் சில உள்ளடக்கங்கள் தடை செய்யப்பட்டிருக்கிறது.
சீனாவின் தேசிய என்சைக்ளோபீடியா "ஒரு புத்தகம் அல்ல, ஆனால் கலாச்சாரத்திற்கான பெருஞ்சுவர்" என்று இந்தத் திட்டத்தை பற்றி சீன புத்தகம் மற்றும் சஞ்சிகைகள் விநியோக சங்கத் தலைவரும், இந்தத் திட்டத்தின் தலைமை நிர்வாகியுமான யாங் முழி கூறுகிறார்.
விக்கிப்பீடியாவை ஒரு போட்டியாளராக பட்டியலிடும் திரு யாங், "பொதுத்தளம் மற்றும் சமுதாயத்தை" வழிநடத்த சொந்த தளத்தை உருவாக்க, சீனா சர்வதேச அழுத்தத்தை எதிர்கொண்டதாக கூறினார்.
சீனாவின் என்சைக்ளோபீடியா (சீனக் கலைக்களஞ்சியம்), 1993 ஆம் ஆண்டு முதன்முதலில் காகித வடிவில் வெளியிடப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் அறிஞர்களின் ஆதரவுடன், இரண்டாவது பதிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால், அரசாங்க செலவில் மேற்கொள்ளப்பட்ட சில உள்ளீடுகள் அரசியல் நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டது அல்லது திரிக்கப்பட்டது என விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்.
என்சைக்ளோபீடியாவை ஆன்லைனில் வெளியிடும் திட்டத்திற்கு 2011 ஆம் ஆண்டே ஒப்புதல் வழங்கப்பட்டாலும், பணிகள் அண்மையில் தான் தொடங்கப்பட்டது.
ஆன்லைன் என்சைக்ளோபீடியாக்களை அறிமுகப்படுத்தியிருக்கும் பைடு, க்யூஹு 360 போன்ற உள்ளூர் ஆன்லைன் நிறுவனங்கள் மற்றும் பரந்த தளத்தைக் கொண்ட விக்கிபீடியாவுடன், சீன அரசின் தேசிய என்சைக்ளோபீடியா நேரடியாக போட்டியிடும்.
தற்போது, சீனாவின் பிரதான நிலப்பகுதியில் உள்ள பயனர்கள் விக்கிபீடியாவின் சில உள்ளடக்கங்களைப் படிக்கலாம், ஆனால் தலாய் லாமா மற்றும் அதிபர் ஜி ஜின்பிங் போன்ற முக்கிய தேடல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
"சீனாவில் இருக்கும் தகவல் தேவையானது, வழக்கமான இணையதளத் தடைகளை மீறும் கருவிகளைக் கொண்டு விக்கிபீடியாவை பயன்படுத்த மக்களை தூண்டுகிறது. ஒரு சர்வாதிகார நாட்டிற்கு இது நல்லதல்ல" என்று ஆக்ஸ்ஃபோர்ட் இண்டர்நெட் இணையதள கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சி மாணவர் தஹா யஸ்ஸேரி, பிபிசியிடம் தெரிவித்தார்.
"எனவே, இந்த முன்முயற்சியானது, அரசு அங்கீகாரம் பெற்ற உள்ளடக்கத்திற்கு அதிக பயனர்களை ஈர்க்கும்."
அவரது சக ஊழியர் ஜோஸ் ரைட்டின் கருத்துப்படி, "உள்ளூர் பயனர்கள் விரும்பும் ஒரு பிரத்யேகமான 'சீன அனுபவத்தை' இந்தத் தளத்தால் வழங்க முடியும்"
'உயர்-தர' ஆசிரியர்கள்
கடந்த ஆண்டு ஒரு பிரதான நிலப்பகுதி நாளிதழில் யாங் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், சீனாவில் விக்கிபீடியா "பரிச்சயமானதாக" இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இருந்தாலும், "எங்களிடம் மிகப்பெரிய, உலகிலேயே சிறந்த ஆசிரியர் குழு உள்ளது" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
"எங்கள் இலக்கு விக்கிப்பீடியாவின் இடத்தை பிடிப்பதல்ல, அதை முந்துவது"
துருக்கி நாட்டு அதிகாரிகள், எந்தவித காரணமும் தெரிவிக்காமல், கடந்த வாரத்தில், விக்கிப்பீடியாவை அணுகுவதை தடை செய்தார்கள்.
விக்கிப்பீடியாவில் இருக்கும் தகவல்களை விட மேம்பட்ட தகவல்களை தருவத்தாக சொல்லும் ரஷ்யா, விக்கிபீடியாவின் மாற்று பதிப்பிற்கான திட்டங்களை 2014 ஆம் ஆண்டு அறிவித்தது.
இந்த செய்திகளையும் நீங்கள் விரும்பலாம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்