அபூர்வ செயலாக சீனாவை விமர்சித்துள்ள வடகொரியாவின் அரசு ஊடகம்

தங்களது பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதன் மூலம், சீனாவை விமர்சிக்கும் மிக பூர்வநடவடிக்கையை வடகொரியாவின் அரசு ஊடகம் எடுத்துள்ளது.

வடகொரியாவால் அணுஆயுத சோதனை ஆபத்து இருப்பதாக சீன ஊடகங்கள் மிகைப்படுத்துவதாக, அரசால் நடத்தப்படும் கொரிய மைய செய்தி ஊடகம் (கேசிஎன்ஏ ) மே 3-ஆம் தேதியன்று, குற்றம்சாட்டியது.

இதனிடையே, வடகொரியாவில் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளை செய்வதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாக வடகொரிய தினசரியான மின்ஜு ஜோசனில் பதிவான ஒரு கட்டுரை எச்சரித்துள்ளது.

சீனா மீதான விமர்சனம்

கேசிஎன்ஏ கட்டுரையை , சீனா மீதான ஆபூர்வமான மற்றும் கடுமையான விமர்சனம் என்று அப்பிராந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.

சீனா குறித்து நேரடியான மற்றும் அபூர்வமான கண்டனத்தை வடகொரியா தெரிவித்துள்ளதாக தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்பு, சீனாவை விமர்சிக்கும் போது ''அண்டை நாடு'' என்ற வார்த்தையை மட்டுமே வடகொரியா பயன்படுத்தும்.

பிப்ரவரி மாதத்தில், அமெரிக்காவின் தாளத்துக்கு ஏற்ப சீனா நடனமாடுகிறது என்று கேசிஎன்ஏ சீனா குறித்து குறிப்பிட்டது. ஆனால், அப்போது அண்டை நாடு என்று மட்டுமே சீனாவை கேசிஎன்ஏ குறிப்பிட்டது.

சீன ஊடகங்கள், குறிப்பாக `பீப்பிள்ஸ் டெய்லி` மற்றும் `குளோபல் டைம்ஸ்` செய்தித்தாள்கள், கொரிய மக்கள் ஜனநாயக குடியரசு (டிபிஆர்கே) - சீனா உறவுகளை குறைத்து மதிப்பிடும் வகையில் பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவித்ததாக கேசிஎன்ஏ மேலும் தெரிவித்தது.

கேசிஎன்ஏ ஊடக வர்ணனைக்கு பதில் கொடுக்கும் வகையில், சீனாவின் தேசியவாத செய்தித்தாளான `டெய்லி குளோபல் டைம்ஸ்` செய்தித்தாளில் வெளியான ஒரு கட்டுரை கருத்து தெரிவிக்கையில், ''வடகொரியாவுடன் பதிலுக்கு பதில் விவாதம் நடத்த வேண்டிய தேவை சீனாவுக்கு இல்லை'' என்று தெரிவித்தது.

''அதிகார நிலையிலோ அல்லது கீழ்மட்ட நிலையிலோ எதுவாக இருந்தாலும், தனது நிலைப்பாட்டை வடகொரியாவுக்கு சீனா மிகவும் தெளிவாக தெரிவிக்க வேண்டும். வடகொரியாவின் அச்சங்கள் குறித்து தனது நிலைப்பாட்டை சீனா எடுத்துரைக்க வேண்டும். ஆனால், அதே சமயம், மீண்டும் ஒருமுறை வடகொரியா அணுஆயுத சோதனை நடத்தினால், முன்னெப்போதும் இல்லாத வகையில் சீனா நடந்து கொள்ளும் என்பதையும் சீனா வடகொரியாவுக்கு தெளிவுபடுத்த வேண்டும்'' என்று அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த வடகொரிய ஊடக கட்டுரை

இந்நிலையில், மே 3-ஆம் தேதியன்று மின்ஜு ஜோசனில் வெளியான அக்கட்டுரை, கொரிய மக்கள் ஜனநாயக குடியரசின் (டிபிஆர்கே) ராணுவத்தையும், மக்களின் சக்தியை தவறாக குறைத்து கணிக்க வேண்டாம் என்று அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க வலைத்தளமான 38 நார்த்தை மேற்கோள் காட்டியுள்ள தென் கொரிய செய்தி ஊடகமான `யோன்ஹாப்` ஊடகம், வடகொரியா அணுஆயுத சோதனை நடத்திய இடத்தில் தொடர்ந்து செயல்பாடுகள் இருந்து வருவதாக கூறியுள்ளது.

வடகொரியா அணுஆயுத சோதனை நடத்திய இடத்தில், சோதனை சுரங்கப்பாதையில் நீர் இறைப்பது மற்றும் சிலர் வாலிபால் விளையாடுவது போன்ற நடமாட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் காணப்படுவதை அண்மையில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் காண்பித்துள்ளன.

வடகொரியாவுக்கு கியூபா ஆதரவு

அமெரிக்காவுக்கு எதிரான கூட்டு முன்னணியில், வடகொரியாவுக்கு கியூபா ஆதரவளித்துள்ளதை வடகொரிய அரசு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொரியாவின் தொழிலாளர் கட்சிக்கும், அந்நாட்டு மக்களுக்கும் அவர்களின் தர்ம போராட்டத்தில் கியூபா துணை நிற்கும் என்றும், அமெரிக்காவுக்கு எதிரான கூட்டு முன்னணியில் வடகொரியாவுக்கு துணையாக கியூபா செயல்படும் என்று கியூபாவின் தலைவர் ரால் காஸ்ட்ரோ தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக, நேற்று தனது ஆங்கில செய்தி அறிக்கையில் கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், ராஜீய ரீதியாக வடகொரியா தனிமைப்படுவது கடுமையாக ஆகி வரும் சூழலை மாற்றும் முயற்சியில் , கியூபாவுடனான தனது உறவுகளை வடகொரியா சுட்டிக்காட்டுவதாக தென் கொரிய செய்தி ஊடகமான யோன்ஹாப் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, தலைநகர் பியோங்யாங்கில் உள்ள மங்கோலிய தூதரகத்தில் உள்ள அதிகாரிகளுடன் ஒரு நட்பு ரீதியான சந்திப்பை வடகொரிய வெளிநாட்டு அமைச்சகம் நடத்தியதாக கேசிஎன்ஏ மே 3-ஆம் தேதியன்று குறிப்பிட்டுள்ளது.

( பிபிசி மானிட்டரிங் பிரிவின் கட்டுரை)

தொடர்புடைய கட்டுரைகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்