You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தொழிலதிபர் ஜிந்தல் மூலமாக ஷெரீஃபுக்கு ரகசிய செய்தி அனுப்பினாரா மோதி?
இந்திய எஃகுத் துறையில் பிரபல தொழிலதிபரான ஜிந்தால், புதன்கிழமையன்று பாகிஸ்தானில் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீஃபை சந்தித்ததை அடுத்து, விவாதங்கள் அனல் பறக்கின்றன. விவாதங்களின் சூட்டை தணிப்பதற்காக, ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ் டிவிட்டரில் விளக்கமளித்தார்.
''ஜிந்தலும், பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் பழைய நண்பர்கள். இரு நண்பர்கள் சந்திந்துக் கொண்டதைத் தவிர, இதில் வேறு எந்த இரகசியமும் இலை. எனவே, இதை பெரிதாக பேசவேண்டிய அவசியம் இல்லை, நன்றி'' என்று மரியம் தனது டிவிட்டர் செய்தியில் வெளியிட்டிருக்கிறார்.
திரைக்குப் பின்னால் ராஜதந்திரம் என்று இந்த சந்திப்பு பற்றி பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் கசூரி, பாகிஸ்தான் நாளிதழ் டானில் கூறியிருக்கிறார். திரைக்கு பின்னால் நடக்கும் சந்திப்புகளால் சில நல்ல முடிவுகள் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மற்றொரு புறம், இந்த சந்திப்பு ரகசியமாக வைக்கப்பட்டிருந்த்தாக, பாகிஸ்தான் எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றன.
கிரிக்கெட்டில் இருந்து அரசியல் களத்திற்கு இறங்கியிருக்கும் இம்ரான் கானின் பாகிஸ்தான் தஹ்ரீஃப்-ஏ-இன்சாஃப் கட்சி, இந்த சந்திப்பு குறித்த விவரங்களை வெளியிடவேண்டும் என்று பஞ்சாப் சட்டமன்றத்தில் ஒரு கோரிக்கையை வைத்துள்ளது.
இஸ்லாமாபாதில், பேநசீர் புட்டோ சர்வதேச விமானநிலையத்தில் வந்திறங்கிய ஜிந்தலை வரவேற்க நவாஸ் ஷெரீஃபின் மகன் ஹுசைன் நவாசும், மகள் மரியத்தின் கணவர் ராஹில் முனீரும் நேரடியாக சென்றிருந்தனர்.
மரியத்தின் டிவிட்டர் செய்திக்கு பிறகும் சலசலப்பு அடங்கவில்லை. மரியத்தின் டிவிட்டருக்கு எதிர்வினையாக ஈர்ம் அஜீம் ஃபாரூகி கேட்கிறார், ''குல்பூஷன் ஜாதவை விடுவிக்கவேண்டும், இல்லாவிட்டால் அதன் விளைவுகளை அனுபவிப்பீர்கள் என்ற இரகசிய செய்தியை பிரமதர் மோதி, நவாஸ் ஷெரீஃபுக்கு அனுப்பியிருக்கிறாரா? ''
மரியத்தின் டிவிட்டர் செய்திக்கு பலர் கோபத்துடன் பதிலளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க மரியம் யார் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
மொஹம்மத் லதீஃப் கேஹர், மரியத்தின் டிவிட்டருக்கு பதிலாக, ''நீங்கள் யார்? பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சரா? இந்த விஷயம் குறித்து நீங்கள் ஏன் டிவிட் செய்கிறீர்கள்? அரசு ஏன் இந்த விஷயத்தில் மெளனமாக இருக்கிறது? இந்த ரகசிய சந்திப்புக்கு அர்த்தம் என்ன? '' என்று தனது டிவிட்டரில் கேள்வி எழுப்புகிறார்.
இந்த சந்திப்பு குறித்து பாகிஸ்தான் ஊடகங்களிலும் பரபரப்பு நிலவுகிறது.
ஜிந்தால் விசா நடைமுறைகளை மீறியிருப்பதாக, த எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் என்ற பாகிஸ்தான் நாளிதழ் குற்றம் சாட்டுகிறது. ''இரு நாடுகளுக்கு இடையேயான விசா கட்டுப்பாடுகளை ஜிந்தல் மீறியுள்ளார்'' என்று குறிப்பிடுகிறது அந்த நாளிதழ்.
இந்திய தொழிலதிபர் ஜிந்தல் பாகிஸ்தான் வந்ததும், நேராக நவாஸ் ஷெரீஃபை சந்திப்பதற்காக சென்றுவிட்டார். ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட விசாவில், மலைப் பிரதேசத்திற்கு செல்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பாகிஸ்தான் மற்றும் இந்திய விசாக்களில், எந்த இடத்திற்கு செல்ல அனுமதி என்பது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். விசாவில் குறிப்பிடப்படாத இடத்திற்கு போவதற்கு இரண்டு நாட்டை சேர்ந்த பயணிகளுக்கும் அனுமதியில்லை என்றும் அந்த நாளிதழ் கூறுகிறது.
மேலும், 2017, ஏப்ரல் 25 ஆம் தேதியன்று பாகிஸ்தான் வருவதற்கு 769903 என்ற எண்ணிட்ட விசா ஜிந்தலுக்கு வழங்கப்பட்டது, அதன்படி, இஸ்லாமாபாத் மற்றும் லாகூருக்கு மட்டுமே அவர் செல்லமுடியும்.
இந்த சந்திப்பு பற்றிய விவரங்களை பொதுவெளியில் வெளியிடவேண்டும் என்று பஞ்சாப் சட்டமனறத்தில் மஹ்மூத் ராஷீத் கோரியிருப்பதாக கூறும் டான் நாளிதழ், ஜிந்தலுடனான, பாகிஸ்தான் பிரதமரின் சந்திப்பு, இரு நாடுகளுக்கு இடையிலான தற்போதைய பதட்டத்தை குறைக்கும் என்ற கோணத்தில் பார்ப்பதாக கூறுகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு ஜிந்தல் நெருக்கமானவராக அறியப்படுபவர் என்பதைச் சுட்டிக்காட்டும் டான், எனவே தான் இந்த சந்திப்பு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட திடீர் பயணத்தின் போது, அவருடன் சென்ற பிரதிநிதிகள் குழுவில் ஜிந்தலும் இடம்பெற்றிருந்ததையும் நினைவூட்டுகிறது அந்த நாளிதழ்.
தற்சமயம், இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீர் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. அண்மையில் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த ஜம்மு-காஷ்மீர் மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி, காஷ்மீரில் நிலவும் பதற்றத்தை குறைப்பதற்காக அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்தப் பின்னணியில் நவாஸ் ஷெரீஃப்-ஜிந்தல் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இவையும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்